மந்திரங்களின் சரியான பொருள் உணர்வோம்

நம் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் மறைபொருளில் மந்திரங்களாக சொல்லப்பட்ட காரணத்தால் பலரும் அறியவில்லை. விளக்கிச் சொல்வாரும் இல்லை. அதனால் பொருள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. கண்களுக்கு சூரியன், கைகளுக்கு இந்திரன் என்பது போன்று, நம் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கின்றனர் முன்னோர். இவைகள் அடையாளங்களே. குறியீடுகளே இதே போல…குழந்தை பிறந்ததில் இருந்து, வளர்ந்து பெரியவனாகும் அல்லது பெரியவளாகும் வரை ஒவ்வொரு பருவத்திலும் மனித உடல் பல மாற்றங்களை அடைகிறது. அவ்வாறு ஒவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்துக்கு, தெய்வத் தன்மைக்கு ஒப்புமைப் படுத்துவது முன்னோர் மரபு.

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம்வரை ஸோமன் எனப்படும் சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போல் குளிர்ச்சியாக இருக்கிறாள். பின்னர் பூப்பு எய்தும் பருவம் வரை விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பிய (வனப்பு) பெண் குழந்தையாக வளர்கிறாள். இந்தப் பருவத்தில் கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அதாவது விளை யாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய பருவம். பின்னர் அக்னியின் ஆதிக்கத்தில், அதாவது மண வாழ்க்கைக்குத் தயாராகும் உணர்வுகளுடன் இருக்கிறாள். அப்படிப்பட்ட பெண், குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கரங்களில் ஒப்படைக்கப் படுகிறாள்.

‘‘மூன்று பருவம் கடந்து உன்னை வந்தடையும் பெண்ணை ஏற்று தர்மத்தின் வழியில் அன்புகலந்த இல்வாழ்க்கையை நீ நடத்துவாய்’’ என்று ஆண்மகனுக்கு ஆசிகளை வழங்கச் சொல்கிறது இந்த சுலோகம். ஆதலால் செய்யுள்களை மொழிபெயர்க்கும்போது… செய்யுள் சொல்லும் கருத்தை மட்டுமே நாம் கொள்ளவேண்டும். செய்யுள்களில் சொல், அசை, சீர், அடியென இலக்கண அமைப்பு வரம்பு விதி உண்டு. அதற்கு உட்பட்டுதான் செய்யுள்கள் அமையும்.ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம். மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்னி எனும் தீயைப்போலவே, மத்யமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே வேத வாக்கியம் புலப்படுத் துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.

“ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருத்யோ அகநிஷடே பதி
துரீயஸ்தே மனுஷ்யஜா!’’
– என்ற வேதமந்திரம்

இனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள். இசையிறைந்த கனவுகளுக்கு நீர் இவளைக் கையளித்தது. பின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள். நீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும். அம்மூன்றும் ஆனவனால் இவள் நிறைவடைவாளாக! என்று மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சோமன் மயக்க மளிக்கும் நீர். அதன்பின் இசைத்தெய்வமான (வனப்பை கொடுப் பவன்) கந்தர்வன். அதன்பின்னர் அகநெருப்பாகிய அக்கினி.
கடைசியாக கணவன். கன்னித்தன்மையை இதைவிடக் கவித்துவமாகச் சொல்ல முடியுமா என்ன?

இந்த தேவதைகள் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கின்றன. நம்முடைய உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது காற்று நம் எல்லோரையும் தொடுகிறது.அதனால் அது ஒரு பெண்ணைத் தொட்டு விட்டால் அந்தப் பெண்ணை ஒரு ஆடவன் தொட்டது போல நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். அதே தான் மந்திரத்தி லும் வருகிறது.தண்ணீர். அது தொடாத பாகம் உண்டா? நம்முடைய உடம்புக்குள்ளும் தண்ணீர் இருக்கிறது. நாம் நம்மைச் சுத்தப் படுத்திக் கொள்வதற்கும் தண்ணீரைப் பயன்படுத்துகின்றோம். கன்னிப் பெண்கள் தண்ணீரில் குளிக்கிறார்கள். வருணன் என்ற ஆடவன் தொட்டு விட்டதாக கவிதையில் கூறுவதை முன்னதாக ஒரு ஆடவன் தொட்டு விட்டதாக கூறுவது அபத்தமல்லவா? அதைப் போலவே அக்னி. அக்னி ஒவ்வொருவரும் உயிரோடு இருப்பதை உணர்த்துகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அக்னி என்பது கிடையாது. அக்னி என்பது ஒரு பொதுவான ஒரு பொருள். ஆனால் அதை நாம் ஒரு மனுஷ ரூபத்தில் நம்மைப் போலவே இருக்கக்கூடியஒரு ஆளாகக் கருதிக்கொண்டு, என்னுடைய மனைவியை நீ வைத்திருந்து என்னிடம் தருகிறாய் என்று நாம் மந்திரத்தில் சொல்லுவதை அபத்தமாக மொழிபெயர்த்து குழப்பி கொள்ளக் கூடாதல்லவா. இதையெல்லாம் அறிந்து கொண்டால் இந்த மந்திரத்தில் எத்தனை உயர்வு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம் ஆனால் நாம் இந்த மந்திரங்களை மிகவும் தவறாகவும் ஆபாசமாகவும் பொருள் சொல்லி விவரம் புரியாமல் பேசுகின்றோம். இதில் சோமன் என்பவன் மணமகளுக்கு குணத்தைத் தருபவன். கந்தர்வன் என்பவன் மணமகளுக்கு அழகைத் தருபவன். அக்னிதேவன் என்பவன் மணமக்களுக்கு தேஜஸ் என்றும் ஒளியைத் தருபவன். இந்த வரிசையை நீங்கள் பார்த்தால் இன்னொரு நுட்பமான விஷயம் இதிலே விளங்கும்.

முதலில் சோமன் பிறகு கந்தர்வன் பிறகு அக்னி என்று இந்த வரிசை வருகின்றது. மணமக்களுக்கு முதலில் வேண்டியது குணம். அந்தக் குணம் தான் ஒரு மனிதனுக்கு அழகைத் தருகிறது அந்த அழகுதான் அந்த மனிதனுக்கு ஒரு கம்பீரத்தையும் ஒளியையும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தருகிறது முதலில் சோமன் தந்த குணம் மகளோடு சேர்ந்து இருந்தது. அந்த குணமானது அழகிய கந்தர்வனிடம் அவளைச் சேர்த்ததுகுணமும் அழகும் இணைந்து ஒளியாக மாறி அக்னியிடம் அவளைச் சேர்த்தது. அந்த அக்னி குணம், அழகு ஒளியோடு அந்தப் பெண்ணை என்னிடத்திலே சேர்த்தான் என்பது மந்திரம். எனவே குணமும் அழகும்ஒளியும் கொண்ட இந்தப் பெண் என்னிடத்திலே இன்று வந்து எனக்கு துணைவியாக சேர்ந்தாள் என்பதுதான் இந்த மந்திரத்தின் பொருளே தவிர, எந்தத் தவறான பொருளும் இந்த மந்திரத்தில் இல்லை. இதை புரிந்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

Related Stories: