×
x

எண்ணியதை நிறைவேற்றித் தருவார் வன்னியராஜா

சித்தூர், வள்ளியூர், நெல்லை

திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்களந்தை ஊரில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த ஜமீன் மனைவி அம்மையடியாளுக்கு ஒரே கவலை. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆனபின்னும் பிள்ளை இல்லையே என்பதுதான். போகாத தலங்கள் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை. இருந்தும், குழந்தைச் செல்வம் கிடைக்கவில்லை என்று ஏங்கினாள். ஒருநாள் அந்த வழியாக வந்த குடுகுடுப்பைக்காரன் “ஆத்தா, நாச்சியாரே, சங்கரன்கோவில் தலம் சென்று ஆவுடையம்மன் சந்நதியிலே தவசு இருந்தால் நிச்சயம் நடக்கும். நினைத்தது கிடைக்கும்” என்றுரைத்தான். அதன்படி அம்மையடியாள் சங்கரன்கோவில் புறப்படுகிறாள்.

அவரது கணவன், “இத்தனை நாள் வரம் கொடுக்காத சாமியா இப்ப வந்து கொடுக்கப்போகுது. வேலையத்து திரியாத” என்று கூறியும், அம்மையடியாள் போனாள். சங்கரநயினார் கோயில் வந்த அம்மையடியாள், ஆவுடையம்மன் சந்நதியில் குழந்தை வரம் வேண்டி தபசு இருந்தாள். அந்த நேரம் தளவாய் மாடன், ``நம்ம ஸ்தலத்துக்கு ராக்காவலுக்கு ஆள் வேண்டி நெல்லை சீமை வடமதிக்கு சென்று வருவோம்’’ என கூறிக்கொண்டு மகா ராஜேஸ்வரரின் உத்தரவைப் பெற்று புறப்படுகிறார். சங்கரன்கோவில் தலத்துக்கு ஆண்டிப் பண்டாரம் ரூபம்கொண்டு தளவாய் மாடன் வருகிறார்.

ஆவுடையம்மன் சந்நதியில் தபசு இருந்த அம்மையடியாளை அழைத்து, ``நீ நம்பி ஆற்றின் தென்கரையில் கோயில்கொண்ட மகா ராஜேஸ் வரர் ஆலயம் சென்று, ஆத்தியடி மூடத்திலே நின்றருளும் பேச்சியம்மன் சந்நதி முன்பு குழந்தை வரம் வேண்டி தபசு இருந்தால், நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூற, அம்மையடியாள் சித்தூர் சென்று நம்பி ஆற்றில் தீர்த்தம் ஆடி, மாத்துத் துணி உடுத்தி தபசு இருக்கும் வேளையிலே, தளவாய் மாடன் பண்டாரம் ரூபத்தில் வந்து, ``உனக்குப் பிறக்கும் மூத்தபிள்ளை வாலிபனாகும்போது அவனை கோயிலுக்குக் காவலுக்கு தரவேண்டும்’’ என்று கூற, அம்மையடியாள் ஆனந்தத்தில் “ஒரு பிள்ளை என்ன, பிறக்கும் பிள்ளைகள் அனைத்தும் சாஸ்தா காவலுக்கு தருகிறேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினாள்.

``அப்படியானால் சத்தியம் செய்’’ என்று கூறி தனது வலக்கரத்தை தளவாய்மாடன் நீட்ட, தன் கரத்தால் சத்தியம் செய்தாள் அம்மையடியாள். அன்றிலிருந்து மறு வருடம் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தாள் அம்மையடியாள். ஆண்டுக்கு ஒரு குழந்தை என ஆறு ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். மூத்த மகன் சின்னதம்பி வன்னியன், 2. சிதம்பர வன்னியன், 3. ஆண்டு கொண்ட வன்னியன், 4. அழகு விலங்கடி வன்னியன், 5. தென்கரை வன்னியன், 6. வடகரை வன்னியன் என பெயரிட்டவள்.

ஏழாவதாக பிறந்த மகளுக்கு வன்னிச்சி என்றும் பெயரிட்டாள். வன்னியன், வன்னிச்சி என பெயரிட காரணம், சங்கரன்கோவில் இறைவன் சங்கரநயினார், வன்னி மரத்தடியில் இருப்பதால் இந்த இறைவன் வன்னியபெருமாள் என்றும் வன்னியடியான் என்றும் வன்னியடி சங்கரநயினார் என்றும் அழைக்கப்படலானார். அந்த இறைவனின் தலத்துக்கு சென்ற பின்னர்தான் தளவாய்மாடனை கண்டு அதன்பால் சித்தூர் வந்து குழந்தைப் பாக்கியம் பெற்றமையால் அம்மையடியாள், சங்கரன்கோவில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும்பொருட்டு தனது குழந்தைகளுக்கு பெயருடன் வன்னியன் என சேர்த்து பெயரிட்டு வளர்த்துவந்தாள்.

மூத்தமகன் சின்னதம்பி வன்னியனை, வன்னியராஜா என்று செல்லமாக அழைத்து வந்தாள். மூத்தவன் சின்னதம்பி வன்னியன் (வன்னியராஜா) பதினாறு வயதில் பாளையத்துக்கு துரை ஆனான். மகன் மூத்தவனுக்கு மணமுடிக்க எண்ணிய அம்மையடியாள், தனது அண்ணன் ஏழாயிரம் பண்ணை என்ற ஊரில் இருக்கும் உடையாரிடம் சென்று பெண் கேட்டாள்.

அப்போது அவர், “தாயி, நீ என் உடன் பொறந்தவதான். உன் மவனுக்கு என் மவ உரிமைப்பட்டவதேம். உன் வீட்டுல எவ்வளவு செல்வம் இருந்தாலும், நம்ம குல வழக்கப்படி உம்மகன் கன்னிக்களவு செஞ்சு காட்டட்டும். அப்புறமா என் மவள கட்டட்டும். என்ன ஆத்தா, நான் சொல்றது சரிதான..” என்று கூறினார். உடனே அங்கிருந்து புறப்படலானாள் அம்மையடியாள், “ஏ, மதனி ஒரு வாய் சோறு தின்னுட்டு போங்க” என்ற அண்ணன் மனைவியின் குரலுக்கு செவி மடுக்காமல், ``போயிட்டு வாரேன்’’ என்ற வார்த்தையோடு விரைந்தாள் தனது வீட்டுக்கு வந்த வேகத்தில் அண்ணன் வீட்டில் நடந்ததை மகன் களிடம் எடுத்துக் கூறினாள். தாயின் கட்டளையை ஏற்று அமாவாசை இரவு அண்ணன் தம்பிகள் 6 பேரும் களவு செய்யச் செல்கின்றனர்.

பொத்தையடிப் பொட்டலில் கிளியாந்தட்டு என்ற விளையாட்டை விளையாடினர். இரண்டு மணி நேரம் விளையாடியவர்கள் களைப்பில் ஓய்ந்து இருந்தனர். அப்போது தள்ளாடி வயது முதிர்ந்த கிழவனாக அவ்விடம் வந்த தளவாய்மாடன், “தம்பிங்களா, நான் சோசியக்காரன் உங்கள பார்த்தா களவு செய்ய வந்ததுபோல இருக்கே” என்று கூற, “ஆமா.. தாத்தா’’ என்றுரைத்தான் சின்னதம்பி வன்னியன். “நீங்க களவு செய்ய வேறு எங்கும் போக வேண்டாம், சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு போங்க, வேண்டிய மட்டும் பொன்னும் பொருளும் கிடைக்கும்” என்றார்.

அதன்படி, அண்ணன் தம்பிகள் ஆறு பேரும் களவு செய்ய சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குச் செல்கின்றனர். இருபத்தியோரு பழுதுகொண்ட ஏணியை சுவற்றில் சாத்தி அதன்மூலம் ஏறி கோயில் உள் பிராகாரம் செல்கின்றனர். மூத்தவன் கருவறையை திறந்து திரவியத்தை களவாட முற்படும்போது, மகாராஜா கோயிலை நிர்வகித்து வந்த உதயமார்த்தாண்டன் கனவில் தளவாய்மாடன் சென்று, ``மகாராஜா கோயிலில் நெல்லைச்சீமை வடமதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் ஆறுபேர் களவாட வந்திருக்கிறார்கள் நான் அவர்களை மதிமயங்க வைத்து வந்திருக்கிறேன். நீ உடனே போ...’’ என்று கூறினார்.

மார்த்தாண்டம் உடனே கண்ணூரு, வில்லம்பூரூ தலைவர்மார்களுக்கு ஆள் அனுப்பினார். தகவலாளி வந்து சொன்னதும் தலைவர்மார்கள் இரண்டு பேரும் குதிரை மீதேறி தீப்பந்தங்களுடன் சித்தூர் கோயிலுக்கு விரைந்து வந்தனர். நடைதிறந்து அண்ணன் தம்பி ஆறுபேரையும் பிடிக்கின்றனர். அவர்களைச் சங்கிலியால் பிணைத்துக் கட்டி கண்ணுபுளிமூடு அருகே கொண்டு நிறுத்துகின்றனர்.

இந்த நேரத்தில், அம்மையடியாள் கனவில் ஆண்டி ரூபம் கொண்டு சென்ற தளவாய்மாடன், ``உன் புள்ளங்க களவு செய்யப் போன இடத்தில மாட்டிக்கிட்டாங்க, அவங்க எடைக்கு எடை பொன் கொடுத்து மீட்டு வா’’ என்று கூறுகிறார். உடனே, மனம் பதறிய அம்மையடியாள் ஆறு சுமடு திரவியத்தை எடுத்து முடிச்சு கட்டி தலைச்சுமடாக எடுத்து வருகிறாள். அவளது மகள் வன்னிச்சி, அண்ணன்மார்கள் பசியோடு இருப்பார்களே என்று எண்ணி ஆறுவகை கூட்டு வச்சு அப்பளம் பாயாசத்தோடு சாப்பாடு செய்து தலைச்சுமடாக சுமந்து தாயுடன் வருகிறாள்.

அந்த நேரம் சித்தூரில், கண்ணுபுளி மூடில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு பேரையும் கண்ணூரு, வில்லம்பூரு தலைவர்மார்கள் நல்லெண்ணெய் தேய்த்து நீராட்டி, எருக்கலை மாலை சூட்டி ஆறுபேரின் தலையையும் அறுத்துப் போட்டுவிட்டுச் சென்றனர். ஆறுபேரின் உடலும் துடிதுடித்து அடங்கும் வேளை அங்கே வந்தாள் அம்மையடியாள். முண்டமாக கிடந்த மகன்களின் உடல்களைக் கண்டு கதறித் துடித்தாள். இனி நான் வாழக் கூடாது என்று நாக்கை பிடுங்கி உயிரை மாய்த்தாள். அண்ணன் மார்களுக்காகத் தலை சுமடாக கொண்டுவந்த சாப்பாட்டை தரையிலே கொட்டினாள்.

அண்ணன்மார்கள் ஒவ்வொருத்தரின் பெயரைக்கூறி அழைத்து ஒப்பாரி வைத்தாள் வன்னிச்சி. அழுது முடிந்தவள், தனியே நின்று குழி வெட்டி அண்ணன்மார்கள் உடல்களை அடுக்கி தீ மூட்டினாள். தானும் நாக்கைப் பிடுங்கி உயிரை மாய்த்தாள். மகா ராஜேஸ்வரர் உதயமார்த்தாண்டம் கனவில் சென்று, ‘‘மாண்டு போனவர்கள், என் தலத்தில் காவல் தெய்வமாக நிற்பார்கள். அவர்களுக்குப் பீடம் கொடு. அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வரும் பக்தர்களிடம் பெற்றுக்கொள்வார்கள்’’ என்று கூறினார்.

அதன் பேரில் மகா ராஜேஸ்வரரின் ஆலயத்தில், காவல் தெய்வங்களாக வன்னிராஜாவும் அவரது தம்பிகளும், தாய், தங்கையரும் அருள்பாலிக்கின்றனர்.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Tags : Vanniaraja ,
× RELATED சக்கரவர்த்தி திருமகன்