நம்பர் 1 மாநிலம்

2021 மே 7ம் தேதி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற போது உள்ள நிலைமை அனைவருக்கும் தெரியும். அத்தனை துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சியடைந்து பாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்தது. எல்லாவற்றையும்விட தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, கடன்கார மாநிலமாக தமிழகத்தை மாற்றி வைத்திருந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தின் கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி எட்டியிருந்தது. விழிபிதுங்கிய நிலையில் இருந்தது நிதிநிர்வாகம். ஆனால் ஒரே வருடத்திற்குள் தமிழக வரிவருவாய் 52 சதவீதம் உயர்ந்து இருக்கிறது என்ற செய்தி தமிழகத்தின் ஆட்சி முறையாக இயங்குவதையும், அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி இயக்குவதையும் உறுதி செய்து இருக்கிறது.இலவசம் வேண்டாம், இலவசம் நாட்டின் வளா்ச்சிக்கு பாதிப்பு என்று ஒன்றிய அரசு முழங்கி வருகிறது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் இணைந்த வளர்ச்சி தான் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி எந்தவித இலவசங்களையும் நிறுத்தாமல், இன்னும் சொல்லப் போனால் பெண்கள் அனைவரும் சமூக, பொருளாதார அளவில் ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி பெறுவதை, தன்னிறைவு அடைவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி.அதற்காக எந்தவித சமரசமும் செய்யவில்லை. முறையான நிர்வாகம், தெளிவான விதிமுறைகள் மூலம் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் மிகப்பெரிய அளவில் தமிழக வரிவருவாய் ஏற்றம் பெற்று இருக்கிறது. மாநில சுங்க வரி 116.3 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. விற்பனை, வர்த்தக வரி 38.3 சதவீதம், நில வருவாய் 53.5 சதவீதம், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் மூலம் வந்த வருவாய் 92.6 சதவீதம், மாநில ஜிஎஸ்டி 48.4 சதவீதம் என அத்தனை துறைகளிலும் அரசின் வரிவருவாய் உச்சத்தில் நிற்கிறது. இதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகத்தின் உதாரணம். இதுதான் பெருமை. இதுதான் தமிழக மக்கள் இத்தனை நாட்கள் எதிர்பார்த்த தருணம். அந்த நல்ல சூழல் ஒரே ஆண்டில் வந்து இருக்கிறது என்றால் மீதம் உள்ள 4 ஆண்டுகளில் எத்தனை பெரிய மாற்றங்கள், எத்தனை பெரிய வளா்ச்சிகள், எத்தனை நலத்திட்டங்கள் வரும் என்பது இதன்மூலம் உறுதியாகி இருக்கிறது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  கேட்டதைப்போல் தனிநபர் வருவாயை ஒன்றிய அரசு அதிகரித்து இருக்கிறதா?, வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறதா?. இல்லை சமூக வளர்ச்சிக்கான எந்தவித நடவடிக்கையும் எடுத்து இருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால் 75 ஆண்டுகள் இல்லாத வகையில் சுதந்திர இந்தியாவில் அரிசி, கோதுமை, தயிருக்கும் கூட வரி விதித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தமிழகத்தின் வளர்ச்சி மாடலை கைவிட்டு விட்டு நாம் ஒன்றிய அரசின் திட்டப்படி பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை வரி வருவாய் உயர்வு நிரூபித்து இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது போல் மிகை வருவாய் மாநிலம் என்ற இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்து நம்பர் 1 மாநிலம் என்ற இடத்தை பிடிப்போம்….

The post நம்பர் 1 மாநிலம் appeared first on Dinakaran.

Related Stories: