பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டாஸ் வழக்கு!: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை கே.கே. நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துக்கொண்ட புகாரிலும் காவல்துறை அவரை கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்தது. அவரது லேப்டாப்பில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். இதை தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மற்றும் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடைபெற்றுவந்த  நிலையில், கடந்த ஜூன் 25ம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் 2015ம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் அளித்துள்ளார். ஆனால் அப்போது ஆன்லைன் வகுப்புகள் நடக்கவில்லை. தாமதமாக அளிக்கப்பட்ட புகார், செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோதம். எனவே தந்து கணவர் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில்  தமிழக அரசும், சென்னை மாநகர காவல் ஆணையரும் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்….

The post பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டாஸ் வழக்கு!: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: