தனியார் தொழிற்சாலைக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு மீண்டும் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: பெண்கள் இருவர் மயக்கமடைந்தனர்,மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் வேலை வழங்கியிருந்தது. இந்நிலையில் முதலில் இருந்த நிர்வாகம் கைமாறி வேறொரு நிர்வாகத்திற்கு சென்றது. தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்ததால் தொழிற்சாலையில் 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் என 172 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்களை புதியதாக வந்த தொழிற்சாலை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதனை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 வருட காலமாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்து பணியாற்றி வந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்களுக்கும் இதுநாள் வரை பணி வழங்க வில்லை. இந்த நிலையில் நேற்று காலை பணி நீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், பாமக மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன்ணண, மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர்கள் இஸ்மாயில், சீனிவாசன், உள்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீண்டும் பணி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் எஸ்பி ஜேசுராஜன், திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், வட்டாட்சியர் மதியழகன், மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டலின் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். அப்பொழுது ஓரிரு தினங்களில் இது குறித்து இருதரப்பினரையும் அழைத்து சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் வட்டாட்சியர் மதியழகன் ஆகியோர் உறுதி அளித்தனர். இதனை அடுத்து அனைவரும் மாலை 7 மணி அளவில் தற்காலிகமாக நேற்று போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இதனால் அந்த தொழிற்சாலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.*மயக்கமடைந்த பெண்தனியார் தொழிற்சாலை முன்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பிற்பகல் 12.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்களில் இருவர் அங்கே வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.*காத்திருப்பு போராட்டம்அப்பொழுது போராட்டக்காரர்கள் தற்போது உங்களது உறுதி மொழியை ஏற்று கொண்டு தொழிற்சாலை நுழைவாயில் போராட்டத்தை கைவிடுவதாகவும், மேலும் தொழிற்சாலையின் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயில் திடலில் வேலையை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் நாளை முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். …

The post தனியார் தொழிற்சாலைக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு மீண்டும் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: பெண்கள் இருவர் மயக்கமடைந்தனர்,மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: