கந்தனே! உனை மறவேன்!

*இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 47

பக்தி வழிபாடும் ஆன்மிக எண்ணமும் கொண்ட அனைத்து அன்பர்களுமே விரும்பி வழிபடும் தெய்வமாக கந்தப் பெருமான் திகழ்கின்றார். ஆதி சங்கரர்  வகுத்த ஆறுசமய நெறிக்கும் பொதுவாக முருக வழிபாடு திகழ்கின்றது.

சகல லோகமும் மாசநு சகல வேதமுமே தொமு

மர மாபுரி மேவிய பெருமாளே என்றும்

அறு சமய சாத்திரப் பொருளோனே . . .

 

என்னும் வாக்கிற்கு அருணகிரியார் வடிவேலனைப் போற்றுகின்றார். கணபதி சுப்ரமணியம், சிவ சுப்ரமணியம், சக்தி குமார், ராம சுப்ரமண்யம்,   ஹரிஹர சுப்ரமணியம், சூரிய குமார் என்றும் சகல தெய்வப் பெயர்களுடன் சண்முகன் நாமம் மட்டுமே இணைந்து வருகிறது. கணபதியை வழிபடும்  அன்பர்கள் “ஆனைமுகனின் அன்பிற்குகந்த தம்பி’’ என்ற முறையில் பன்னிரு கண்வேலன் மீது அதிக பாசமும், நேசமும் வைத்து முருகப்  பெருமானைத் தொழுகிறார்கள்.குறவள்ளியோடு குமரனைக் கூடவைத்து திருமணம் செய்து வைத்தவரே கணபதி தானே !

அத்துயர் அது கொடு சுப்பிரமணிபடும்

அப்புனம் அதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கணம் மணமருள் பெருமாளே !

என்ற முதல் திருப்புகழைப்பாடியே முருகனை வணங்குகிறார்கள் விநாயகரின் பக்தர்கள். கந்தர் அலங்காரத்தில் பிள்ளையாரின் பெருமைகளைக்  கூறியே அவன் தம்பியாகிய முருகனைத் தொழுகின்றார் அருணகிரியார். இருகைகளையும் சேர்த்து அனைத்து தெய்வ சந்நிதிகளின் முன்பும் நாம்  அனைவரும் கும்பிடு போடுகிறோம். ஆனால் விநாயருக்குக் கும்பிடு மட்டும் போதாது. அவருக்கென்றே உரித்தான விசேஷமான வழிபாடு குட்டிக்  கொள்வது. அவர் பெருத்தவயிறோடு யானை முகக் கடவுளாகத் தோற்றம் கொண்டுள்ளார். களிற்றுக்கு இளைய களிறு” என்ற முருகனை  வணங்குகின்றார்கள். பக்தர்கள்.

 

அடலருணைத்  திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு

வடவருகிற் சென்று கண்டு கொண்டேன் வருரார் தலையில்

தடபடென படு குட்டுடன் சரக்கரை மொக்கியகை

கடகட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே.

சிவ நெறிச் செல்வர்களோ சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தோற்றம் கொண்ட ஆறுமுகப் பெருமானை “ஈசனே தன் ஆடலால் மதலை  ஆயினான்” என்று கூறுகின்றார்கள். தகப்பன் சாமி என்றும். சுவாமி நாதன் என்றும் “பிரணவ உபதேச மூர்த்தி’’ என்றும் சிவகுமரனைப்  போற்றுகின்றார்கள்.

சிவனார் மனங்குளிர உபதேச மந்திரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குரு நாதா

என்றும் சுவாமி நாத சுவாமியை வழிபடுகின்றனர். சிவன் வேறு, முருகன் வேறு என்று நினைக்காமல் பரமசிவனே பன்னிரு கண்வேலனாக வந்தான்  என்று குறிப்பிடுகின்றது தணிகைப் புராணம்.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்

தனக்குத் தானே ஒரு தாவரும் குருவுமாய்த்

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரிலான் தழங்கி நின்று ஆடினான்.

அம்பாளை வழிபடும் சாக்த நெறியினரோ சக்திக்குமரன் சண்முகனை பெரிதும் நேசிக்கின்றனர். வெற்றி வடிவேலனாக கந்தன் விளங்குவதற்குக்  காரணமே அம்பிகை தன் புதல்வருக்கு வேலாயுதத்தை அளித்ததால் தான்.“சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்” என்று  அம்பிகையிடமிருந்து முருகன்வேல் பெறும் நிகழ்வும் ஒரு விமரிசையான விழாவாகவே சிக்கலிலே கொண்டாடப்படுகிறது.

அறிவாகிய கோயிலிலே

அருளாகிய தாய் மடிமேல்

பொறிவேலுடனே வளர்வாய்அமரர்

புதுவாழிவு ஹவே புவிமீது அருள்வாய்

என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். சக்தியின் புதல்வனாக, கணபதியின் தம்பியாக, தந்தைக்கே உபதேசித்த சிவகுருநாதனாக முருகப் பெருமான்  விளங்குவதால் தேவி பக்தர்களும், கணபதி அன்பர்களும், சிவநெறிச் செல்வர்களும் முருகப் பெருமானை ஏற்றிப் போற்றுகிறார்கள். அருணகிரிநாதர்  மேற்காணும் முறைகளில் ஆறுமுகனை வழிபடுவதோடு அமையாமல் திருமாலின் மருகன் என்று பாடுவதிலேயே அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும்  அடைகின்றார். முருகனை “பெருமாளே, பெருமாளே” என்று அழைத்தே அனைத்துத் திருப்புகழ்ப்பாடல்களையும் நிறைவு செய்கின்றார்.

அண்ணாமலைத் தலத்தின் கோபுரத்தினின்று கீழே குதித்து அருணகிரியாரை செங்கரத்திலே தாக்கி “சும்மா இரு. சொல்லற” என்று உபதேசித்து பின்  அவர் நாவிளே வடிவேலால் தீட்டி முத்து முத்தாகப்பாடு என்று ஆணையிட “முத்தைத் தரு பத்திதிருநகை” என்று அருவி என திருப்புகழைப் பாடினார்  அருணகிரிநாதர்.  முருகப் பெருமானின் புகழைப்பாடும் அத்திருப்புகழை திருமால் பக்தர்கள் அனைவரும் மிகவும் விரும்பிப் படிக்கிறார்கள். காரணம்  அப்பாட்டில் திருமாலின் திருக்கதைகளாகிய ராமாயணம், மகாபாரதம், பாகவதம் மூன்றின் நிகழ்வுகளும் அடங்கி உள்ளன.

“பத்துத் தலைதத்த கணைதொடு” என்ற தொடரில் ராவணனை வெற்றி கொண்ட ராமாவதாரத்தின் புகழ் பேசப்படுகிறது.  “ஒற்றைக்கிரி மத்தைப்  பொரு” என்ற அடுத்த தொடரில் மந்திர மலையை மத்தாகவும் கொண்டு கடலை  கடைந்து அமுதம் எடுத்த பாகவத வரலாறு சொல்லப்படுகிறது.  “பட்டப் பகல் வட்டத்திகிரியில் இரவாக” என்ற வரிகளில் மகாபாரதத்தில் சக்ராயகம் ஏவி பகல் பொழுதிலேயே மாலை நேரத்தை வரவழைத்த  கிருஷ்ணரின் செயல் கூறப்படுகிறது. இவ்வாறு திருமாலின் புகழ் பெற்ற தசாவதாரக் கதைகள் பல திருமுருகனின் திருப்புகழில் காணப்படுவதால்  வைணவர்கள் முருகனை வணங்குகிறார்கள்

நேசிக்கின்றார்கள்.

 

மண் கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த

விண் கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துக்

திண் கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திரு அரையில்

கிண் கிணி ஓசை பதினான்கு உலகமும் கேட்டதுவே

என்று கருப்புக் குழந்தையான திருமாலின் திருவிளையாடல்களையும் சிவப்புக் குழந்தையான முருகனின் திருவிளையாடல்களையும் ஒரு சேரக்  காட்டுகிறது கந்தர்  அலங்காரக் கவிதை. திருமாலின் ராமாவதாரத்தைப் பாடிய கம்பர் பன்னிரண்டாயிரம் பாடல்களால் காவியம் பாடியும் அதில்  ராமனைக் குழந்தையாகப் பாவித்து கௌசல்யா தேவி அழைத்துக் கொஞ்சுவதாக ஒருவரிகூடக் காணப்படவில்லை. ஆனால் திருமுருகனின்  திருச்செந்தூர் திருப்புகழ் அற்புதமாக தசாவதாரப் பெருமாளை பத்து முறை வா, வா என்று அழைக்கிறது.

“எந்தை வருக, ரகு நாயக வருக, மைந்த வருக,

மகனே இனிவருக, என் கண்வருக,

எனது ஆருயிர் வருக அபிராம இங்கு வருக

அரசே வருக முலை உண்கவருக

மலர் சூடி வருக என்று பரிவினொடு

தோசயை புகழ வரும் மாயன்”.

அனைத்து மூர்த்திகளின் சீர்த்தியும், கீர்த்தியும், நோத்தியும் பூர்த்தியாக முருக வழிபாட்டில் பொலிகிறது எனச்  சொன்னால் அது மிகையில்லை.  அதனால் தான் கவியரசர் கண்ணதாசன் கீழ்க்கண்டவாறு அற்புதமாகப் பாடுகின்றார்.

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே !

தந்தை பரமனுக்குச் சிவ குரு நாதன்

தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்

அண்ணன் அவன் கணேசன்

கண்ணன் அவன் தாய் மாமன்

மாமிக்குப் பிள்ளை இல்லை

மருமகன் தான் திருமகன்.

“சமஷ்டி தெய்வம்” என்றே சண்முகனைச் சாத்திரம் போற்றுகின்றது.

“சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை

சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை

வேலை வணங்குவதே வேலை”

என்று செம்மொழித் தமிழ் போற்றும் செவ்வேளை எவ்வேளையும் வணங்கி எல்லா வேலையையும் எளிதாக முடிப்போம்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Related Stories: