கல்வித் துறையில் கிரகங்களின் விளையாட்டு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பாரதிநாதன்

வாழ்வியலும் ஆன்மிகத்திலும் வெற்றிகரமாக இருக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று சரியான இலக்கு நிர்ணயித்துக் கொள்ளுதல். இரண்டாவது அதை நோக்கிய திசை மாறாத பயணம். இந்த இரண்டும் உறுதியாக இருந்தால், வாழ்விலும் சரி, ஆன்மிகத்திலும் சரி வெற்றி அடைந்துவிடலாம். இலக்கை சரியாக நிர்ணயித்துக் கொள்ளாவிட்டாலும், அல்லது அந்த இலக்கை நோக்கி பயணம் செய்யும்பொழுது, தெளிவில்லாமல் குழப்பத் தோடு திசைமாறிவிட்டாலும், வாழ்வில் துன்பங்கள் தான் அமையும்.

அதை தவிர்ப்பது கடினம். நமக்கு பொருந்தாத, செயல்களையும் முயற்சிகளையும் செய்கின்ற பொழுது, அந்த முயற்சிகள் பலன் அளிப்பதில்லை என்பது மட்டுமல்ல; பல இடர்களையும் தோல்விகளையும் கொண்டு வந்து சேர்த்துவிடும். ஊட்டி, கொடைக்கானல் முதலிய மலைப்பாங்கான பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்கள் செழிப்பாக வளரும். அந்தத்  தேயிலையை சமதளம் உள்ள நிலங்களில் பயிரிட்டால் வளராது.

அதைப்போலவே, நெல் போன்ற பயிர்களை மலைச்சரிவுகளில் இடுகின்றபொழுது, எதிர்பார்த்த பலனைத் தராது. மண்ணின் வளத்தை அறிந்து பயிரை வளர்க்க வேண்டும். மனதின் வளத்தை அறிந்து வாழ்க்கையை அமைக்க வேண்டும். இதை, பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகள் விஷயத்தில் செயல் படுத்திப் பார்க்கலாம். இப்பொழுது கல்வி ஆண்டு துவங்கி விட்டது. அடுத்து என்ன படிப்பது, எப்படிப் படித்தால் வாழ்க்கையில் வெற்றியைப் பெறலாம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்கின்ற நேரமிது.

இம்மாதிரியான நேரங்களில், நமக்கு குழந்தைகளின் ஜாதகங்கள் ஓரளவு உதவி செய்யும். இந்த வார்த்தையை மிக முக்கியமாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “ஓரளவு” உதவி செய்யும். என்ன மாதிரியான கல்வியைக் கொடுத்தால் அவன் எதிர்காலத்தில் நல்லபடியாக வருவான் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஜாதகங்களில் உள்ள கிரகநிலைகள் உதவும். நடக்கக்கூடிய தசாபுத்திகளும், கோசார நிலைகளும், உதவும்.

இதைத்தான் “காலத்தை அறிந்தே பயிர் செய்” என்று பெரியவர்கள் சொன்னார்கள். காலமறிதல் என்பதை கோள்களின் நிலையைக் கொண்டுதான் அறியமுடியும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு

என்பது திருக்குறள்.

இதை ஒரு அனுபவத்தின் மூலம் நான் கூறுகின்றேன். என் வீட்டில் ஒரு வயலின் இசைக் கருவி இருந்தது. நான் கற்றுக்கொள்வதற்காக முயன்று, நேரமின்மையால் அதை அப்படியே வைத்துவிட்டேன். சரி குழந்தைகளுக்குத் கற்று தரலாமே என்று முயற்சி செய்தேன். அதை என் பையன் கற்றுக்கொண்டான். அது ஒரு பொழுதுபோக்காக இருக்கட்டும் என்பதற்காக சொல்லித் தந்தேன். மற்றபடி அவனுடைய கல்வி தொடர்ந்தது. மேலாண்மையில் முதுகலைப் பட்டம் வாங்கி முனைவர் பட்டமும் வாங்கிவிட்டான்.

ஆனால், இன்றைக்கு எது பொழுதுபோக்குக்காக என்று நினைத்தோமோ, அந்த வயலின் கருவியை இசைப்பது வாழ்க்கையாக அமைந்தது. இதை கிரக நிலையின் அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்ப்போம். தனுசு லக்னம். லக்னாதிபதி குரு 7ஆம் இடத்தில். ஆறுக்கும் 11க்கும் உரிய சுக்கிரன் ஆறாம் இடத்தில். சந்திரன், இரண்டு மூன்றாம் இடத்துக்கு உரிய ஜீவனகாரகன் சனியின்   பூச நட்சத்திரத்தில் கடக ராசியில் ஆட்சி. 10க்குரிய புதன் ஆறாமிடத்தில் சுக்கிரனோடு இணைவு. புதன் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால், நல்ல கல்வியை தந்துவிட்டான். பத்தாம் இடத்து அதிபன் 6ஆம் இடத்தோடு தொடர்புகொண்டதால், ஏதேனும் ஒரு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கலாம்.

அப்படித்தான் நினைத்தேன். காரணம் குருவும் ஏழில் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். ஒன்பதாம் பார்வையாக உத்தியோகஸ்தானத்தையும் பார்க்கிறார். இப்படி இருந்தும் அரசாங்க வேலையை விட, சுய வேலைவாய்ப்பு (7), இசை (6+சுக்கிரன்) சம்பந்தப்பட்ட பணிகளில் வருமானம் (2,11) செய்யும் வாய்ப்பும் அமைந்தது. ஏழில் குரு சூரியன் அமைந்திருப்பதாலும், ஆறில் சுக்கிரன் புதன் இருப்பதால், தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட சுயதொழில் இணைந்து அமைந்தது. இதில், அவர் படிக்கும்போது நான் கவனிக்கத் தவறியது, ஆறில் ஆட்சி பெற்ற சுக்கிரன், இசைத்துறையில் பணியாகக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவாரா என்று சந்தேகப்பட்டதுதான்.

அதனால்தான், இசைப்பணியை, துணைத்துறையாக வைத்துக்கொண்டு கல்விப்பணியில், ஆசிரியர் வேலையை பிரதானமாக வைத்து கொள்ளலாம் என்று கருதினேன். அது தவறாகப் போய்விட்டது. நமக்கு இம்மாதிரி சந்தேகங்கள் வருகின்றது. கொஞ்சம் நிதானித்து, அந்த குறிப்பிட்ட துறையில் முயன்றால் இன்னும் சிறப்பாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது நான் கற்ற பாடம். நான் இந்த அமைப்பை, காலம்சென்ற பிரபல பின்னணிப் பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஜாதகத்திலும் கவனித்தேன்.

அவர் சிம்ம லக்கினக்காரர். அவருடைய ஜீவனகாரகன் அதாவது, பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரன், 11ஆம் இடத்தில் சனியோடு மிதுன ராசியில் இருப்பார். சனி ஆறு என்கிற இடத்திற்கும், ஏழு என்கிற இடத்திற்கும் உரியது அல்லவா.. 6 - பிறரிடத்தில் வேலை செய்தல். (அடிமைத்தொழில்), 7 - கூட்டு சேர்ந்தோ சுயமாகவோ தொழில் செய்தல். 6,7,3 (உத்தியோகம்,தைரியம்) 10 (ஜீவனம்,தொழில்)க்குரியவர்கள் 11ஆம் இடத்தில் இருப்பதும், இருவரும் (சனி,சுக்கிரன்) இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதும், அந்த 5ஆம் இடத்துக்கு குரு, தன ஸ்தானமாகிய கன்னிராசியில் இருப்பதும், ஒரு அற்புதமான கோள்களின் இணைப்பு ஆகும். இவர் இன்ஜினியரிங் படித்து இருந்தாலும் கூட, அந்தத் துறைக்குச் செல்லாமல், முறையான சங்கீதமும் கற்றுக்கொள்ளாமல், இசைத் துறைக்கு வந்ததும், அந்த இசைத்துறையில் புகழ் அடைந்ததும் பார்க்கின்றபொழுது, சூழ்நிலைகள் நம்முடைய வாழ்வின் பல விஷயங்களை தீர்மானிப்பதை அவதானிக்கலாம்.

இந்த அடிப்படையில் நாம், குறைந்தபட்சம் ஒரு குறிப்பறிவதற்காக, பிள்ளைகளின் முறையான ஜாதகத்தைக் காட்டி, நடக்கக்கூடிய தசா புத்திகளை அறிந்து, அந்தந்த துறைகளில் ஈடுபடுத்தினால், விதிக்கப்பட்ட துறையில் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நாம் விரும்பிய துறையில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதை விட, எந்தத் துறை அவர்களுக்கு இயல்பில் பொருத்தமாக இருக்கிறதோ அந்தத் துறையில் பயிற்சி தந்து முன்னேற்றுவது என்பது மிகவும் எளிதானது.

நான் இன்னொரு வாழ்வியல் உதாரணத்தையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்ட முடியும். அது, பிரபல நகைச்சுவைப் பேச்சாளர் திருவாரூர் சண்முகவடிவேல் அவர்கள் சொன்ன உண்மைச் சம்பவம். அவர் ஆசிரியராக பணியாற்றியபோது நடந்த சம்பவம். அவரிடத்தில் ஒரு அம்மாள், தன்னுடைய பையன் சரியாகப் படிக்கவில்லை. எனவே டியூஷன் சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லிச் சேர்த்துவிட்டார். இவரும் அந்தப் பையனுக்கு நல்லபடியாக டியூஷன் சொல்லிக்கொடுக்க முயன்றார். ஆனாலும், அந்தப் பையன் பாடத்தில் கவனம் செலுத்தாமல், எங்கேயோ தூரத்தில், யார் வீட்டு ரேடியோவிலோ, ஒலிபரப்பான இசைக்கச்சேரியை கவனித்து, விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், பையனின் அம்மாவை அழைத்து கனிவாகச் சொன்னாராம்.

“அம்மா, பையனின் கவனம் வேறு விஷயத்தில் இருக்கும்பொழுது எத்தனை முயன்றாலும் நான் சொல்லிக் கொடுக்கும் படிப்பு அவனுக்கு ஏறவில்லை. எனக்கு என்னவோ.... இவனுக்கு இசையில் நல்ல ஆர்வம் இருப்பதால், அந்தத் துறையை முறையாகச் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருப்பான் என்று தோன்றுகிறது. நீங்கள் அதில் முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல, அந்த அம்மையாரும் அந்தத் துறையில் அவரை ஈடுபடுத்தினார். அவர்தான் இன்று பிரபலமான உலகப் பிரசித்தி பெற்ற இசைக் கலைஞராக விளங்குகின்ற திருவாரூர் பக்தவத்சலம். என்னிடத்திலேயே திருவாரூர் சண்முகவடிவேல் ஒருமுறை இந்த நிகழ்ச்சியைச் சொல்லி, “ம்…

அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி பாஸ்மார்க் வாங்க வைத்திருந்தாலும் கூட ஏதாவது ஒரு சிறிய உத்தியோகத்தில் இவருடைய வாழ்நாள் கழிந்திருக்கும். ஒரு மிகப் பெரிய மிருதங்கவித்வான் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்” என்றார்.இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகின்றேன். ஜாதகத்தில் எல்லா விஷயங்களையும் பூரண மாகத் தெரிந்துகொண்டுவிட முடியுமா? என்ற சந்தேகம் வரும். ஒரு மருத்துவரிடம் ஒரு நோயாளி சென்று, “எனக்கு வயிறு வலிக்கிறது” என்று சொல்லுகின்றார். இப்பொழுது மருத்துவருக்கு வயிற்றுவலி என்பது தெரிந்து விடுகிறது. அதுவும் நேரடியான அனுபவத்தில் அவரே சொல்கின்றார்.

ஆனால், வயிற்றுவலி எத்தனையோ காரணங்களால் இருக்கும். மருத்துவர் இப்போது அந்த காரணங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து அதற்கேற்றவாறு மருந்து தர வேண்டும். அதற்காக அவர் சில சோதனைகளை எழுதிக் கொடுத்து டெஸ்ட் எடுத்துக் கொண்டு வரச்சொல்கின்றார். வயிற்றை ஸ்கேன் செய்யச் சொல்கின்றார்.அது கட்டி என்றால் எத்தகைய கட்டி என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு வைத்தியம் பார்க்கிறார். ஜாதக விஷயத்திலும் நாம் இதேபோன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

முதலில், நம்முடைய பிள்ளைகளின் நடவடிக்கைகள், அவர்கள் எதில் ஆசையோடும் கவனத்தோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அந்த ஆசைகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறதா ஏதாவது ஒன்றில் உறுதியாக இருக்கிறதா என்பதை முதலில் நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அந்த ஆர்வத்தைத் தெரிந்து கொண்டு, அந்த ஆர்வத்திற்கு அனுசரணையாக கிரகநிலைகள் ஜாதகத்தில் இருக்கிறதா, என்பதையும் கவனிக்க வேண்டும்.

சுக்கிரன் வலுவாக இருந்து, அது வருவாய் தரக்கூடிய லாபஸ்தானத்திற்கோ தனஸ்தானத்திற்கோ, தொடர்பின்றி இருந்தால், கலைத்துறை நன்றாக வருமே தவிர, வருமானத்துக்கு வழி இல்லாமல் போய்விடும். அப்பொழுது வருமானத்துக்கு வழிசெய்கின்ற 2,4,10,11 முதலிய இடங்களுக்கு தொடர்புடைய கோள் நிலைகள் எது என்பதைக்  கண்டுபிடித்து, அதற்குரிய ஒரு படிப்பை முயற்சி செய்யச் சொன்னால், விருப்பமில்லாத துறையாக இருந்தாலும் கூட வருமானம் வந்துவிடும். விருப்பமுள்ள அந்த இசைத் துறையும் கைக்குக் கிடைத்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு, எந்த துறை படிப்பு இயல்பாக வரும் என்பதை ஓரளவு அறிந்துவிடலாம். அதையும், அந்தப் பிள்ளையிடம் உள்ள ஆர்வத்தையும் வைத்துக்கொண்டு, ஓரளவு நாம் ஊகித்து, அந்தத் துறையில் அவருக்குப் பயிற்சி தந்தால் எதிர்காலக் கல்வி என்பது அவர்களுக்கு பிரகாசமாக அமையும்.

