காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை 3 நாட்களுக்கு பிறகு மழை ஓய்ந்து நேற்றுசூரியனை பார்க்க முடிந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. அதே நேரத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நேற்று) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இது வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக-கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ம் தேதி (நாளை) முதல் 16ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14ம் தேதி (நாளை) லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 16ம் தேதி தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.  கொள்ளிடம் 32 செ.மீ, சிதம்பரம் 31 செ.மீ, அண்ணாமலை நகர் (கடலூர்) 28, சிதம்பரம் ஏடபிள்யூஎஸ் 27 செ.மீ, புவனகிரி 21 செ.மீ, காட்டுமன்னார் கோயில் (கடலூர்) தலா 19 செ.மீ. தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 18 செ.மீ. மயிலாடுதுறை, மணல்மேடு (மயிலாடுதுறை), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 16, காங்கேயம் (திருப்பூர்) 15, பொன்னமராவதி (புதுக்கோட்டை), வெள்ளகோவில் (திருப்பூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 13, மிலம்பட்டி (கரூர்), அரவக்குறிச்சி (கரூர்) தலா 12 செ.மீ, உளுந்தூர்பேட்டை, கரையூர் (புதுக்கோட்டை) 11 செ.மீ. வேடசந்தூர், காரைக்கால், திருப்பூர் தலா 11 செ.மீ, விருதாச்சலம், வானூர், பரமத்தி வேலூர், செய்யூர், பண்ருட்டி தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: