×

கொரில்லா - விமர்சனம்

ஜீவாவுக்கு எல்லாமே பணம்தான். சதீஷுக்கு பார்த்துக் கொண்டு இருந்த வேலை போனதால் பணப் பிரச்னை. விவேக் பிரசன்னாவுக்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஆசை. அதற்கு படம் தயாரிக்க பணம் தேவை. மதன்குமாருக்கு விவசாயத்தில் கடன் பிரச்னை. இப்படி நால்வருக்கும் பணத்தை மையப்படுத்திய அத்தியாவசிய பிரச்னை. மெடிக்கல் ஷாப்புகளில் திருடிக் கொண்டு வந்த மருந்துகளை வைத்து போலி டாக்டராக வலம் வரும் ஜீவா, ஆபத்தில் இருந்து சிம்பன்சி ஙோவை காப்பாற்றுகிறார். அது அவருடனேயே ஒட்டிக்கொள்கிறது.

நால்வரும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு திட்டம் தீட்டி, வங்கியில் கொள்ளையடிப்பதற்கு செல்கின்றனர். அங்குள்ள பணியாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, தங்களை சுற்றிவளைத்து பிடிக்க வந்த போலீசாரிடம் 20 கோடி ரூபாய் பணம் கேட்கின்றனர். இந்நிலையில் ஜீவா, விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட எச்சரிக்கிறார். அடுத்து போலீசார் என்ன செய்தனர்? 20 கோடி ரூபாய் பணம் கிடைத்ததா? ஜீவா கோஷ்டி வங்கியில் இருந்து தப்பித்ததா என்பது மீதி கதை.

முழுநீள காமெடி படமாகவே கொண்டு செல்வதா? விவசாயிகள் பிரச்னைகளை மையப்படுத்துவதா என்ற குழப்பம் இயக்குனர் டான் சான்டிக்கு ஏற்பட்டாலும், எப்படியோ இழுத்துப் பிடித்து கதையை தொய்வு இல்லாமல் சொல்லிவிடுகிறார். இதுபோன்ற ‘லகலக’ கேரக்டர் ஜீவாவுக்கு லட்டு மாதிரி. சிம்பன்சியுடன் சேர்ந்து சிரிக்க வைக்கிறார். ஷாலினி பாண்டேவுடன் காதல் மொழி பேசுகிறார். வங்கியில் கொள்ளை அடிக்கும் பதற்றத்தையும், போலீசிடம் காட்டும் பந்தாவையும் கடைசிவரை தொடர்கிறார்.

ஷாலினி பாண்டே ஏதோ வருகிறார், போகிறார். யோகி பாபுவிடம் சிம்பன்சி ஙோ செய்யும் குறும்புகள் கலகலப்பூட்டுகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா, சாமிநாதன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் அவரவர் பங்குக்கு சிரிக்க வைக்கின்றனர். படத்தின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது, ஆர்.பி.குருதேவ்வின் கேமரா. காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை அமைத்துள்ளார், சாம் சி.எஸ். மெசேஜ் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே விவசாயிகள் பிரச்னை திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றினாலும், காமெடிக்கு நல்ல உத்தரவாதம் தருகிறது படம்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!