
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள பாவனா, தற்போது `அனோமி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டியில், ‘நான் எதையும் திட்டமிட்டு செய்வது இல்லை. என் வாழ்க்கையில் எல்லாமே தானாகவே நடந்தது. திடீரென்று மலையாளத்தில் இருந்து விலகி இருக்கலாம் என்று தோன்றியது. அது அந்த நேரத்துக்கான எண்ணமாக இருந்தது. அது ஒன்றே எனக்கு வசதியாக இருந்தது. `ஆதம் ஜோன்’ என்ற படத்துக்கு பிறகு எனக்கு திருமணம் நடந்தது. கன்னட தயாரிப்பாளர் நவீனை காதல் திருமணம் செய்த பிறகு நான் பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன்.
அம்மாவை பார்க்க கேரளாவுக்கு வந்தாலும், நான் இங்கு தங்கி இருக்கவில்லை என்பதும், இங்கு நடப்பது என்ன என்பதும் அறியாமல் இருப்பது நிம்மதி அளித்தது. எனவே, ஒரு நீண்ட இடைவெளியை நானாகவே விருப்பப்பட்டு எடுத்தேன். எனினும், மலையாள திரையுலக நண்பர்கள் தொடர்ந்து எனக்கு போன் செய்து நடிக்க சொன்னார்கள். ஆஷிக் அபு, பிருத்விராஜ் சுகுமாரன், ஜெயசூர்யா, மம்மூட்டி ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டேன். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. `மலையாளத்தில் இருந்து விலகிய நீ, இதன்மூலம் என்ன சாதிக்க போகிறாய்?’ என்று கேட்டபோது என்னிடம் பதில் இல்லை.
2023ல் மீண்டும் மலையாளத்தில் நடிக்க வந்தேன். கொரோனா லாக்டவுனில் ஓடிடி தளங்கள் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அதில்தான் எனது மலையாள ரீ-என்ட்ரி படம் ரசிகர்களால் பெரிதும் கவனித்து பாராட்டப்பட்டது’ என்றார்.

