*அருணகிரி உலா 100
‘‘கனகந்திரள்கின்ற’’ எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் செண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.
‘‘கனகந்திரள் கின்றபெ ருங்கிரிதனில்வந்துத கன்தகன் என்றிடுகதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனேகடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்கவளந்தனை உண்டுவ ளர்ந்திடுகரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனேபனகந்துயில் கின்றதி றம்புனைகடல்முன்புக டைந்தப ரம்பரர்படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனேபலதுன்பம்உழன்றுக லங்கியசிறியன்புலை யன்கொலை யன்புரிபவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே’’‘‘பொன் திரண்ட பெருங்கிரியாகிய மகாமேருவை அதன் செருக்கை அடக்கும் பொருட்டு, தகதகவென்று மின்னும் செண்டாயுதத்தை எறிந்தவனே!மதம் மிகுந்து, எண்ணற்ற வகையான உணவுகளைக் கவளம் கவளமாக உண்டு வளரும் ஆனை முகமுடையவருமான விநாயகருக்கு இளையவனாகத் தோன்றிய முருகோனே!அரவணை மீது துயிலும் திறனுடையவரும், கூர்மாவதார மெடுத்துக் கடல் கடைந்த வரும், விண்ணில் படர்ந்துலவும் நீலமேகம் போன்ற திருமேனி உடையவரும் ஆகிய திருமால் மிகுந்த அன்பு கொள் மருகோனே !பல்வேறு துன்பங்களால் மனம் சுழன்று கலக்க முற்றவள், அறிவில் சிறியவன், புலால் உண்பவன், கொலைத் தொழில் புரிபவன் ஆகிய அடியேன் செய்கின்ற பாவங்கள் இன்றோடு அழியும்படி அடியேன் முன்தோன்றி அருள் புரிய வேண்டும்.’’செண்டு என்பது தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவி, உக்ர பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த பொழுது மழை பொய்த்த ஒரு காலத்தில் அனைத்துயிர்களும் கலக்கமுற்றன. அரசன் சோம சுந்தரக் கடவுளை எண்ணித் துதித்தபோது, இறைவன், ‘‘மலைகளுக்கெல்லாம் அரசனான மேரு மலையின் கண் ஒரு குகையில் அளவற்ற நிதி வைக்கப்பட்டுள்ளது. நீ அங்கு சென்று அம்மலையின் செருக்கழியும் படிச் செண்டாயுதத்தால் அதை அடைத்து அடக்கி உனக்கு வேண்டிய பொருளைப் பெற்றுவா’’ என்று அரசனுக்கு அறிவுறுத்தினான்.மேருமலையை அடைந்து மலையரசனை விளித்தவுடன் அவன் வராததால் உக்ர பாண்டியன் செண்டாயுதத்தால் மலையின் சிகரத்தை ஓங்கி அடித்தபோது அது நடுநடுங்கியது. மலையரசன் சேமநிதி வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தெரிவித்தபோது, பாண்டியன் அங்கு சென்று தனக்குத் தேவையான பொன்னையும் பொருளையும் எடுத்து வந்து மதுரை மக்கள் வறுமையை நீக்கினான். ‘‘செண்டு மோதினர் அரசருள் அதிபதி’’ என்று செந்தூரிலும் பாடுகிறார் அருணகிரியார். மேருவைச் செண்டாலடித்த இந்நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் பதினைந்தாவதாகத் தரப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கணிகண்ணன் எனும் பக்தரின் பின் வரதராஜப் பெருமாள் ஆதி சேஷனாகிய தன் பாயலைச் சுருட்டிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறியரசமான குறிப்பு ‘‘சருவும்படி’’ எனத் துவங்கும் பரங்குன்றத் திருப்புகழில் வந்துள்ளது.
‘‘திருவொன்றி விளங்கிய அண்டர்கள்மனையின்தயிர் உண்டவன் என்டிசைதிகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ்பயில்வோர் பின்’’‘‘திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன், மிஞ்சு திறங்கொள வென்றடல்ஜெய துங்க முகுந்தன் மகிழ்ந்தருள் மருகோனே’’திருமழிசையாழ்வாரின் சீடரான கணிகண்ணன் என்பவர் காஞ்சி வரதரைச் சேவித்துத் திரும்பும் போது வயது முதிர்ந்த பெண் ஒருவள் கோயிலில் திருப்பணி செய்து கொண்டிருப்பதைக் கண்டார். வரதனை வேண்டி, கிழவியின் முதுகைத் தடவியதும், அவள் முதுமை நீங்கி இளமைப் பொலிவு பெற்றாள். இதுபற்றிக் கேள்வியுற்ற அரசன் பல்லவராயன் தன் முதுமையையும் நீக்குமாறு உத்தர விட்டான். கணிகண்ணன் ‘‘இது என் செயலன்று’’ ‘‘இறைவன் செயலே’’ என்று கூறி மறுத்தபோது அரசன் அவனை ஊரைவிட்டு வெளியேற உத்தரவிட்டான். கணிகண்ணன் குருநாதரிடம் விடை பெறப்போன போது, ஆழ்வாரும் அவனுடன் கிளம்பி விட்டார். அத்துடன் கச்சி வருவதைப் பார்த்து.
‘‘கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணன் நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச் செந்தாப் புலவோன் யான் செல்கின்றேன் நீயுமுன்றேன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’’என்று பாடினார்!!உடனே பெருமாளும் அவரைத் தொடர்ந்து மகாலட்சுமியும் ஊரை விட்டுச் சென்று விட்டன. ஊர்ப் பெரியோர்கள் மன்னனைத் தூற்றினர். காஞ்சி களையிழந்தது. மன்னனும் தன் பிழை உணர்ந்து, கணிகண்ணன், திருமழிசையாழ்வார், இறைவன், இறைவியர் பாதங்களில் வீழ்ந்து காஞ்சி திரும்புமாறு இறைஞ்சினான். கணிகண்ணன் அரசனை மன்னித்ததும் ஆழ்வார் தன் பாசுரத்தைத் திருப்பிப் பாடினார்.
‘‘கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சிமணிவண்ணன் நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச் செந்தாப் புலவோன் யான் செல்கின்றேன் நீயுமுன்றேன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’’ என்றார். உடனே பெருமாளும் தேவியுடன் காஞ்சி திரும்பி பைந்நாகப் பாயலை விரித்தமர்ந்தார்! ‘‘முருகுலாவிய’’ எனத் துவங்கும் திருப்புகழில் ‘‘இனிய பாவலன் உரையினில் ஒழுகிய கடவுள்’’ என்கிறார் அருணகிரியார்.‘‘பைந்தமிழ்ப்பின் சென்ற பசுங்கொண்டலே’’ என்கிறார் குமரகுருபரர். ‘‘அருக்கு மங்கையர்’’ எனத்துவங்கும் திருப்புகழில் மணிவாசகர் பற்றிய அழகிய குறிப்பு தரப்பட்டுள்ளது.
‘‘செருக்கு மம்பல மிசை தனி லசைவுறநடித்த சங்கரர் வழிவருமடியவர்திருக்குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர்திருக்குழந்தையு மென அவர் வழிபடுகுருக்களின் திற மென வரு பெரியவதிருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே’’என்பது பாடல். (கல்லாலின் கீழமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த சிவபெருமான், மண்ணுலகில் மணிவாசகருக்காகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளி குருந்த மரத்தடியில் அவருக்கு உபதேசம் செய்த வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது..‘‘சிற்றம்பலத்தில் களிப்புடன் அசைந்தாடும் சங்கரரும், வழிவழி அடியவராம் மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தடியில் உபதேசித்த வரும் சிவபெருமானது தெய்வீகக் குழந்தை என்றும், அப்பெருமானது குருமூர்த்தி என்ற நிலையிலும் ஆகிய இரு பெருமைகளுடன் பெரியவனாகப் பரங்குன்றத்தில் எழுந்தருளிய சரவணப் பெருமாளே!’’ என்பது பாடல் வரிகளின் பொருள்.நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் ராமாயணக் குறிப்புகளை வைத்துள்ள அருணகிரியார், திருப்பரங்குன்றத் திருப்புகழ்ஒன்றில் பின் வருமாறு பாடுகிறார்.
‘‘இரவு இந்த்ரன் வெற்றிக் குரங்கின் அரச ரென்றும், ஒப்பற்ற உந்தி இறைவன் எண்கினக் கர்த்தனென்றும், நெடுநீலன்எரிய தென்றும், ருத்ரற் சிறந்தஅனுமனென்றும், ஒப்பற்ற அண்டர்எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவஅரிய தன் படைக் கர்தத் ரென்றுஅசுரர் தங்கிளைக் கட்டை வென்றஅரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனேஅயனையும் புடைத்துச் சினந்துஉலகமும் படைத்துப் பரிந்துஅருள் பரங்கிரிக்குட் சிறந்த பெருமாளே!’’ராமாவதாரத்தில் தேவர்கள் பலரும் ராமனுக்கு உதவி செய்யப்பூமியில் வந்து பிறக்கின்றனர்.சூரியன் சுக்ரீவனாகவும், இந்திரந் வாலியாகவும், பூமியில் வந்து வாரைக் கூட்டங்களின் தலைவர்களாக விளங்குகின்றனர். பிரமன் கரடிக் கூட்டத்தின் தலைவனான ஜாம்பவனாகவும், அக்னி அம்சமாக நீலனும், ருத்ராம்சமாக அறிவாற்றலிற் சிறந்த அனுமனும் இவ்வாறு வந்து பூமியில் பிறக்கின்றனர். இவ்வாரை சிரேஷடர்களை தமது சேனைகளாகவும், சேனாதிபதியாகவும் கொண்டு ராவணன் முதலான, ஒற்றுமையுடன் விளங்கிய அரக்கர் கூட்டத்தை வென்று வெற்றி பெற்றவரும்,பாவங்களைக்களை பவரும் முக்தியை அளிப்பவரும் ஆகிய ராமபிரான் மெச்சும் மருகோனே’’ என்று பாடுகிறார். பாடலின் இறுதியில் முருகப்பெருமான் அடனைக் குட்டிச் சிறையிலிட்ட வரலாற்றையும் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.கயிலை மலையில் சிவபெருமானை வணங்க வந்த பிரமன் வாசலில் நின்ற முருகனை சிறுவன் தானே என்றெண்ணிக் கவனியாமல் சென்றார். அவரைத் தடுத்து நிறுத்தி, ஒன்றும் அறியாதவன் போல் முருகன் ‘‘நீ யார்’’ என்று கேட்க ‘‘நான் படைப்புத்தொழில் புரிபவன்’’ என்றார் பிரமன். ‘‘உனக்கு வேதம் தெரியுமோ? அப்படியானால் ரிக் வேதம் கூறு’’ என்று கூறினான் முருகன். ‘‘ஓம்’’ என்று பிரமன் ஆரம்பித்த போது அதன் பொருள் என்னவென்று முருகன் கேட்க, பொருள் கூற முடியாமல் விழித்தார் பிரமன். அவரைத் தலையில் குட்டிச் சிறையிலடைத்தான் முருகன். இதையே அருணகிரியார் இப்பாடலில், ‘‘அயனையும் புடைத்துச்சினந்து’’ என்றும் அதன் பின் தானே பிரம்ம சாஸ்தாவாக விளங்கி உலகத்தைப் படைக்கும் தொழிலையும் தானே ஏற்று நடத்தினான் என்பதை ‘‘உலகமும் படைத்துப் பரிந்து’’ என்றும் பாடுகிறார்.சந்தப் பாக்களால் நம் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்ளும் அருணகிரிநாதர், அவற்றில், முருகன் முன் வைக்கும் மனதை நெகிழ்விக்கும் வேண்டுகோள்களாலும் நம்மை அவனோடு ஒன்றச் செய்கிறார். ‘‘வரைத்தடம்’’ எனத் துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழில்
‘‘எரிப்படும் பஞ்சுபோலமிகக் கெடுந் தொண்டனேனும்இறைப்படும் தொந்தவாரி கரையேறஇசைத்திடுஞ் சந்த பேதம்ஒலித்திடுந் தண்டை சூழும்இணைப்பதம் புண்டரீகம் அருள்வாயே’’‘‘நெருப்பின் கண் வீழ்ந்து எரியும் பஞ்சு போன்ற மிகவும் கெடுகின்ற அடியேனாகிய சிறியேன் துன்பப்படும் பந்தபாசத்தினால் வரும் பிறவியாகிய கடலினின்றும் கரையேறி உய்யும்படி, இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பலவகையான சந்தங்கள் ஒலிக்கின்ற தண்டைகள் சூழ்ந்த தாமரை போன்ற இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தந்தருள்வாயாக’’ என்பது பொருள்.முருகன் என்றும் இளையோன். ஆதலில் அவனது சின்னஞ்சிறு திருவடிகளில் மணிகள் நிறைந்த தண்டைகள் விளங்குகின்றன. அவன் நடக்கும் போது பல்வகை சந்த பேதங்களுடன் அவை ஒலிக்கின்றன. அவ்வொலி கேட்டு சங்கரி மனம் குழைந்துருகுவதைச் செந்தூரில் பின்வருமாறு பாடுகிறார்.
‘‘தந்தன தனந் தனந்த ..னவெனசெஞ்சிறு சதங்கை கொஞ்சிட மணித்தண்டைகள் கலின் கலின் கலினெனத் திருவானசங்கரி மனங் குழைந்துருக முத்தம் தர. . . .’’(உலா தொடரும்)தொகுப்பு: சித்ரா மூர்த்தி