எந்தப் படிப்புக்கு எந்த கிரகம்? என்பது குறித்து சில டிப்ஸ்:

1) கல்விக்கு, புதன் ஜாதகத்தில் ஏதாவது வகையில் பலமாக இருக்க வேண்டும்.

2) வருமானத்திற்கு, இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி, இரண்டாம் இடத்தில் உள்ள கிரகம் பலம் பெற வேண்டும்.

3) உயர்கல்விக்கு, நான்காம் இடம் பலம் பெற வேண்டும் பயன் தரும்.

4) பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு, பல உயர்ந்த படிப்புகளுக்கு ஒன்பதாம் இடம் பலம்.

5) பத்தாம் இடம் ஜீவனஸ்தானம் என்பதால், படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை மற்றும் தொழிலை தரக்கூடிய இடம்.

இவர்கள் இணைந்த படிப்பை தேர்வு செய்வது வெற்றியைத் தரும். இவற்றோடு லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். 20 வயது முதல் 50 வயது வரை இந்த லக்னாதிபதிகளின் திசைகள் நடை முறையில் இருக்க வேண்டும். பொதுவாக, ஜாதகத்தில் லக்னம், கேந்திரம் மற்றும் திரிகோணம் வலிமைபெற்றிருந்தால், பிள்ளைகள் நன்கு கல்வியில் பிரகாசிப்பார்கள். கல்விக் கிரகமான புதன், ஆட்சி, உச்சம், நட்பு பலம் பெற்று, லக்ன, கேந்திர, திரிகோணங்களுடன் இணைவு பெற்றிருந்தாலோ, அறிவுக்கு அதிபதியான குருவும், மனோகாரகன் சந்திரனும் வலுப்பெற்றிருந்தாலோ படிப்பில் ஆர்வம் இருக்கும். படிப்பும் அற்புதமாக வரும்.

நன்கு படிக்கக்கூடிய பிள்ளைகளின் ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால் இந்த உண்மையை தெரிந்து கொள்ளலாம். அடுத்து இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. சிலர் ஆரம்பத்தில் நன்றாக படிப்பார்கள். பிறகு படிப்பில் பெரிய அளவு முன்னேற்றம் இருக்காது. சிலர் குறிப்பிட்ட வயது வரை சரியாகப் படிக்க மாட்டார்கள் படிப்பில் ஆர்வம் இருக்காது. பிறகு, அதீத ஆர்வத்தில் படித்து மிகப் பெரிய பதவிகளை அடைவார்கள்.

இதை, நடக்கக்கூடிய தசா புத்திகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வெறும் ஜாதகத்தை வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள், புதன் கிழமை தோறும், பச்சைப் பயறை உணவில் சேர்ப்பதுடன், ஹயக்கிரீவருக்கு நெய்தீபம் ஏற்றி துளசி இலையால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் கிடைக்கும். புதன் தலமான திருவெண்காட்டுக்கு ஒரு முறை சென்று, அங்கே உள்ள அம்பிகையையும் (பிரமவித்யாம்பிகை ) புதன் பகவானையும் வணங்கி வரலாம். இங்கு பிரம்மனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.

கிரகங்கள் தரும் படிப்புத் துறையைப் பற்றிய சிறு குறிப்புகள்:

1) ராகு நிழல் கிரகம். ராகு எந்த கிரகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பார்த்து சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம் படிப்பு படிக்கலாம்.

2) கேது மருந்து கிரகம். ஞானகாரகன். கேதுவின் நிலையைக் கொண்டு மருத்துவம், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கலாம். இதற்கு சூரியன் செவ்வாய் உதவி வேண்டும். லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம்.

3) புதன் - கணிதம், தகவல் தொழில் நுட்பம். கணக்கு சம்பந்தமான படிப்புகள், ஆடிட்டிங் படிப்பு, பி.காம், எம்.காம், அக்கவுன்டன்சி போன்ற துறைகள். லக்னம், லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண்டும். சூரியன், புதன் சேர்ந்து லக்னம், 2,4,9,10 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு.

4) சுக்கிரன் - கலை, அலங்காரம் போன்ற படிப்புக்கள்.

5) குரு - வேதாந்தம், கணிதம்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஏராளமான காரகத்துவம் உண்டு. கிரகங்களின் அமைப்பினாலும் பார்வையாலும் இந்தத் துறைகள் மாறும். எனவே அதை ஒரு கட்டுரையில் விரிவாகச் சொல்லிவிட முடியாது. தகுந்த ஜோதிடரிடம் காட்டி, தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொண்டால் நன்மை அடையலாம்.

Related Stories: