கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்

‘‘கடவுள் முன்னிலையிலும், வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது,இறை வார்த்தையை அறிவி! வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச்செய்வதில் நீ கருத்தாய் இரு! கண்டித்துப் பேசு, கடிந்துகொள், அறிவுரை கூறு, மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு, ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனைகளைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கு ஏற்ப போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.

உண்மைக்குச் செவி சாய்க்க மறுத்துப் புனை கதைகளை நாடிச் செல்வார்கள். நீயோ அனைத்திலும் அறிவுத்தெளிவோடு இரு. துன்பத்தை ஏற்றுக்கொள். நற்செய்தியாளனின் பணியை ஆற்று. உன் திருத்தொண்டை முழுமையாகச் செய். ஏனெனில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்டேன், என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.’’ இனி எனக்கென்ன வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார். நீதியாக அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார், விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்.’’ -  (II தீமோத்தேயு 4: 1-9)

நல்ல மனமுடைய மக்கள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் மேலும், பிறர் மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். எப்போதும் அவர்கள் நல்லவித பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள். நல்ல மனம் கொண்டவர்கள் எல்லாப் பருவக் காலங்களில் கிடைக்கின்ற பழங்களைப் போன்றவர்கள். நல்ல மனப்போக்கானது நம்மில் உள்ள திறமையை வளர்க்கிறது, பெருக்குகிறது. ஒரு குழுவாக இணைந்து வேலை செய்யும் பக்குவத்தை வளர்க்கிறது.

பிரச்னைகளை வளர விடாமல் தடுத்துத் தீர்க்கிறது. தரத்தை மேம்படுத்துகிறது. நல்ல சுமுகமான சூழ்நிலையை உருவாக்குகிறது. விசுவாசத்தன்மையை வளர்க்கிறது. லாபங்களை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சமுதாயத்திற்கு உதவும் உறுப்பினராகவும், அரிய சொத்தாக நாம் ஆவதற்கும் உதவு

கிறது. இனிய குணநலன் உள்ளவராக நம்மை ஆக்குகிறது.

‘‘எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கி விட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும், அறிவுத்தெளிவோடும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய பல்வகை அருட்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருட் கொடையைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால் அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப்போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால் கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர்போல் பணி செய்யட்டும். இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்.

‘‘அவருக்கே மாட்சியும், வல்லமையும்

 என்றென்றும் உரித்தாகுக.’’- (I பேதுரு 4: 7-11)

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: