×

திருத்தலங்கள் தோறும் தெய்வத் திருமணங்கள்

திருமணத் தடை நீங்கஇப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிள்ளை அழைப்பு பற்றியும், இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும் மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும், நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும், ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌பெருமாள் வந்த நிலை பற்றியும், ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும், ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும், எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும், ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும், பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும், பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது. பத்தாம் பாசுரம் முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், சந்பாவனை (பணம்) வைத்து ஆண்டாள் நாச்சியார் சம்பாவனை என்று வழங்கப்படும். அந்த பதிகத்தின் முதல் பாட்டு இது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்


இதை விளக்கு வைத்து ஒரு மண்டலம் பாராயணம் செய்பவர்களுக்கு திருமண தடை நீங்கும்.

திருப்பரங்குன்றத்தில் திருமண உற்சவம்

இந்தத் தலத்தில் முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற இடங்களில் நின்று கொண்டு காட்சி தரும் முருகப்பெருமான், இந்தத் தலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இங்கு மட்டும் மூன்று முறை சூரசம்காரப் பெருவிழா நடைபெறும். ஐப்பசி மாத கந்த சஷ்டி, தை மாத தெப்ப விழா, பங்குனி உத்தர விழா என மூன்று விழாக்களிலும் சூரசம்காரம் நடைபெறும். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இங்கு விசே ஷமாக பங்குனி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அந்த உற்சவத்துக்கு மதுரை சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மையும் எழுந்தருளுவது இன்னும் சிறப்பு. இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருமண வைபவத்தை ஒட்டித்தான் நாட்டின் எல்லா முருகன் ஆலயங்களிலும் பங்குனி உத்திரத் திருக்கல்யாணமும் திருவீதி உலாவும் நடைபெறும்.

திருமணத் தடை நீக்கும் திருவிடந்தை

இத்தலம் சென்னைக்கருகே கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே உள்ளது. இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திரு இட வெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக் கப்படுகிறது. இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய கருப்பு புள்ளி உள்ளது.  இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும். ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், தனது மனைவியுடன் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தித்தலமாகவும் விளங்குகிறது.

சேர்த்தி உற்சவம்: நம்மை இந்தப் பிறவியில் பெற்ற பெற்றோர்களுக்கு, நாம் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து, திருமண வைபவத்தை நடத்தி, அழகு பார்த்து ஆசி பெறுவது போலவே, நம் எல்லோரையும் படைத்த, எல்லோருக்கும் பெற்றோர்களான, (சர்வ லோக மாதா; ச பிதா) தெய்வங்களையும் மாதா பிதாவாகப் பாவித்து, அவர்களுக்கு திருக்கல்யாண உற்சவங்களை நடத்திப் பார்த்து, தெய்வங்களின் பேரருளைப் பெறுகிறோம். அப்படி பெறுவதற்காகவே ஆகம விதிகளில் திருக்கல்யாணம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மணம் என்ற சொல்லுக்கு சேர்தல் என்ற பொருள் உண்டு என்று பார்த்தோம். வைணவத்தில் திருக்கல்யாண உற்சவத்தை சேர்த்தி உற்சவம் என்று சொல்வார்கள். திருவாகிய மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் சேர்தலை திருமண உற்சவம் என்று சொல்வார்கள்.

எப்பொழுது திருக்கல்யாண உற்சவங்கள்?

திருக்கல்யாண உற்சவங்கள் திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும், நடைபெறும். இத்திருமண உற்சவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெறுவது உண்டு. ஆகம விதிகளின் படி பெரும் பாலும் குடமுழுக்கு நடக்கின்ற தினம் மாலை திருக்கல்யாண உற்சவமும், திருவீதி வலமும் கட்டாயம் இருக்கும். இது தவிர, தலபுராண வரலாற்றின் அடிப்படையில் சில ஆலயங்களில், பிரம்மோற்சவங்களின் ஒரு அங்கமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும், இன்னும் சில ஆலயங்களில் பக்தர்களின் கோரிக்கைகளுக்காக அவர்கள் விரும்பும் நாள்களில் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைப்பார்கள்.

உலகமெங்கும் நடைபெறும் ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்

சில ஆலயங்களில் அபூர்வமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சில ஆலயங்களில் அவ்வப்பொழுது நடைபெறும். ஒரு சில ஆலயங்களில் தினம் தோறும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறும். அப்படி நடைபெறும் ஆலயங்கள் திருமலை, திருச்சானூர், ஸ்ரீகாலஹஸ்தி. திருமலை பிரம் மோற்சவத்தை இன்றைக்கும் நாம் தினந்தோறும் காலை 12 மணிக்கு தரிசிக்கலாம். பிரமோற்சவம் முதலிய ஒரு சில காலகட்டங்களில் மட்டும் இந்தத் திருக்கல்யாணம் நடக்காது. திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்நதியில் தினம்தோறும் திருக்கல்யாண உற்சவம் உண்டு. இது தவிர ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை உலகம் எங்கும் வெவ்வேறு ஊர்களிலும் வேண்டு கோளின் பேரில் நடத்துகின்றார்கள்.

தாயாருக்கு முதன்மை

பொதுவாக இந்திய சமய மரபு, பெண்களுக்கும், தாயாருக்கும், கணவன் மனைவியாக இருந்தால் மனைவிக்கும், சிறப்பும் முதன்மையும் கொடுக்கும் என்பதற்கு இந்த தெய்வத் திருமணங்கள் எந்த பேரால் அழைக்கப்படுகின்றன என்பதே ஒரு சாட்சியாகும். பெரும்பாலும் அம்பாள் அல்லது தாயாரின் பெயரை ஒட்டித்தான் தெய்வத் திருமணங்கள் சொல்லப்படுகின்றன. 1.சீதா கல்யாணம் 2.ருக்மிணி கல்யாணம் 3.மீனாட்சி கல்யாணம் 4.வள்ளி திருமணம் 5.ஆண்டாள் திருக்கல்யாணம் 6.பத்மாவதி திருக்கல்யாணம் 7.ராதா கல்யாணம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.வாழ்வியலில் நம் வீட்டில் நடக்கும் திருமண வைபவத்தில் கூட, மணமகனை மகாவிஷ்ணுவாகவும், மணப் பெண்ணை திருமகளாகவும் கருதிச்  சடங்குகளை நடத்துவது உண்டு.

ஆண்டாள் சம்பாவனை

சிவாலயங்களில் நடக்கும் திருமணங்களிலும், திருமால் ஆலயங்களில் நடக்கும் திருமணங்களிலும் ஒரு வேறுபாடு உண்டு. திருமால் ஆலயங்களில் திருக்கல்யாண வைபவம் முடிந்ததும், ஆண்டாள் தமிழில் பாடிய நாச்சியார் திருமொழி பதிகமான வாரணமாயிரம் என்று தொடங்கும் திருமொழியை சேவிப்பார்கள். தாயார் சார்பில் ஒரு பட்டாச்சாரியாரும், பெருமாள் சார்பில் ஒரு பட்டாச்சாரியாரும் எதிரெதிரில் அமர்ந்து கொண்டு, ஆளுக்கு இரண்டு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்துக்கொண்டு, சுவாமியின் திருக்கரங்களில் கொடுத்து வாங்கி, வாரணமாயிரம் பாசுரங்களை ராகத்தோடு சேவித்து தேங்காய் உருட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதே வைபவம் வைணவ இல்லங்களிலும் நடைபெறும்.

அகத்தியருக்கு மணக்கோல காட்சி

சிவசக்தி சொரூபம் என்பது பார்வதி பரமேஸ்வரனைக் குறிக்கும். ஆற்றல் + ஆற்றல் தரும் இடம், சிந்தனை+ செயல் என்று படைப்பாற்றலுக்கு மிக முக்கியமான இந்த இணைப்பு தெய்வத்திருமணங்களின் அடிப்படை இந்தத் தத்துவ குறியீடாகத்தான் எல்லா தெய்வங்களுக்கும் திருமண வைபவம் நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் பார்வதிக்கும் பரமேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறுவது பங்குனி உத்தரத்தில். திருமணத்தின் மிக முக்கியமான சடங்கான கன்னிகாதானம் நடைபெறும் வைபவத்தை விளக்குவது தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மணக்கோலம்.

இந்தக் கன்னிகாதான மணக்கோலத்தை ஒரு முறை பார்த்தாலே திருமணத் தடைகள் தூள் தூளாகி ஒவ்வொருவருக்கும் நல்ல இல்லற வாழ்க்கை அமையும். வடக்கே கயிலையில் பார்வதி பரமேஸ்வரர் திருமணம் நடந்தது. அந்த திருமண கோலத்தினை தரிசிக்க ஆசைப்பட்ட அகத்திய மாமுனிவருக்கு சித்திரை மாதம் ஒன்றாம் தேதி திருநெல்வேலி பாபநாசத்தில் மணமக்களாகக் காட்சி தருகிறார் சிவபெருமான்.

சிவபெருமானின் திருமணக் கோலம்

பொதுவாகவே சிவாலயங்களில் மூலவர் லிங்கத் திருமேனியாக இருப்பார். அம்பாள் பெரும்பாலும் தனிச் சந்நதியில் திருவுருவத்தோடு காட்சி தருவார். ஆனால் திருக்கல்யாண வைபவத்திற்கு உற்சவ திருமேனிகள் வேண்டும் அல்லவா! அதற்காக அம்பாளுக்கும் ஈஸ்வரனுக்கும் தனித்தனியாக பஞ்சலோக உற்சவ திருமேனிகள் ஆலயங்களில் செய்து வைத்திருப்பார்கள். இத்திருமேனிகளுக்கு தான் திருக்கல்யாணமும் உற்சவ காலங்களில் வெவ் வேறு வாகனங்களில் திருவீதி உலாக்களும் நடைபெறும். திருமண கோலத்திற்கான இத்தகைய உற்சவ திருமேனிகளில் சிவபெருமான் நன்கு திருக்கரங்களுடன் இருப்பார். சாரங்கபாணி அல்லவா. மான் மழு ஏந்தி இருப்பார். கீழ் வலது உள்ளங்கை மேல்நோக்கி இருக்கும். அம்பிகையின் இடது கரத்தில் ஆச்சரிய முத்திரை அல்லது மலர் ஏந்தி இருப்பாள். பெரும்பாலும் இறைவனின் இடது கரத்தில் அபயமுத்திரை அல்லது வரத முத்திரை அமைந்திருக்கும்.

கல்யாண திருத்தலங்கள்

அனேகமாக தலபுராணத்தை ஒட்டி பார்வதி பரமேஸ்வரர் திருமண கோலங்கள் வெவ்வேறு வகைகளில் நாம் பார்க்க முடியும். பார்வதி தேவி சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காகவே தவம் இருந்த பல திருத்தலங்கள் உண்டு. அப்படிப்பட்ட திருத்தலங்களிலும் புராண நிகழ்வுகளை ஒட்டி அந்தந்த மாதங்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பல திருத்தலங்களில் சிவபெருமான் பார்வதி தேவியை கரம்பிடிக்கும் அமைப்பில் காட்சி தருவார். சில சிவத்தலங்கள் திருமண தடையை நீக்கும் கல்யாண தலங்களாக கருதப்படுகின்றன.

அப்படிப்பட்ட தலங்களில் சில காளஹஸ்தி, மதுரை, குத்தாலம், திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி இத்தகைய தலங்களை தரிசிப்பது புண்ணியம். சிவபார்வதி திருமணத்தோடு தொடர்புடைய தலங்களில் சிவபெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளியுள்ளார். வள்ளி திருமணம் உணர்த்தும் தத்துவம். பழங்காலம் தொட்டு தமிழகத்தில் முருகப்பெருமான் வழிபாட்டு முறை இருந்தது. மக்கள் முருகனை தங்கள் தெய்வமாக வழிபட்டனர்.

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே


 என்று தொல்காப்பியம் கூறும். முருகன் என்றாலே அழகு, இனிமை, இளமை, தெய்வத்தன்மை, மணம் மகிழ்ச்சி என்ற ஆறு தன்மைகளையும் தன்னுள் கொண்டவன் என்று பொருள். குறிஞ்சி கிழான் என்று கூறு வார்கள். ஞான பண்டிதனான முருகன், வள்ளி தெய்வானையை மணந்து கொண்டான். பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரத்தின் போது, முருகன் வள்ளி தெய்வானை திருமணம் நடைபெறும். முருகன் ஞான சொரூபம். வள்ளி இச்சா சக்தி (அதாவது விருப்பம் ஆசை.) தெய்வானை கிரியாசக்தி. (செயல்) வள்ளியாகிய ஜீவன் பேரின்பமாகிய முருகப் பெருமானுடன் கலப்பதை வள்ளித் திருமணம் உணர்த்துகிறது.

நித்ய கல்யாண பெருமாள்

வராகப் பெருமாளுக்கும் மகாலட்சுமி தயாரிக்கும் திருமண உற்சவங்கள் நடைபெறுவது உண்டு. தல புராணச் செய்திகள் சற்று மாறுபடும். திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்தார். பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அத்தலம் ‘வராகபுரி’ என்றானது. காலவமுனிவர் என்பவருக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார். 360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர்.

வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பு கொண்டு திகழ்ந்தனர். முனிவர் தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராக மூர்த்தியிடம் வேண்டினார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்றார். தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி’ எனும் ஒரே பெண்ணாக்கினார். அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டார். இன்றும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளுகிறார்.

லட்சுமி நரசிம்மர்

திருமணம் என்றால் சேர்தல் என்று பொருள். திருவோடு சேர்ந்து மணம் பெறுதல் திருமணம். வராக அவதாரம் போலவே நிருஸிம்ஹப் பெருமாளாக அவதாரம் எடுத்த பொழுது, தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அச்சம் நீங்கவும், அவர்களுக்கு பேரருள் கிடைக்கவும் பகவான் மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து, தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமானாகக் காட்சி தருகிறார். ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் காட்சி தரும் திருத்தலங்கள் பற்பல உண்டு. பங்குனி உத்திரத்தின் போது திருவாலியில் உள்ள லட்சுமி நரசிம்மப் பெருமாள் சன்னதியில், கல்யாணரங்கநாதராகப் பெருமாள் மகாலட்சுமியை திருக்கல்யாணம் செய்து கொள்ளுகின்றார்.

பங்குனி உத்திர நன்னாள் பகல் வேளையில் சீர்காழிக்கு அருகே திருவாலியில் இத் திருமண வைபவம் நடைபெறும். இரவு, இந்த திருமண தம்பதிகளை, திருமங்கை ஆழ்வார் கொள்ளையடித்து, அவர்களிடம் திருமந்திர உபதேசம் பெறும் திருவேடுபரி உற்சவம் நடைபெறும். அந்த உற்சவம் இந்த ஆண்டு 04.04.2023 அன்று நடைபெற இருக்கிறது.

பங்குனி உத்திர திருக்கல்யாணங்கள்

பங்குனி உத்திரம் பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்! ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்! முருகன், வள்ளியை மணக்கும் நாள்! சீதைக்கும் - ராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்! பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்! பங்குனி உத்திரத்தில் தான் கோதா நாச்சியாருக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமான திருமணம் நடைபெறும். பெண் வீட்டில் நடைபெறும் திருமணம் இது. சீதா கல்யாணமும் ஜனகரின் திருமாளிகையில் தான் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் திருமணம் நடைபெற்ற பிறகு, அந்தத் திருக்கோயிலே நாச்சியார் திருமாளிகை (ஆண்டாள் கோயில்) ஆனது. பெரும்பாலும் எம்பெருமானுடைய மாலை தான் தாயாருக்குப் போகும். ஆனால் ஆண்டாள் திருக்கல்யாணத்தில் மட்டும் ஆண்டாள் சூடிய மாலை யைத்தான் பெருமாள் சூடிக் கொள்வார். தெய்வத் திருமணங்களுக்காகவே பங்குனி சித்திரை மாதங்கள். தெய்வத் திருமண உற்சவங்களில் நாமும் கலந்து கொண்டு பேரருள் பெற்று நலமோடு வாழ்வோம்.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்