×

தி கர்ஸ் ஆஃப் வீபிங் உமன்

ஹாலிவுட் பேய் படங்களில், கதை எப்போதுமே ஒரு வரியில்தான் இருக்கும். ஆனால், அதன் மேக்கிங் பிரமிக்க வைக்கும். கான்ஜூரிங், அனபெல்லா போன்ற படங்கள் அந்த ரகம். அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. கான்ஜூரிங் படத்தின் 3ம் பாகத்தை இயக்கி வரும் மைக்கேல் சாவஸ் இயக்கியுள்ளார். பல நூறு வருடங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் வாழ்ந்த அழகு தேவதை, லா லொரோனா. அந்த கிராமத்துக்கு வந்த ஒரு இளவரசன், அவளுடைய அழகில் மயங்கி, பிறகு அவளையே திருமணம் செய்துகொள்கிறான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. அதற்கு பிறகுதான் அந்த இளவரசனுக்கு பல மனைவிகள் உள்ள ரகசியம் லா லொரோனாவுக்கு தெரிகிறது. நமது ஊரில் புருஷன் மீது இருக்கும் கோபத்தில் பிள்ளையைக் கொல்வது போல், இளவரசன் மீது இருக்கும் கடும் கோபத்தில், அவனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்து கொல்கிறாள். பிறகு அந்த சோகத்தை தாங்க முடியாமல், அவளும் நீரில் மூழ்கி இறக்கிறாள். அன்று முதல் அவள் கடவுளுக்கும் கட்டுப்படாத தீய சக்தியாக வளர்கிறாள். குழந்தைகளைக் கொன்று குவிப்பதையே தனது வேலையாக வைத்திருக்கிறாள்.

சில நூறு வருடங்கள் கழித்து, 1973ல் அவள் மீண்டும் வருகிறாள். ஒரு வீட்டிலுள்ள இரண்டு குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்கிறாள். உடனே அதை கவனித்துவிடும் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்கும் பெண் அன்னா டட்டி கரிக்கா, குழந்தைகளை காப்பாற்றுகிறாள். இதனால், அவளுடைய கோபம் அன்னா டட்டி கரிக்காவின் குழந்தைகள் மீது திரும்புகிறது. கொடூரமான தீய சக்தியிடம் இருந்து தன் குழந்தைகளை அன்னா டட்டி கரிக்கா எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை. ஒருசில கேரக்டர்கள், ஒரு வீடு, ஒரு பேய் ஓட்டும் பாதிரியார் என்ற வழக்கமான பேய் பட பார்முலா என்றாலும், இதில் தாய்ப்பாசம், குழந்தைகளின் தைரியம், உள்ளூரைச் சேர்ந்த பேய் விரட்டுபவர்களின் சக்தி என்று, புதிதாக சில விஷயங்களை சேர்த்து மிரட்டி இருக்கின்றனர். அசைந்தாடும் சாய்வு நாற்காலி, தானாகவே திறந்து மூடுகின்ற கதவு, படபடக்கும் திரைச்சீலைகள், சக்தி வாய்ந்த சிலுவை என்று, ஒரு ஹாரர் படத்துக்கான வழக்கமான பார்முலாஎல்லாமே இதில் இருக்கிறது. ஆனால், விறுவிறுப்பான திரைக்கதை, படத்தை சீட் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்து விடுகிறது. ஹாலிவுட் பட ரசிகர் களுக்கு இது பேய் படையல்.

Tags :
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்