அப்பாவுக்கு 100 வது பிறந்தநாள். அவர்தம் ஆறு பிள்ளைகளும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து தங்கள் தகப்பனாரின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். பிறந்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன்னரே தங்கள் தகப்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டனர். தகப்பனுக்கு தெரியாமல், சஸ்பென்சாக பிறந்தநாள் வாழ்த்து ஏற்பாடுகள் செய்யத் துவங்கினர். தான் பெற்றெடுத்த பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் மிகுந்த பூரிப்புடன் தகப்பன் ஒவ்வொருவராக அன்புடன் அழைக்கிறார். ஆனால், அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்ட ஆயத்த ஏற்பாடுகளில் மிகவும் பிஸியாக இருந்தனர். என்ன இருந்தாலும் அப்பாவுக்கு அது கொஞ்சம் வருத்தம் தான். வீடு வெள்ளையடிக்கப்பட்டது,
சீரியல் பல்ப் விதம்விதமாக மின்னுகிறது, ஊர் முழுக்க டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது, ஊர் அழைத்து சாப்பாடு வழங்க பல லட்சம் ரூபாய் சமையல்காரருக்கு வழங்கப்பட்டது. ஐயோ, ஊரே விழாக்கோலம் பூண்டது. மணி இரவு 10 ஆகி விட்டது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிறந்தநாள் வந்துவிடும் என்பதால் அப்பா இருந்த அறையை அலங்கரிக்க வேண்டியது மட்டும் எஞ்சியிருந்தது. அப்பா கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நாம் செய்யும் வேலை அப்பாவுக்கு தொந்தரவாக அமைந்து விடக்கூடாது என அவரை கட்டிலோடு சேர்ந்து வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு அறைகளுக்குள் வேக வேகமாக வேலை நடந்தது. நேரம் 11.45 ஆனபோது தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை கட்டிலோடு தூக்கிக்கொண்டு அவரது அறைக்குள் கொண்டு வந்தார்கள்.
சரியாக 12 மணி ஆனதும் அப்பாவை எழுப்பி, விளக்குகளை எரியவிட்டு, பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம்.நேரம் 12 ஆனதும், மிகுந்த உற்றாகத்துடன் எல்லாரும் சேர்ந்து அப்பாவை எழுப்ப ஆரம்பித்தனர். ஐயோ, பரிதாபம்! அப்பாவுக்கு பேச்சுமில்லை, மூச்சுமில்லை. வீட்டிற்கு வெளியே வைத்தபோது கடும் குளிர் காரணமாக உடல் விரைத்து உயிர் பிரிந்ததை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். மிகுந்த கண்ணீருடன் தகப்பன் எழுதிய ஒரு கடிதம் அவரது படுக்கையில் சிக்கியது. அதில், என் பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகளும் தான் எனது உயிர். அவர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். ஆனால் அவர்களோ, என்னுடன் நேரம் செலவு செய்யாமல், எனக்காக நேரம் செலவு செய்கிறார்கள். என் பெயரால் விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னையோ கண்டுகொள்ளவே இல்லை என வருத்தத்துடன் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. வாசித்த குடும்பத்தார் ஐயோ, நாம் அப்பாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அப்பாவின் பிறந்தநாளை மட்டும் கொண்ட முயற்சித்து, இன்று அவரை இழந்து விட்டோமே என கதறி கதறி அழுதனர்.
இறைமக்களே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் அப்படித்தான். கிறிஸ்துவின் பெயரால் ஸ்டார் போடுகிறோம், புதிய உடைகள் அணிகின்றோம், விதம்விதமாக வீட்டை அலங்கரிக்கின்றோம். மொத்தத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இவை அனைத்தையும் செய்கிறோம். ஆனால், விழா நாயகன் இயேசு கிறிஸ்துவோடு தனித்து நேரம் செலவிடுகிறோமா? ஆம், நமது கொண்டாட்டத்தையும் ஆடம்பரத்தையும் விட, தகப்பனுக்கு தேவை நீங்கள். எனவே, அவர் பெயரால் உள்ள கொண்டாட்டங்களை தவிர்த்து, அவரையே கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நன்நாள் வாழ்த்துகள்!
– அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.
