லெந்து காலம்

(7ரோமர்: 4-25)

கிறிஸ்தவ நாட்காட்டியின்படி பிப்ரவரி 22-ஆம் தேதி சாம்பல் புதன்கிழமை தொடங்கி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரை 45 நாட்கள் லெந்து காலம் (LENT) கடைபிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் சிறப்பான கவனம் செலுத்துவர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் மற்றும் குடும்பமாகவும் உணவு, உடை, அலங்காரம் முதலியவற்றில் சில சுயக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வர். மேலும் திருமறை படித்தல், மன்றாட்டுகளில் ஈடுபடுதல் மற்றும் ஆன்மிகக் கூட்டங்களில் பங்கேற்றல் முதலியவற்றில் அதிகக் கவனம் செலுத்துவர்.

இவையாவற்றிலும் உள்ளடங்கி இருக்கும் முக்கியக் கூறுபாடுகள் யாதெனில்; தன்னிலை உணர்தல், தவறுகளுக்கு மனம் வருந்துதல், மனம் திரும்புதல், நாம் யாருக்குத் தவறிழைத்தோமோ அவரிடம் மன்னிப்பு கோருதல், ஒப்புரவாதல், மீட்படைதல், மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டாடுதல் ஆகும். இவையாவும் ஒருவர் சக மனிதருடனும், இயற்கையுடனும் அதன் வழியாகக் கடவுளுடனும் உறவைப் புதுப்பித்துக் கொள்ளுதல் ஆகும். இதை வேறுவகையில் கூற வேண்டுமென்றால் ஒருவர் கடவுளுடன் கொண்டுள்ள நல்லுறவு சகமனிதர் மற்றும் இயற்கையோடும் கொண்டிருக்கும் நல்லுறவில் வெளிப்பட வேண்டும் என்பதாகும்.

யோவான் இதை வலியுறுத்தித் தான் ‘‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது” (1 யோவான் 4:20) எனக் கூறியுள்ளார். மேலும், அவர் ‘‘அவரோடு (கிறிஸ்து) இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறு வாழக் கடமைப்பட்டவர்கள்” (1 யோவான் 2:6) எனவும் கூறியுள்ளார்.

நான் கடவுளை நம்புகிறேன், இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறிக்கொண்டு அவரைப் போல வாழ முயலாமல் இருப்பது ஒரு பாவச்செயல் ஆகும். கிறிஸ்துவுக்கு எதிரான இவ்வுலகத்தின் தகவுகள், செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் முழு ஈடுபாடு கொண்டு வாழ்வதும் அதன் பின்னர் ஆலயத்திற்குத் தவறாமல் சென்று காணிக்கைகளை தாராளமாக கொடுத்து புகழ்தேடிக்கொள்வதும் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எவ்வகையில் ஏற்புடையதாக இருக்கும்?

இந்த லெந்து காலம் கிறிஸ்தவர்களுக்கு அருளப்பட்டுள்ள ஒரு பெரும் கொடையாகும். இதில் ஒருவர் தாம் கடவுளிடமிருந்தும், கிறிஸ்துவிடமிருந்தும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளோம் என்பதை உணர்ந்து பார்த்து கடவுளிடமும் கிறிஸ்துவுடனும் நெருங்கிச் சேற முயற்சிகளை எடுக்கும் காலம். இதை சொந்தப் பலம், அறிவு, முயற்சிகளால் மட்டும் அடைந்துவிட முடியாது. அதற்குக் கடவுளின் துணையும், இயேசு கிறிஸ்துவின் கிருபையும் தேவை. நம் இயலாமையை உணந்து கடவுளிடமும் கிறிஸ்துவினிடமும் சரணடைவதே சரியானது ஆகும்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related Stories: