அரசு பஸ்களில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் காரையாறில் நாளை ஆடி அமாவாசை திருவிழா-ஏற்பாடுகளை சப் கலெக்டர் ரிஷப் ஆய்வு

வி.கே.புரம் : காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று முதல் தனியார் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கிய பஸ்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனிடையே இதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பல்ேவறு ஏற்பாடுகளை சப் கலெக்டர் ரிஷப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை திருவிழா  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நாளை (28ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் முதல்நாளிலேயே குடில் அமைப்பதற்கு தேவையான பொருட்களை கொண்டு சென்றனர். 2வது நாளாக நேற்று முன்தினம் காலை 6 மணி முதலே குடில் அமைப்பதற்கான பொருட்களுடன் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகே காரையாறு செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வாறு தனியார் வாகனத்தில் சென்று கோயில் பகுதியிலும், வனப்பகுதியிலும் குடில் அமைத்து தங்கியுள்ள பக்தர்களுக்கு அங்கேயே சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி செய்துள்ளதோடு தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று (26ம் தேதி) முதல் ஜூலை 30ம் தேதி வரை பக்தர்களின் தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் இங்கு வந்த தனியார் வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்பட்டன.அவற்றில் வருகைதந்த பக்தர்கள் நலன்கருதி அங்கிருந்து நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பேருந்து கட்டணமாக தலா ரூ.25 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான  பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அரசு பஸ்களில் ஏற்றி கோயிலுக்குச் சென்றனர்.  இந்நிலையில் நேற்று அகஸ்தியர்பட்டியில் அரசு பஸ்கள் நிறுத்தி உள்ள இடத்தை சப் கலெக்டர் ரிஷப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு பஸ் ஓட்டுநர், நடத்துனர்களிடம் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு பஸ்களில் வந்து இறங்கிய பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த சாமான்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து தலை சுமையாக கோயிலுக்கு கொண்டு சென்றதையும், கோயில் பகுதியில் குடில்கள் அமைந்துள்ள இடங்களில் பக்தர்கள் வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான தண்ணீரை பிடித்துச் சென்றதையும் பார்வையிட்டு ஆய்வு ெசய்தார்.இதனிடையே கோயில்களில் பக்தர்களின் நேர்த்திக் கடனுக்காக வெட்டப்படும் ரத்தம் மற்றும் கழிவு பொருட்கள் ஆற்றில் கலக்காதவாறு அப்பகுதியில் அமைக்கப்பட்ட மணல் திட்டுகளை ஆய்வுசெய்தார். இதனிடையே சொரிமுத்து அய்யனார் கோயில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் முன் பகுதியில் பக்தர்கள் பொங்கல் இடுவதற்காக தனியார் பங்களிப்புடன் புதிதாக மேல் பகுதியில் அடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் நின்றபடியே பொங்கல் விடுவதற்கு வசதியாக உள்ளது.அருவிகளில் குளிக்க தடை ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி அகஸ்தியர் அருவியிலும், மணிமுத்தாறு  அருவியிலும் ஜூலை 30ம் தேதி வரை குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது  என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா  தெரிவித்துள்ளார்.சுமந்துசெல்வதில் சிரமம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நேற்று முதல் தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இதன் காரணமாக அரசு பஸ்களில் வரும் பக்தர்கள் தாங்கள் சமையல் செய்வதற்கான பாத்திரங்களையும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஆடு போன்றவைகளையும் கோயில் விலக்கில் இருந்து அதாவது பஸ் நிறுத்தும் இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு பொருட்களை கோயில் பகுதிக்கு சுமந்து செல்வது மிகவும் கடினமானதாக உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கோயில் விலக்கு பகுதியில் இருந்து பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை மட்டும் கொண்டுசெல்ல மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது….

The post அரசு பஸ்களில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் காரையாறில் நாளை ஆடி அமாவாசை திருவிழா-ஏற்பாடுகளை சப் கலெக்டர் ரிஷப் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: