தெளிவு பெறுஓம்
?தெய்வ நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?- யாழினி பர்வதம், சென்னை-78.
வித்தியாசம் என்று சொல்வதை விட இரண்டும் ஒன்றுதான் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். தன்னம்பிக்கை உள்ளவனிடம்தான் தெய்வநம்பிக்கை என்பதும் இருக்கும், தெய்வநம்பிக்கை உள்ளவனிடம்தான் தன்னம்பிக்கையும் வலுப்பெற்றிருக்கும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்ற அத்வைத சித்தாந்தத்தின்படி தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்தவனுக்கு என்றுமே கவலையில்லை. தன்னுள்ளே இருக்கும் இறைசக்தியை நம்பும்போது தன்னம்பிக்கை என்பது கூடுகிறது. தன் மீது நம்பிக்கை கூடும்போது இறைத்தன்மையின் சக்தியும் அதிகரிக்கிறது. தன்னை மட்டும் நம்பிக்கொண்டு இறைசக்தியை நம்பாதவர்களை நாத்திகவாதிகள் என்றுதானே சொல்கிறோம் என்ற சந்தேகம் இங்கு எழலாம். முழுமையாக தங்களை நாத்திகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதில்லை. ஒரு துன்பம் என்பது வரும்போது செய்வதறியாது தடுமாறிப் போகிறார்கள். அதே நிலைமை தெய்வநம்பிக்கை அதிகம் கொண்ட ஒரு ஆத்திகவாதிக்கு வரும்போது எல்லாம் இறைவன் செயல், அவன் பார்த்துக்கொள்வான் என்று எந்தவிதமான சஞ்சலத்திற்கும் ஆளாகாமல் இறைவனின்பால் தங்கள் சுமையை இறக்கிவைத்துவிட்டு தங்கள் கடமையைச் செய்து வெற்றியினைக் காண்பார்கள். அவர்கள் கொண்டிருக்கும் இறைநம்பிக்கையின் காரணமாக அங்கே அவர்களது தன்னம்பிக்கை என்பது உயருகிறது. வெற்றித் திருமகளும் அவர்களைத் தேடி வருகிறாள். ஆக தன்னம்பிக்கை வேறு, தெய்வ நம்பிக்கை வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
?கைகளில் கட்டும் கருப்பு கயிறுக்கு எத்தனை மாதம் வரை சக்தி இருக்கும்? சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக் கொள்கிறார்களே, இது சரியானதா?-கே.விஸ்வநாத், பெங்களூரு.வெறுமனே கருப்பு கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு கட்டிக்கொள்வது என்பது அவர்களது நம்பிக்கைக்கு உட்பட்டது. அதே நேரத்தில் தேவைக்கு ஏற்றவாறு கயிற்றினை வைத்து மந்திர ஜபம் செய்து கட்டுவது என்பதும் உண்டு. முழுமையாக மந்திர ஜபத்தினால் கட்டப்பட்ட கயிற்றிற்கு அது தானாக நைந்து போய் அறுந்துபோகும் வரை சக்தி என்பது நீடித்திருக்கும். அவ்வாறு மந்திரிக்கப்பட்ட கயிறுகளை கைகளில் கட்டி முடிச்சிடும்போது முடிச்சிற்கு அருகில் சிறிதளவு மிஞ்சியிருக்கும் பாகத்தினை கத்திரிக்கோலால் வெட்டிவிடக்கூடாது. அதனை அப்படியே கயிற்றிற்குள் சுருட்டி விட வேண்டும். கத்திரிக்கோல் வைத்து வெட்டும்போது அந்தக் கயிறு தனது மந்திரசக்தியை இழந்துவிடும். மந்திர சக்தியை இழந்துவிட்ட கயிற்றினை கட்டுவதில் எந்தவிதமான பலனும் உண்டாகாது. மந்திரித்து ஜபம் செய்யப்பட்ட கயிற்றினை கைகளில் கட்டியிருப்பவர்கள் பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு போன்றவற்றில் கலந்துகொள்ள நேரும்போது, வீட்டிற்கு வந்து ஸ்நானம் செய்தபின்பு சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தையோ அல்லது காயத்ரி மந்திரத்தையோ 108 முறை ஜபம் செய்ய கயிற்றின் மீதான மந்திரசக்தி மீண்டும் உயிர்ப்பெறும். இந்த கயிறு கருப்பு நிறத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதன் நிறமானது அவரவர் தேவைக்கேற்றவாறு மாறுபடும். உதாரணத்திற்கு கண்திருஷ்டி, நோய் முதலான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு கருப்பு நிறமும், எதிரிகளால் உண்டாகும் பிரச்னைகளை சந்திக்க சிகப்பு நிற கயிறும், வியாபார வெற்றி, தொழிலில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பச்சை நிறமும், உத்யோக உயர்வு, மங்களகரமான சுபநிகழ்வுகளை வேண்டும்போது மஞ்சள் நிற கயிறும் பயன்படும். ஆக கைகளில் மந்திரித்து கட்டப்படும் கயிறுகளின் நிறம் அதன் தேவைக்கேற்றவாறு மாறுபடும். வெவ்வேறு வண்ணங்களில் கைகளில் கயிறு கட்டிக்கொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. விதவிதமாக கயிறு கட்டிக்கொள்வதால் மட்டும் எந்த ஒரு பணியிலும் வெற்றி கண்டுவிட முடியாது. எண்ணமும், செயலும், இறைநம்பிக்கையும் ஒன்றிணையும்போதுதான் செயல்வெற்றி என்பது சாத்தியமாகிறது.
?நவமி திதியன்று கணவன்-மனைவி சேர்ந்து வெளியூருக்கு பயணம் செல்லக்கூடாது என்கிறார்களே, ஏன்?- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.இது முற்றிலும் மூடநம்பிக்கையே. பொதுவாக அஷ்டமி, நவமி திதிகளில் நாம் நற்செயல் எதையும் செய்வதில்லை என்றாலும் வெளியூர் பயணத்திற்கு நவமி திதி ஆகாது என்று ஜோதிடக் குறிப்புகளில் தனித்துக் குறிப்பிடப்படவில்லை. அதிலும் நீங்கள் சொல்வது போல் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து நவமி திதியன்று வெளியூருக்கு பயணம் செய்யக்கூடாது என்று பழங்கால ஜோதிட நூல்களில் எந்தவிதமான குறிப்பும் காணப்படவில்லை. பொதுவாக வெளியூர் பயணத்திற்கு ஒரு சில நட்சத்திரங்களை மட்டுமே தவிர்க்குமாறு ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அதிலும் கூட தம்பதியராக சேர்ந்து பயணிப்பதற்கு என்று தனியாக விசேஷ விதிகள் எதுவும் கிடையாது. க்ஷேத்ராடனம், தொலைதூர பிரயாணம் ஆகியவை செல்லும்போது நட்சத்திரங்களைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு திதியை மட்டும் கருத்தில்கொண்டு அந்த நாளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
?பூஜைக்கு முன்பு சங்கல்பம் செய்வது ஏன்?- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த காரணத்திற்காக இந்த பூஜையைச் செய்கிறேன் என்று தனது தேவையை இறைவனிடம் சொல்லி வேண்டி பூஜையை ஆரம்பிக்கும் நிகழ்வே சங்கல்பம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘குறிக்கோள் பகருதல்’ என்று அழைப்பார்கள். அதாவது தன்னுடைய குறிக்கோள் எதுவோ அதனை இறைவனிடம் தெரிவித்து வேண்டுதல் என்று பொருள் கொள்ளலாம். இந்த வகையான சங்கல்பத்தினை பூஜையின் துவக்கத்தில் சொல்லி வேண்டுவார்கள். இதே சங்கல்பத்தில் மற்றொரு வகையும் உண்டு. அதற்கு மன உறுதி அல்லது உறுதிமொழி என்று பெயர். இதிலும் ஒரு குறிக்கோள் என்பது முக்கியத்துவம் பெறும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் தன் பிள்ளைக்கு உடல்நிலை சரியாகும் வரை தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பேன் என்று ஒரு தாய் சங்கல்பம் செய்துகொண்டிருப்பாள், போருக்குச் சென்ற கணவன் உயிருடன் திரும்பி வரும் வரை தினமும் மண்சோறு சாப்பிடுவேன் என்று ஒரு மனைவி சங்கல்பம் செய்திருப்பாள். இதுபோன்ற சங்கல்பத்திலும் நோக்கம் அதாவது குறிக்கோள் என்பது உண்டு. ஆக, சங்கல்பம் என்பது தனக்குத் தேவையான ஒன்றை இறைவனிடம் கேட்டுப் பெறுகின்ற வகையில் தாக்கல் செய்யப்படுகின்ற மனு என்று பொருள் கொள்ளலாம். குறிக்கோள் பகருதல், உறுதிமொழி எடுத்தல் ஆகிய இரண்டுமே சங்கல்பம் செய்வதன் பொருளாக அமைகிறது.
?சிலர் ஜனன காலத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஜாதக பலன் பார்க்கிறார்களே, குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகருக்கு கிரஹங்கள் பலாபலன்களைத் தருகிறது?-விஜயாமாதேஸ்வரன், தர்மபுரி.குழந்தை இந்த பூமியில் ஜனித்த காலத்திலிருந்தே ஜனன ஜாதகத்திற்கான பலா பலன்கள் என்பது துவங்கிவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் கிரஹங்களின் தாக்கம் என்பது குழந்தை அன்னையின் வயிற்றுக்குள் இருக்கும்போதே துவங்கிவிடும். குழந்தை வயிற்றுக்குள் உருவாகும்போதே கிரஹங்கள் பலாபலன்களை தரத் துவங்கிவிடுகிறது. எளிதில் புரியும்படியாக சொல்லவேண்டும் என்றால் கிரஹண காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை வெளியில் வரவேண்டாம் என்று சொல்வார்கள் அல்லவா.. சூரியன், சந்திரன், ராகு, கேதுக்களின் தாக்கம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பையும் தந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் இதனை வலியுறுத்தினார்கள். ஆக குழந்தை ஒரு அன்னையின் வயிற்றுக்குள் உருவாகும்போதே கிரஹங்கள் தங்கள் பணியைத் துவக்கிவிடுகிறது. குழந்தை இந்த பூமியில் ஜனித்தவுடன், அந்தக்குழந்தையின் ஜனன ஜாதகத்திற்கான பலனை அறிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் ஒரு வயது முடியும் வரை அது கடவுளின் குழந்தை என்ற கூற்று உள்ளதால் அதுவரை ஜனன ஜாதகத்தை எழுதக்கூடாது என்பதையும் வழக்கத்தில் வைத்துள்ளார்கள். இதனால்தான் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை ஜனன ஜாதகத்தை பெரும்பாலும் யாரும் கணித்து வைத்துக் கொள்வதில்லை.