
கடந்த 2016ல் கன்னடத்தில் ‘கிரேஸி பாய்’ என்ற படத்தில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத், தமிழில் ‘பட்டத்து அரசன்’, ‘மிஸ் யூ’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கார்த்தியுடன் ‘சர்தார் 2’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’ ஆகிய படங்களில் நடிக்கிறார். ஒரே நேரத்தில் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருவது குறித்து அவர் கூறுகையில், ‘இப்போது எனக்கு தமிழ் ஓரளவு புரியும். ஆனால், அதை கற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. காரணம், நான் தும்கூரை சேர்ந்தவள்.
எனது தாய்மொழி கன்னடம். எனக்கு தமிழிலோ, தெலுங்கிலோ பேசும் நண்பர் வட்டாரம் கிடையாது. நிறைய தெலுங்கு படங்கள் பார்த்ததால், தற்போது தெலுங்கில் சரளமாக பேசுவேன். பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது, நடிகை என்பதை விட, ஒரு தனி நபராக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அது என்னை வலிமையாகவும், அர்ப்பணிப்புடன் செயல்பட வைக்கிறது’ என்றார்.

