பூந்தமல்லி: போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். போரூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (68). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (65). இவர்களது மகன் பாலச்சந்தர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் நவநீதகிருஷ்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். சத்தியபாமா, வீட்டை பூட்டிவிட்டு போரூரில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். மதியம் வீட்டுக்கு வந்தபோது, கிரீல் கேட் மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 27 சவரன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து போரூர் போலீசில் சத்தியபாமா புகார் செய்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். சத்தியபாமா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு ஆசாமிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
The post வீட்டை உடைத்து 27 சவரன், ரூ.1.60 லட்சம் கொள்ளை; பட்டப்பகலில் துணிகரம் appeared first on Dinakaran.
