×

மெஹந்தி சர்க்கஸ்

1990 காலக் கட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள பூம்பாறை கிராமத்துக்கு, வட நாட்டில் இருந்து மெஹந்தி சர்க்கஸ் என்ற கம்பெனி வருகிறது. அந்த சர்க்கஸின் ஸ்டார் அட்ராக்‌ஷன், மெஹந்தி (ஸ்வேதா திரிபாதி). கத்தி வீச்சு காட்சிக்கு தனது உயிரைப் பணயம் வைத்து நிற்பவர். முதலாளி சன்னி சார்லஸின் ஒரே மகள். ஊரில், ராஜகீதம் என்ற கேசட் கடை நடத்தும் இளையராஜாவின் தீவிர ரசிகன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு, அங்குள்ள சர்ச் பாதர் வேல.ராமமூர்த்தி உதவியுடன் இளம் காதலர் களுக்கு உதவி செய்வது தான் மிகப் பெரிய வேலை. பல இளம் ஜோடிகளின் காதலை சேர்த்து வைத்த அவருக்கு, திடீரென்று மெஹந்தியின் மீது காதல் வருகிறது.

ரங்கராஜின் அன்பில் மெஹந்தி கரைகின்றாள். பிறகு அவரது தந்தையின் மூலம் காதலுக்கு பிரச்னை ஏற்படுகிறது. சர்க்கஸில் தன் மகளை போர்டு முன் நிற்க வைத்து, அவரைச் சுற்றி கத்திகளை எறிந்தால் மட்டுமே இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பேன் என்கிறார். ‘வனத்துல மேய்ந்தாலும், இனத்துக்கு வந்திடணும்’ என்று, சாதி வெறியுடன் பேசுகிறார், ரங்கராஜின் தந்தை மாரிமுத்து. பிறகு காதலர்கள் திசைக்கு  ஒருவராக தூக்கி வீசப்படுகின்றனர். என்றாலும், காலம் அவர்களை மீண்டும் இணைத்து வைக்கிறது. அது எப்படி என்பது கிளைமாக்ஸ். கவிதை மாதிரி ஒரு காதல் கதையை, அழகிய காட்சிகளின் வழியாகச் சொல்லி உருக வைத்து இருக்கிறார், அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன். தனது தம்பி ராஜு முருகன் எழுதிய கதையை நேர்த்தியாகப் படமாக்கி இருக்கிறார். கொடைக்கானலில் கதை தொடங்கி, மகாராஷ்டிரா வரைக்கும் பயணம் செய்து இருக்கிறது இந்த காதல்.

படத்தை தனி ஆளாக தாங்கிப் பிடித்துள்ளார், மெஹந்தியாக வாழ்ந்துள்ள ஸ்வேதா திரிபாதி. வடக் கத்தி முகம், தெற்கத்தி காதல் என்று கலந்து அடித்துள்ளார். ‘ஒரு மாசத்தில் காதலிச்சே. ஒரு மாசத்தில் சலிச்சுப் போய் விட்டுட மாட்டியே’ என்று ரங்க ராஜிடம் கண் கலங்குவது, ‘ஜீவா உன்னால் முடியும்’ என்று, கத்தி வித்தைக்காக தன் காதலனை மேடையில் ஏற்றி நிற்க வைப்பது, இளையராஜாவின் பாடல் வழியே காதலைச் சுமந்து நிற்பது என்று, காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்து இருக்கிறார். மேலும், வட இந்தியர்கள் பாணியில் தமிழை சொந்தக்குரலில் பேசி அசத்தி இருக்கிறார். இளையராஜா ரசிகனாக வந்து, பிறகு மெஹந்தியின் காதலனாக மாறி, அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார், அறிமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். 1990களின் இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவருடன் இணைந்து காமெடி செய்து உள்ளார், விக்னேஷ்காந்த். ‘என் வீட்டுக்குள்ளயே வேற சாதி கலந்தா, நான் எப்படி ஊர் நாட்டாமை செய்ய முடியும்?’ என்று, சாதி தலைவனாக வந்து கெத்து காட்டும் மாரிமுத்து மற்றும் முதலில் அப்பாவி போல் வந்து, பிறகு அடப் பாவி ஆகும் சர்க்கஸ் கத்தி வித்தைக்காரர் அன்கூர் விகால், எதிலும் கண்டிப்பு காட்டும் மெஹந்தியின் தந்தை சன்னி சார்லஸ், ‘மனசுல இருக்கிறவன்தான் புருஷன்’ என யதார்த்தம் பேசும் மெஹந்தியின் மகள் பூஜா, சர்ச் பாதராக இருந்தாலும் கூட, காதலுக்கு உதவி செய்து தத்துவம் பேசும் வேல.ராமமூர்த்தி என்று, அத்தனை கேரக்டர் களும் மிக வலுவாகவும், நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நடித்தவர்கள் அதை மேலும் மெருகேற்றி இருக்கின்றனர்.

ஷான் ரோல்டனின் இசை படத்துக்கு பெரிய பலம். 1990களில் வந்த இளையராஜா இசையை துணைக்கு வைத்துக்கொண்டு, இப்படத்தை காதலாக தாலாட்டி இருக்கிறார். கொடைக்கானல் மலை அழகையும், மகாராஷ்டிரா வறட்சியையும் உள்ளது உள்ளபடி பதிவு செய்துள்ளார் செல்வகுமார். பிரயாண காட்சிகளில் கூடுதலாக கவனம் செலுத்தி  இருக்கிறார். ‘எல்லாருக்கும் மேலயும் ஒரு கத்தி தொங்கிக்கிட்டுஇருக்கு. உனக்கு காதல். உங்க அப்பாவுக்கு சாதி. எனக்கு யேசப்பா’ என்று, படம் முழுவதும் ராஜு முருகனின் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

கிட்டத்தட்ட மக்கள் மறந்துவிட்ட சர்க்கஸை, அந்த கூடாரத்தை அசலாக திரையில் கொண்டு வந்து இருக்கிறது படம். கலை இயக்குனர் சதீஷ்குமாரின் பணி அற்புதம். காதலின் ஊடாக சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கையையும் தொட்டுவிட்டு செல்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி நெகிழ வைப்பது உண்மை என்றாலும், லாஜிக்காக சில கேள்விகளை எழுப்புகிறது. அப்பாவுக்கு பயந்த பிள்ளை என்றாலும் கூட, காதலைப் பிரிக்கும்போது எப்படி அமைதியாக இருக்க முடிந்தது? உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் மெஹந்தி  இருப்பதாக காட்டிவிட்டு,  எப்படி அவ்வளவு   வேகமாக அவர் தனது காதலனை கரம்பிடித்து  இழுத்து வருகிறார்? இதுபோன்ற கேள்விகள் இருந்தாலும், அழகான காதல் சர்க்கஸ் இந்த மெஹந்தி சர்க்கஸ்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்