தேனாக ஒலித்த ஆழ்வார்கள் பாசுரங்கள்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. புவனகிரியில் ஒரு திருமண மண்டபம். நண்பர் ஒருவரின் மணி விழாவுக்காகச் சென்றிருந்தேன். முதல் நிகழ்ச்சியாக ஒரு இசையரங்கம் நடந்து கொண்டிருந்தது. அந்த இசை அரங்கத்தைக்  கவனித்துக் கொண்டிருந்த எனக்கு புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அதற்குக் காரணமும் இருந்தது. துவக்கத்தில் இருந்து முடிவு வரை, முழுக்க முழுக்க நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைக் கொண்டே, அந்த இசை அரங்கத்தில் பாடிக்கொண்டிருந்தார் திருமதி விஷ்ணுபிரியா சுதர்சன். முதல் பாசுரமாக, நாட்டையில், பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டுப்  பாசுரத்தைப்  பாடினார்.

அடுத்து, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவைப்  பாசுரம் ஒன்று ஹமீர் கல்யாணியில் தோய்ந்து, காதில் தேனாக ஒலித்தது. “தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய” என்று தொடங்கும் அந்தப்  பாசுரத்தில், ஆண்டாள் ஒரு கோபிகையின் வீட்டுக் கதவைத் தட்டி, “மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய், மாமீர், அவளை எழுப்பீரோ” என்ற வரிகளை மெய்ப்பாடு ததும்ப , திருப்பாவைக்  காட்சியை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது போல இழைந்தும், குழைந்தும் பாடிக்கொண்டிருந்தார்.

குரல் ரம்மியமாக இருந்தது.அதற்குப் பிறகு,  “மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே” என்ற குலசேகர ஆழ்வாரின் தாலாட்டுப் பாசுரத்தைப் பாடினார். “ஏவரி வென் சிலை வலவா இராகவனே தாலேலோ” என்று ராமனை, குலசேகர ஆழ்வார் மடியில் போட்டுத் தாலாட்டும்  ராகமாலிகையில் வரிசையாக வந்து விழுந்தன ராகங்கள்.

துர்கா, மாயமாளவ கௌள, சாரங்கா, ஹிந்தோளம் பாடி, முடிக்கும் பொழுது, நீலாம்பரியில் நம் நெஞ்சை நெகிழ்வித்தார்.“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ” என்கிற அற்புதமான நாச்சியார் திருமொழியை, அழகான கமாஸ் ராகத்தில் பாடிய கையோடு, திருமங்கை ஆழ்வாருக்கு வந்தார். திருமங்கை ஆழ்வாரின் திருவேங்கடப் பதிகமான “தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே  பட்டொழிந்தேன் உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்'' என்பதை அருமையான சாருகேசி ராகத்தில் பாடியபோது, அத்தனை

உருக்கம் இருந்தது.

சிதம்பரத்துக்கு அருகில் புவனகிரி இருந்ததால், பக்கத்திலேயே இருக்கக்கூடிய திவ்ய தேசமான, தில்லைத் திருச்சித்திர கூடத்தை விடக்கூடாது அல்லவா.

அங்கே குலசேகர ஆழ்வார் ராமாயணத்தின் அத்தனை நிகழ்வுகளையும் ஒரு பதிகத்தில் பாடி மங்களாசாசனம் செய்திருக்கிறார்.அதில் ஒரு பாசுரமான “ தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள், திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை” என்கின்ற பாசுரத்தை, மத்தியமாவதி ராகத்தில் மனமகிழ்வோடு பாடி நிறைவு செய்வதற்கு முன், துரிதகதியில் ஸ்ரீ ராமானுஜரின் வடிவழகை, வார்த்தை வார்த்தையாக வர்ணித்துக் காட்சிப்படுத்தும், பற்பமெனத்  திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே’ என்று தொடங்கும் அபூர்வமான எம்பார் பாடலை இரண்டுவிதமான தாளகதியில் பாடி நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அவருக்குப்  பக்கபலமாக  டாக்டர் ஸ்ரீ ராம் வயலின் வாசிக்க, அண்ணாமலைப்  பல்கலைகழகத்தின் மிருதங்க துறைப்  பேராசிரியர் விஜயேந்திரன் மிருதங்கம் வாசிக்க, சிதம்பரம் இலட்சியராஜ் முகர்சிங் வாசிக்க, நிகழ்ச்சி நிறைவாக இருந்தது.  இதில் டாக்டர் ஸ்ரீ ராம் அவருடைய தம்பி.மேலாண்மையியலில்  முனைவர் பட்டம் பெற்றவர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் திருமதி விஷ்ணு பிரியா சுதர்சன் அவர்களிடம் உரையாடியபோது நான் கேட்டேன். “முழுக்க முழுக்க ஆழ்வார்கள் பாசுரங்களை வைத்து ஒரு நிகழ்ச்சி அமைக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?”

அவர் சொன்னார். “பல வருடங்களாக கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்று பாடி வருகின்றேன். 15 வருடங்களுக்கு முன்னாலே” ஊர்கள் தோறும் திருமால் திருவிழா” என்று ஒரு நிகழ்ச்சி அமைப்பை ஏற்படுத்தி திவ்ய தேசங்கள் தோறும் திருமால் பாடல்களைப் பாடுவது என்று தொடங்கினோம். ஆனால் அது ஆதரவின்றி நின்றது.

இருந்தாலும் எனக்கு ஆழ்வார்கள் பாசுரத்தை முழுக்கச்சேரியாக செய்து அகிலம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஆசை.இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது.“ஏன் ஆழ்வார்கள் பாசுரங்கள்  பாடப்படுவது இல்லையா?” என்று கேட்டபோது அவர் சொன்னார்.“மிக அருமையாகவே அம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கச்சேரிகளுக்கு  இடையில் முடிக்கும் பொழுது திருப்புகழ் போல ஏதாவது ஒரு ஆழ்வார் பாசுரத்தைப்  பாடுவார்கள். அதுவும் வாய்ப்பிருந்தால் தான்.

ஆனால், ஆழ்வார்கள் பாசுரங்கள் அனைத்துமே இசைத்தமிழ் தான். நான்காயிரம் பாடல்களில்  3000 பாடல்களை பண் கூட்டிப்  பாடவேண்டும் என்பதால்தான் , ஆண்டாள்  போன்றோர்  இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் என்றே காட்டியிருக்கிறார்கள்.பண்கள்  பற்றி நிறையச் செய்திகள் ஆழ்வார்கள் பாடல்களில் உண்டு. பண்கூட்டிப் பாடவேண்டும் என்றுதான் இதனைத்  தொகுத்த நாதமுனிகளும்  வரையறுத்து கொடுத்திருக்கின்றார்.

சைவத்தில்  பண்  இசை பாட  ஓதுவார்கள் இருக்கின்றார்கள். சைவ மரபில் எந்த விழா நடந்தாலும், அதில் ஒரு பகுதியாக தேவார இசையை கட்டாயம் வைப்பார்கள், ஆனால் வைணவ நிகழ்வுகளில் பாசுரங்களை இயலாக சேவிப்பார்களே  தவிர, இசையோடு பாடப்படுவது  இல்லை. அந்தக் குறை என் மனதிலே இருந்துகொண்டே இருக்கிறது.

வேங்கட வரதன், கரந்தை தாமோதரன் போன்றவர்களெல்லாம் இந்த அருளிச்செயல் இசை பரவ வேண்டும் என்று பாடுபட்டார்கள்.

ஆனாலும் அருளிச்செயலை இசை நிகழ்ச்சியாக பாடுவதில் தயக்கமும் தடையும் இருக்கிறது. அதனை இயன்ற அளவு நீக்க வேண்டும் என்பதற்காகவே நானும் எனது தம்பியும் முயற்சி செய்து வருகின்றோம். தமிழிசை ஆர்வலர்களோ,  வைணவ அன்பர்களோ,  இப்படி ஒரு நிகழ்ச்சி அமைப்பதற்கு அழைத்தால்,  இயன்றவரை  பாடிக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்” என்று சொல்லி முடித்தார் திருமதி விஷ்ணுபிரியா சுதர்சன்.

அவர்களின் முயற்சி அற்புதமான முயற்சி;ஆழ்வார்கள் தமிழை இசையோடு கொண்டு செல்லும் முயற்சி, என்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தேன்.

கிருஷ்ணா

Related Stories: