சத்ருக்கள் பயம் விலக முத்துக்குமாரசுவாமி கோவில்

கடலூர் மாவட்டத்தில் முருகப்பெருமான், முத்துக்குமார சுவாமி பெயர்கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலமே முத்துக்கிருஷ்ணாபுரி என்று அழைக்கப்படும் பரங்கிப்பேட்டை. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இத்தல முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தால், சத்ருக்கள் பயம் விலகும் என்பதே முக்கிய காரணமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த இந்தக் கோவில்  யாரால் கட்டப்பட்டது என்று தெரியவில்லை. கொடி மரத்தையும், நந்தி மண்டபத்தையும் தாண்டியதும் விநாயகர் மற்றும் முருகன் சன்னிதியும், ஸ்ரீவிசுவநாதர்–ஸ்ரீவிசாலாட்சி சன்னிதிகளும் அமைந்துள்ளன. பிரகாரத்தில் ஆதிவிசாலாட்சி சமேத ஆதிவிசுவநாதர், பாலசுப்ரமணியர், ஸ்ரீநாகர், இந்திரனால் வழிபடப்பட்ட மகாலட்சுமி சன்னிதி ஆகியவை உள்ளன. சிவன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவசண்டிகேஸ்வரர் ஆகியோரும், முத்துக்குமாரசுவாமியின் மகாமண்டபத்தின் கோஷ்டத்தில் துர்க்கை, குகசண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

மற்ற சிவாலயங்களில் இல்லாத தனிச்சிறப்பாக இந்த ஆலயத்தில், பிரம்மா உட்கார்ந்த நிலையில் சிஷ்யபாவத்துடன் காட்சியளிக்கிறார். இரண்டு சண்டிகேஸ்வரர்கள் ஒரே ஆலயத்தில் இடம்பெற்றிருப்பதையும் இந்த ஆலயத்தில் காணலாம். முத்துக்குமாரசுவாமி கருவறைக்கு அடுத்த அர்த்தமண்டபத்தில் நடராஜர் சபையும், மகாமண்டபத்தில் நவக்கிரகங்களின் சன்னிதியும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள மண்டபத்தில் சூரியன், பைரவர், நவவீரர்களின் சன்னிதி இடம்பெற்றுள்ளன. விசுவநாதருக்கு நித்ய பூஜைகள் தவிர பிரதோஷ வழிபாடு, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் சோமவார வழிபாடு, மார்கழியில் தனுர்மாத பூஜை, மாசியில் மகா சிவராத்திரி நான்குகால பூஜை, மாசிமகத்தன்று சந்திரசேகர் தீர்த்தவாரி உற்சவங்கள் நடத்தப்பெறுகின்றன.

அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆடிப்பூரத்தின்போது சிறப்பு அபிஷேக ஆராதனையும், அமாவாசைதோறும் அர்த்தசாம பூஜையில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், வளர்பிறை அஷ்டமியில் துர்க்கைக்கு துர்க்காஷ்டமி அபிஷேக ஆராதனையும் நடத்தப்படுகிறது. ஆனி மற்றும் மார்கழி மாதங்கள் உள்பட வருடத்தில் ஆறுதடவை நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. முத்துக்குமார சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 7 மணியளவில் சத்ருசம்ஹார த்ருசதி அர்ச்சனையும், மாதந்தோறும் கார்த்திகை தினத்தன்று வைத்தீஸ்வரன்கோவிலில் அடியொற்றி சிறப்பு அபிஷேகமும், இரவு பரிகார உற்சவமும், வைகாசிவிசாக நாளில் சிறப்பு பூஜையும், கந்தசஷ்டியின்போது ஏழுநாள் உற்சவமும், தைமாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவமும் நடத்தப்பெறுகின்றது.

பிரம்மோற்சவத்தின் போது மயில், இடும்பன், சூரிய பிரபை, சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி பவனி வருவது எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். ஏழாம்நாள் வள்ளி திருமணமும், ஒன்பதாம்நாள் தேரோட்டமும், பத்தாம்நாள் சுவேதநதி எனப்படும் வெள்ளாற்றில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். இந்த ஆலயத்தில் தினமும் நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

சிதம்பரம்–கடலூர் சாலையில் புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக பரங்கிப்பேட்டையை அடையலாம்.

Related Stories: