சிவன் - பார்வதி பகடை விளையாட்டு

சிற்பமும் சிறப்பும்-

காலம்: 8 - 9ஆம் நூற்றாண்டு, ராஷ்டிரகூடர்கள்

இடம்: குகை : 29, எல்லோரா குகைகள், மஹாராஷ்டிரா

தீபாவளி இரவில் சிவபெருமானுடன் பார்வதி தேவி பகடை விளையாடியது குறித்த நிகழ்வு ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவனும் பார்வதியும் விளையாடிய அப்பகடைப்போட்டி நாரதர் மற்றும் தேவர்கள் சாட்சியாக நடந்தது. தெய்வீக தம்பதிகள் விளையாடத் தொடங்குகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை முடிந்தவரை ஏமாற்றிக்கொண்டு விளையாடினர். பல சமயங்களில் சிவன் பார்வதிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காகத் தன் சொந்த விருப்பத்தால் வேண்டுமென்றே தோற்கவும் செய்தார்.பார்வதி முதலில் தோற்றார். அது கண்டு சிவனும் நாரதரும் பார்வதியைப்பார்த்து சிரித்தனர். பார்வதி முகம் கோபத்தில் சிவந்தது.

கோபத்திலும் அழகு உணர்ச்சிகள் மிளிரும் முகத்தை சிவன் மீண்டும் மீண்டும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தார்.மீண்டும் விளையாட மறுக்கும் அளவிற்கு பார்வதியைக் கோபப்படுத்தினார். அம்பிகை எவ்வளவு கோபப்படுகிறாளோ, அவ்வளவு அழகாக அவள் மாறுகிறாள் என்பதைக் கவனித்த சிவன், அவளை சமாதானம் செய்வித்து இன்னொரு பந்தயம் விளையாடும்படி  தூண்டுகிறார்.அடுத்த பந்தயத்தில் பார்வதி வெல்லும் நிலையில் இருந்தார்.

பார்வதி விளையாட்டில் தன்னை ஏமாற்றி வெல்வதற்காக முயற்சி செய்வதைக் கண்டறிந்த சிவன், பார்வதியின் வலக்கையைப் பிடித்திருப்பதையும்,அவர்களின் நுண்ணிய முக உணர்ச்சி களையும் இப்பேரெழில் சிற்பத்தில் அழகுற வடித்துள்ளனர்.குகை எண்-29, ‘சீதா-கி-நஹானி’ என்ற நீர்வீழ்ச்சியால் உருவாக்கப்பட்ட குளத்திற்கு அருகில் உள்ள  எல்லோராவிலுள்ள மிகப்பெரிய குடைவரைகளில் ஒன்றாகும்.

26 அழகிய பெரும் தூண்கள் தாங்கி நிற்கும் கூரையுடன் கூடிய ஒரு பரந்த மண்டபம் (அளவு - 148 அடி நீளம், 149 அடி அகலம் மற்றும் 18 அடி உயரம்) அகழ்ந்து எடுத்து உள்ளனர். பக்கவாட்டில் சிவபுராண நிகழ்வுகளைச்சித்தரிக்கும் பல சிற்பங்கள் நேர்த்தியான முகபாவனைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.கல்யாணமூர்த்தி (சிவ பார்வதியின் திருமண விழா), சிவன் அந்தகாசுரனைக் கொன்றது, ராவணனுக்ரஹமூர்த்தி - ராவணன் கைலாச மலையைத் தூக்க முயற்சிப்பது, நடராஜர், சிவன் லகுலிசராக தியானம் செய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மது ஜெகதீஷ்

Related Stories: