காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் தலைமை அலுவலகம் தாம்பரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சருக்கு பணியாளர்கள் கோரிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின்  தலைமை அலுவலகம், தாம்பரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைமை அலுவலகம்  காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் சென்னை, பிராட்வேயில் உள்ளது. இந்த பகுதி, கடும் நெரிசல் மிகுந்த பகுதியாகும். பார்க்கிங் வசதி கூட இல்லை. நியாய விலை கடைக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் பொழுது காஞ்சிபுரம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சுமார் 75 சதவீதத்திற்கும் மேலாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு  சென்னையில் பணிசெய்யும் பணியாளர்கள் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், நந்தம்பாக்கம், போரூர், சோழிங்கநல்லூர் பண்ணை பசுமை கடைகள் சரக நியாய விலை கடைக்கு 130 முதல் 140 கி.மீ. தூரம் பயணம் செய்து வேலை செய்து வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கடைகள் சென்னை ஆலந்தூரில் இருந்து துவங்கி மாமல்லபுரம், காஞ்சிபுரம் வரை செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி 3 சரகங்களை உள்ளடக்கி காஞ்சிபுரத்தில் ஒரு கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கென்று தனியே ஒரு துணை பதிவாளர், செயலர் கூட்டுறவு சார்பதிவாளர் தலைமையில் இயங்கி வருகிறது. பண்டக சாலையின் தலைமை அலுவலகம் சென்னை பிராட்வேக்கு பதில், காஞ்சிபுரத்தில் இருந்தால், நிர்வாகம் மேலும் வளர்ச்சியடையும். அதனால், காஞ்சிபுரம் கிளை அலுவலகம் மற்றும் சென்னை தலைமை அலுவலகம் இரண்டையும் ஒருங்கிணைத்து போக்குவரத்திற்கும் அனைத்து பணியாளர்களும் சிரமமின்றி பணிபுரிய மைய இடமான தாம்பரத்தில் ஒரே தலைமை அலுவலகமாக செயல்பட கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும். ஊழியர்களின் வசதியை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைமை அலுவலகம் தாம்பரத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்….

The post காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் தலைமை அலுவலகம் தாம்பரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சருக்கு பணியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: