திருக்கண்டியூரில் அருட்கோலோச்சும் பிரம்மா சரஸ்வதி

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசர் ஆலயத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் தரிசிக்கலாம். பிரம்மாவுக்கென்று தனிக்கோயில் அளவுக்கு தனிச் சந்நதி எனில் அது இதுதான். நல்ல கட்டமைப்பு கொண்ட ஜீவக்கலை ததும்பி நிற்கும் சிலை. வேறெங்கும் காணமுடியாத திகைப்பூட்டும் அதிசயம் இது. மனிதனைப் படைத்த பிரம்மாவை அவரே படைத்துக் கொண்டாரோ என்று திணறடிக்கும் அழகு. நான்கு முகங்களிலும் ஞானத்தின் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று இடையறாது உதட்டில் பொங்குகிறது.

இப்படியொரு சிலையை வேறெங்கேயாவது காணமுடியுமா என்பது சந்தேகமே. அழகிய ஜடையின் அலங்காரமும், மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும், பூணூலின் மெல்லிய நுணுக்கமும் பார்ப்போரை மயக்கும் கலையழகு. அதுமட்டுமல்லாது தனது கணவனோடு அடக்கமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள். கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிறநாயகி.

அவ்விருவரையும் தரிசித்து பொங்கும் படைப்பில் திரண்டு நிற்கும் ஞான அமுதத்தை அகத்தில் தேக்குவோம். இத்தலம் தஞ்சை மாவட்டம் திருவையாறிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொகுப்பு: கிருஷ்ணா

Related Stories: