×

திரை இசைக்கு சேவை வரி செலுத்துமாறு ஏ.ஆர்.ரகுமானுக்கு அளித்த நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் தடை

திரைப்படங்களுக்கு இசைக்கப்படும் இசைக்கு சேவை வரி செலுத்த வேண்டும் என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜிஎஸ்டி வரி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரோஜா, எந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி மட்டுமல்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசை அமைத்து வெற்றிக்கொடி நாட்டியவர். இவரின் இசை சேவைக்காக ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரைப்படங்களுக்கு அவர் இசைக்கும் இசையை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கும் பணிக்கு சேவை வரி கட்ட வேண்டும் என்று கடந்த 2017 அக்டோபர் 17ம் தேதி ஜி.எஸ்.டி வரி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திரைப்படங்களுக்கு இசை அமைப்பது தயாரிப்பாளர்களுடன் செய்யும் ஒப்பந்தத்தின் அடிப்படையானது. இந்த இசைக்கான காப்புரிமை தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும். இசையின் முழு உரிமையாளரும் தயாரிப்பாளர்கள்தான்.நிரந்தரமாக இசையை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது சேவையாகாது. தற்காலிகமாக காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு சேவை வரியிலிருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. இசையை திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்காக கம்போஸ் செய்யும் இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி தொகை எதுவும் தரப்படுவதில்லை.

மனுதாரர் இசையை விற்பனை செய்யவில்லை. ஜி.எஸ்.டி வரி ஆணையர் இசை பணியை தவறாக எடுத்துக்கொண்டு இசையமைப்பாளர் சேவை வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜி.எஸ்.டி. ஆணையரின் நோட்டீசுக்கு மார்ச் 4ம் தேதிவரை இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

Tags : AR Raman ,
× RELATED திரை இசைக்கு சேவை வரி செலுத்துமாறு...