ஸ்ரீரங்கத்து தேவதைகள்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: வேணுகோபாலன் (குழல் ஊதிய பிள்ளை) சந்நதி, ஸ்ரீரங்கநாதர் ஆலயம், ஸ்ரீரங்கம்

காலம்: ஹொய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளின் பட்டத்தரசி உமாதேவியால் (12ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்ட ஹொய்சாளர் கலைப்பாணி எனவும், விஜயநகர நாயக்கர்களின் (14-15ஆம் நூற்றாண்டு) வேலைப்பாடுகள் எனவும் இருவேறு கருத்துக்கள் ஆய்வாளர்களிடம் நிலவுகின்றன.

எழுத்தாளர் சுஜாதாவின் புகழ்பெற்ற சிறுகதைத்தொகுப்பின் தலைப்பு, பல நூற்றாண்டு காலமாய் பேரழில் பொங்க வீற்றிருக்கும் இந்த தேவதை சிற்பங்களுக்கும் மிகப்பொருந்தும். உலகின் வழிபாட்டிலுள்ள இந்து மத ஆலயங்களில் மிகப்பெரியதானதாகவும், வைணவர்களின் முதன்மையான வழிபாட்டுத்தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தினுள் ஏராளமான சிற்றாலயங்களும், சந்நதிகளும் உண்டு.`ரங்க வாசல்’ என பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் முக்கிய தென் திசை நுழைவாயிலான `ரங்கா ரங்கா’ கோபுரத்தினுள் நுழைந்து உள்ளே சென்றவுடன் ரங்கவிலாச மண்டபத்தின் இடது புறத்தில் அமைந்துள்ளது வேணுகோபாலன் சந்நதி.

நுணுக்கமான ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய `தர்பணசுந்தரி’ (கண்ணாடியில் தன் எழில் காணும் மங்கை), தாவர கொடிகளை கையில் பிடித்த படி நிற்கும் அழகி, `பன்’ (Bun) வடிவ கொண்டையுடன் வீணை இசைக்கும் மாது (உடைந்துள்ளது), நேர்த்தியான தூண்கள், அழகிய `கும்பலதா’ பூரண கும்பங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த கோஷ்டங்கள், கண்ணனின் சிறு வயது விளையாட்டுகள், நுண்ணிய குறுஞ்சிற்பங்கள் இடைவெளியின்றி நிறைந்திருக்கும் வெளிப்புற சுவர் என ஒவ்வொன்றாய் ரசித்துப்பார்க்க நேரம் போதாது.

ஆய்வாளர்கள் சிலர் `ஹொய்சாளர் கலைப் பாணி’ என்கின்றனர். வேறு சிலரோ விஜயநகரப் பாணி என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர். எவருடைய கலைப்பாணியாய் இருந்தால் என்ன? எழில்மிகு தோற்றத்தில் ஒயிலாய் நின்று காண்போரைக் களிப்பில் ஆழ்த்துகின்ற இச்சிற்பங்கள் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திற்கு வரும் வெளிநாட்டவர் அனைவரையும் கவர்ந்திழுத்து வியக்க வைக்கின்றனவே! அது போதாதா!?

மது ஜெகதீஷ்

Related Stories: