விபிஎப் கட்டணத்தை கட்டுவது யார்? தயாரிப்பாளர்கள் திடீர் மோதல்

தியேட்டரில் திரைப்படம் ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை செலுத்துவது யார் என்பதில் தயாரிப்பாளர்கள் இடையே திடீர் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டரில் ஒரு படத்தை திரையிட விபிஎப் எனும் ஒளிபரப்பு கட்டணத்தை கியூப் என்கிற டிஜிட்டல் நிறுவனம் வசூலிக்கிறது. ஒரு படத்துக்கு ஒரு வாரத்தில் ரூ.10 ஆயிரம் வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு படம் எத்தனை வாரங்கள் தியேட்டரில் ஓடுகிறதோ, அத்தனை வாரத்துக்கும் (வாரம்தோறும்) இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். டிஜிட்டலில் படங்களை திரையிட ஆரம்பித்தது முதல், இந்த கட்டணத்தை தயாரிப்பாளர்கள்தான் செலுத்தி வருகிறார்கள். இப்போது திடீரென இந்த கட்டணத்தை தியேட்டர் அதிபர்கள்தான் கட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்துகிறார்கள். இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். அதன்படி சில நாட்கள் புதிய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில்தான் தயாரிப்பாளர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்திருக்கிறது. படம் எடுத்து, அதை வெளியிட தயாராகி வந்த தயாரிப்பாளர்கள், மற்ற தயாரிப்பாளர்களின் முடிவால் அதிருப்தி அடைந்தனர். ‘விபிஎப் கட்டண விவகாரம் காரணமாக, தங்களது படத்தை நிறுத்தினால், வாங்கிய கடனுக்கு வட்டி கூடிக்கொண்டே போகும், போட்ட முதலீடும் முடங்கும் நிலை ஏற்படும்’ என தங்களது நெருக்கடி நிலையை விளக்கினர். ஆனால், மற்ற தயாரிப்பாளர்கள் பலரும் படங்களை வெளியிட அனுமதி தர முடியாது என்பதில் தீர்மானமாக இருந்தனர்.

இதனால் விபிஎப் கட்டணம் செலுத்த தயாரான ஒரு தரப்பு, கட்டணம் செலுத்த மறுத்த ஒரு தரப்பு என தயாரிப்பாளர்கள் இடையே இரு தரப்பு உருவாகி, மோதல் போக்கு ஏற்பட்டது. படங்களை வெளியிடாமல் இதுபோல் நிறுத்தி வைத்தால் அதனால் தயாரிப்பாளர்களுக்குதான் முதல் நஷ்டம் என படம் எடுத்த தயாரிப்பாளர்கள் புலம்பினர். தொடர்ந்து எதிர்ப்பு அதிகமானது. ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் விபிஎப் கட்டணத்தை செலுத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி தற்போதைக்கு அடுத்த ஆண்டு மார்ச் வரை விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்களே செலுத்த முடிவு செய்துள்ளனர். விபிஎப் கட்டண விவகாரத்தில் தயாரிப்பாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: