குன்றத்தூர் வட்டத்தில் ராட்சத மோட்டார் மூலம் தேங்கிய மழைநீர் அகற்றம்: அமைச்சர்கள் ஆய்வு

காஞ்சிபுரம்: குன்றத்தூர் வட்டத்தில் ராட்சத மோட்டார் மூலம்  தேங்கிய மழைநீர் அகற்றும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர்   ஆகியோர் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழையின்காரணமாக குன்றத்தூர் வட்டத்தில்  தாழ்வான பகுதிகளான கொளப்பாக்கம், பரணிபுத்தூர், மாங்காடு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,துரிதகதியில் மழைநீரை அப்புறப்படுத்தவும், மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அப்போது, அமைச்சர் நேரு கூறியதாவது, ‘‘இந்த பகுதியில் தேங்கிய மழைநீர் வடிகால் மூலம் அடையாறு ஆற்றுக்கு சென்றடைகிறது. வடிகால்வாய்கள் உயரம் குறைவாகவும், சிறியதாகவும் இருப்பதால் மழைநீர் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. கொளப்பாக்கம், பரணிபுத்தூர் மற்றும் மாங்காடு குடியிருப்பு தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.  தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.ஆய்வின்போது, பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இல.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post குன்றத்தூர் வட்டத்தில் ராட்சத மோட்டார் மூலம் தேங்கிய மழைநீர் அகற்றம்: அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: