வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்; பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்: 2,000 விசைப்படகுகள் கரைநிறுத்தம்

ராமேஸ்வரம்: பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், பாம்பன் துறைமுகத்தில் நேற்று இரவு ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த  தாழ்வுநிலை வலுப்பெற்று இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம்  மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள்  கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடலில் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் நேற்று இரவு ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு, கரையோர மீனவர்களுக்கும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் நேற்றிரவு முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்; பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்: 2,000 விசைப்படகுகள் கரைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: