ஐதராபாத்: தன்னை தொட முயன்ற நடிகரை பூஜா ஹெக்டே கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த தகவல் வைரலாகி பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ‘காஞ்சனா 4’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மானின் 41வது படம் மற்றும் இந்தியில் ‘ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா தா’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்திய நடிகையான பூஜா ஹெக்டே அளித்த பேட்டி ஒன்றில் பான் இந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் எல்லை மீறி நடந்துகொண்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை’’ என பூஜா கூறியுள்ளார். பூஜா ஹெக்டேயின் இந்த பேட்டி நேற்று முதல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

