மலர்ந்தது குடியரசு..!

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று இந்த உலகை விட்டு மறைந்த பிறகு, “அடுத்த ஆட்சியாளர் யார்” எனும் கேள்வி எழுந்தது.நபித்தோழர்கள், மதீனாவாழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, பல்வேறு விவாதங்கள், கலந்துரையாடல்களுக்குப் பிறகு இறைத்தூதரின் நெருங்கிய தோழரும், தலைமைப் பண்புகள் அனைத்தும் நிறைந்தவருமான அபூபக்கர் அவர்களை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தனர்.இன்றைக்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க மின்னணு வாக்குப் பதிவு அல்லது வாக்குச் சீட்டு முறை நடைமுறையில் இருக்கிறது. அன்றைக்குப் பொது மக்கள் ஆட்சியாளருக்கு “பைஅத்”- எனும் சத்தியப் பிரமாணம் செய்துகொடுக்கும் முறை இருந்தது.

இறைத்தூதரின் பிரதிநிதியாக, முதல் கலீஃபாவாக - அதாவது இஸ்லாமியக் குடியரசின் முதல் அதிபராக - அபூபக்கர் தேர்வானார். பதவி ஏற்றபோது அவர் ஆற்றிய உரை:

“ஐயமில்லாமல், இப்பொழுது நான் உங்களால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பினும், நான் உங்களைவிடச் சிறந்தவனல்லன்.“நான் நேர்வழியில் நடப்பதற்கு எனக்கு நீங்கள் உதவுங்கள். நான் தவறிழைக் கும் பொழுது அதைச் சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துங்கள், சீர்திருத்துங்கள்.  “உங்களில் பலவீனர்கள் என் பார்வையில் வலிமை வாய்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தராமல் ஓய மாட்டேன். உங்களில் வலிமையானவர்களை நீதியுடனும் இரக்கத்துடனும் நடக்கச் செய்வேன்.

“மானக்கேடான விஷயங்களையோ பாவங்களையோ எவர் ஒருவர் செய்தாலும் சத்தியத்தின் பால் அவரைக் கொண்டுவந்து, இறைவனின் தண்டனையை நிறைவேற்றுவேன்.“நான் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படும் வரை எனக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். அவர்களுக்குக் கட்டுப்படுவதிலிருந்து நான் விலகினால் அப்பொழுதிலிருந்து நீங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டாம்.“எழுங்கள் அனைவரும். தொழுகைக்கு நேரமாகிவிட்டது. இறைவனின் பேரருள் நம் மீது பொழியட்டுமாக.”அபூபக்கர் அவர்களின் சீரிய தலைமையில் இந்த உலகில் மலர்ந்தது இஸ்லாமியக் குடியரசு.உலக வரலாறு, முதல் நான்கு கலீஃபாக்களை - குடியரசுத் தலைவர்களை - “நேர்வழி சென்ற ஆட்சியாளர்கள்” என்று இன்றும் போற்றி மகிழ்கிறது.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: