திருத்தணி ரயில் நிலையத்தில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி: சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி, அவற்றை சிறுசிறு மூட்டைகளாக கட்டி, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் போல் ரயில்களில் ஆந்திராவுக்கு கடத்தி விற்பது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை டிவிஷன் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், சென்னை டிவிஷன் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் உத்தரவின்பேரில், அரக்கோணம் உதவி கமிஷனர் ஏ.கே.பிரிட் மேற்பார்வையில் நேற்று காலை 7.30 மணியளவில் திருத்தணி ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உஸ்மான், எஸ்ஐ சரவணன், காவலர்கள் பாபு, வீரேஷ் ஆகியோர் கண்காணித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது நடைமேடையில் இருந்த பலர் மூட்டைகளை ரயில்களில் ஏற்றியதை பார்த்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். அவர்கள் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளில் கடத்தி செல்வதற்கு தயார்நிலையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்ட மூட்டைகளையும் போலீசார் கீழே இறக்கினர். அவற்றை சோதனை செய்ததில், 35 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருத்தணி வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், ரயில்களில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயற்சித்த கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடுகின்றனர். …

The post திருத்தணி ரயில் நிலையத்தில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: