சிற்பமும் சிறப்பும் - சிலிர்ப்பூட்டும் சிவபுரம் சிற்பங்கள்

ஆலயம்: ராஜராஜ ஈஸ்வர முடைய மஹாதேவர் (சிவன்) ஆலயம், சிவபுரம், (பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ) திருவள்ளூர் மாவட்டம்.

காலம்: முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (10ஆம் நூற்றாண்டு) துவக்கப்பட்டு,  அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

அதிகம் அறியப்படாத இந்த சோழர் கால கோயில் ஒரு சிற்பக்கலை அற்புதம். இந்த சிறிய ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம், மகா மண்டபம் என  ஆலயத்தின் அனைத்து கூறுகளும் அமைந்துள்ளன. இக்கோயிலின் இறைவன் லிங்கவடிவில் உள்ள சிவன், ‘‘ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர்’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இறைவி காமாட்சி அம்மன்.

கோஷ்ட சிற்பங்கள்

விநாயகர், அழகிய அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளார். பத்ம பீடத்தின் மீது, லலிதாசனத்தில், மேலே அலங்கரிக்கப்பட்ட குடையுடன், இருபுறமும் சமாரங்களுடன் அமர்ந்துள்ளார்.

துவாரபாலகர்

கூரான கோரைப்பற்களுடன், எச்சரிக்கை விடுக்கும் விரலுடன், ஆபரணங்கள், கீர்த்திமுக தோள்வளையுடன் அச்சமூட்டும் வண்ணம் காட்சியளிக்கின்றார். பல்வேறு நிவந்தங்களைக்கூறும் கல்வெட்டுகள் சுவர்கள் முழுவதும் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தக்கோயில் தமிழக தொல்லியல் துறையின் கீழ் பராமரிப்பில் உள்ளது.

பிரம்மா

நான்கு முகங்கள் மற்றும் ஆபரணங்களுடன் வடக்கு பகுதியில் அழகுற வடித்துள்ளனர்.

தட்சிணாமூர்த்தி

கல்லால மரத்தடியில், குள்ள வடிவ அபஸ்மாரன் மீது கால் வைத்து வீராசனத் தோரணையில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மரக்கிளையில் இருந்து எட்டிப்பார்க்கும் ஆந்தை, கிளையில் தொங்கும் பாம்பு, பணப்பை, துணி போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ளன. பீடத்தில் மான் மற்றும் சிங்கம் உள்ளன.

லிங்கோத்பவர்

அழகிய ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் மான் மற்றும் கோடரியுடன், கடி வலம்பித முத்திரையுடன் காட்சியளிக்கிறார். வானத்தில் அன்னப்பறவையின் மீதமர்ந்து பறக்கும் பிரம்மாவும், கீழே வராஹ வடிவில் விஷ்ணுவும் உள்ளனர்.

துர்க்கை

இங்குள்ள சிற்பங்களிலேயே பேரெழில் பொருந்திய சிற்பம் இது தான் என்றால் அது மிகையாகாது. அழகிய அணிகலங்கள், பிரயோக சக்கரம், சங்கு, அபய முத்திரை, கடி வலம்பித முத்திரையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். எவ்வளவு நேரம் பார்த்தோம் என்பதே தெரியாமல், வியப்பில் விரியும் விழிகளுடன் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். துர்க்கை சிற்பத்தை இந்த அளவு அழகுடன் வேறு எங்கும் காண முடியாது.

செய்தி: படங்கள்: மது ஜெகதீஷ்

Related Stories: