சரும நோய்களை நீக்கும் மருத்துவச்சி அழகு நாச்சி

சிந்தாமணி, தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி. அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந் தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. கொழுவில் படிந்த ரத்தம் குப்பாண்டி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அவரது நிலத்தில் ஏர் கட்டினார். நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக் கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

அந்த நேரம் கஞ்சிகலையத்தை தலையில் தாங்கி, அவரது மனைவி பொன்னுதாயி அவ்விடம் வந்தாள். வயலில் கலப்பை முன் நின்று பூமி நோக்கி, தனது கணவன் இருகரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். கடவுளை கண் மூடி கைதொழும் நேரம், கஞ்சிகலயத்தை இறக்கி வைக்க, கணவனை அழைப்பது நல்லதல்ல என்று மனதிற்குள் நினைத்தாள். கண்ணை மூடிய குப்பாண்டி ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா என்று வேண்டிக் கொண்டு நாலாபுறமும் பார்த்தவாறு தன்னை ஒரு சுற்றுசுற்றினார்.

வடக்கு திசையில் வயல் வரப்பில் தனது மனைவி பொன்னுத்தாயி கலயத்துடன் நிற்பதை கண்டார். ‘‘நீ எப்போம் வந்த, என்று கேட்க, அதற்கு பொன்னுத்தாயி, நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும் போதே வந்திட்டேன் என்று பேசிய படியே கலயத்தை இறக்கும் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கொத்தமல்லி துவையல் கூட்டுடன் கஞ்சி குடித்து முடித்து ஏப்பம் விட்ட குப்பாண்டி, நீ வீட்டுக்கு போ, என்றதும் பொன்னுத்தாயி, கணவனிடம் கேட்டாள். கலப்பை கட்டுக்கு முன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப் பழக்கம், 3 உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக என்ற மனைவியின் கேள்விக்கு பதிலுரைத்தார் குப்பாண்டி.

அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதோ மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தக்கறை படிஞ்சிருக்கு. அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திற பிடாதே, அதான் சாமிய கும்பிட்டேன். அப்படியா என்ற பொன்னுதாயி, பதட்டத்துடன் முதல்ல கலப்பை தள்ளி வச்சிட்டு, நீளக்கம்பு எடுத்து தட்டி, தட்டிப் பாருங்க, ஏன்னா, துண்டுப் பட்ட பாம்புக்கு தான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க, ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படியெல்லாம் நடக்குது போல என்றாள்.

மனைவியின் சொல்லைக் கேட்ட குப்பாண்டி தென்னந் தோப்பில் இருந்து நீளக்கம்பு ஒன்றைக் கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப் படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.

வெட்டிய இடத்தில் தோன்றிய அம்மன்

வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒருகை யோகமுத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது. வாய்க்கால் தண்ணீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டு வந்து மரநிழலில் வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.

வடக்கு நோக்கி நிலையம் கேட்ட அம்மன்

குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசைநோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வடதிசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். அருகே இருந்த ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து பூஜை நடந்தது. சுற்றியிருந்தவர்கள் கைகூப்பி வணங்கினர். பூஜை முடிந்த மறு நிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

ஊர்மக்கள் ஒன்றுசேர கொடைவிழா

பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித் தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. அவர்கள் எண்ணியது போல் கோயில் எழுப்பக் கொடை விழா நடத்தப்பட்டது.

கோயிலில் அழகு நாச்சியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அருகில் முப்பிடாதி அம்மன்,  பேச்சியம்மன், புது அம்மன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர். அழகு நாச்சியம்மன் எதிரில் உள்ள பலி பீடத்தை மகிஷாசுரன் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். அழகு நாச்சி அம்மனுக்கு சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. காரணம் அந்தகாலம் வயல் அறுவடை முடிந்து காலம். மழை, குளிர், பனி இல்லாத கோடை காலம்.

குற்றால நீரில் அபிஷேகம்

அழகு நாச்சியம்மன் குற்றால மலையில் இருந்து வந்ததால் அம்மனுக்கு கொடை விழாவின் போது அபிஷேகம் செய்வதற்காக அருவி நீரை எடுத்து வருகிறார்கள். அம்மனுக்கு சாமியாடும் நபர்கள் மற்றும் விரதம் இருக்கும் விழாக் குழு அன்பர்கள் புனித நீர் எடுக்க செல்வார்கள். அம்மனுக்கு கலப்பைக் கொழுபட்டு காயம் பட்டதை நினைவு கூறும் விதமாக, கொடை விழா நடைபெறும் போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

பல நாட்களாக முகத்தில் உள்ள பருக்கள், வடு, முகப் பொலிவின்மை, முகச்சுருக்கம் போன்ற தீராத பிரச்னைகளில் குமுறுகின்ற பெண்களுக்கு அம்பாளின் அபிஷேகம் செய்த தீர்த்தம் கொண்டு முகத்தை கழுவி வர முகத்தில் நல்ல மாற்றம் கொண்டு பயனடைகின்றனர். அழகு நாச்சியம்மன் கோயில் தென்காசி மாவட்டம், குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை வாருங்கள்... அழகுநாச்சி அம்மனை வேண்டுங்கள்... முகம் மற்றும் உள்ளம் பொலிவு பெற்று செல்லுங்கள்...

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Related Stories: