சடங்குகளை மீறலாமா?

வணக்கம் நலந்தானே!

இது இன்ன மதம். இது இந்த சம்பிரதாயம். இவர்கள் இந்த மரபின் அடிப்படையில் வருபவர்கள் என்பதையெல்லாம் அவரவர்கள் செய்து கொண்டு வரும்  சடங்குகளை வைத்துத்தான் சொல்ல முடியும். சடங்கு என்கிற சொல் பெரும்பாலும் இங்கு கேலியாகத்தான் பார்க்கப்படுகின்றது. உண்மையில் சடங்குகளுக்குள்  மதங்களின் வரலாறு இருக்கும். சடங்குகளுக்குள் மதத்தின் தத்துவக் குறியீடு இருக்கும். தினமும் ஒருவர் நெற்றிக்கு திருமண்ணையோ, குங்குமத்தையோ,  விபூதியையோ தரிக்கும்போது அவர் எந்த சம்பிரதாயத்தில் தன்னுடைய ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார் என்பதை தெரிந்து  கொள்கிறோம் அல்லவா?

ஒரு சடங்கை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் பரவாயில்லை. அந்த மரபை அவர் அவரையும் அறியாமல் காப்பாற்றியபடி அடுத்த தலைமுறைக்கு  ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார் என்பதே வெளிப்படை உண்மை. அடுத்ததாக, என்றோ ஒருநாள் தான் ஏன் இம்மாதிரி விபூதி பூசிக் கொள்கின்றோம் என்று  ஆழமாக யோசிக்கும்போது தத்துவத்தை நோக்கி நகர்ந்து விடுவார். ஞான யோகத்தில் விபூதி என்பது எல்லாம் அழிந்த பிறகும் அழியாத ஆத்ம சொரூபமாக  மிஞ்சி நிற்பதுதான் விபூதி என்று ஆழமாக அறியும்போது, விபூதியை தரிக்கும்போதே அந்தத் தத்துவம் அவருள் அகக் கதவுகளை திறக்கும். எல்லோரும் இப்படி புரிந்துதான் செய்கிறார்களா என்றால் என்றோ ஒருநாள் நிச்சயம் புரியும் என்பதுதான் உண்மை.

நாம் தொடர்ந்து செய்யும் காரியங்கள் நம்முள் நம்மையும் அறியாது ஒரு ஆழத்திற்குள் சென்று கொண்டேயிருக்கும். அந்தச் சடங்கு எதைக் குறிக்கின்றதோ அந்த  இலக்கானது மேல் மனதிற்கு தெரிய வரும். இந்து மதத்தில் நிறைய சடங்குகள் மிகவும் தொன்மையான காலத்திலிருந்து வருவதாகும். நிறைய பழங்குடி  மரபுகளிலிருந்து வருபவை. எனவே, இங்கு நாம் அன்றாடம் கடைபிடிக்கும் சடங்குகளை எந்தவித கேள்வியுமில்லாமல் ஒதுக்குவது கூடாது. ஏன் இந்தச் சடங்கை  இத்தனை வருடங்கள் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் என்று யோசியுங்கள். அப்படிச் சென்றால் ஒரு வரலாற்று நிகழ்வை சடங்காக மாற்றி வைத்திருப்பதை  அறிவீர்கள். அல்லது ஆன்மிக மரபில் வரும் ஒரு தத்துவத்தை உணர்த்தும்படியாக இருக்கும். அல்லது மூதாதையர்களின் சம்பிரதாயங்களை ஏந்தி வருவது  புரியும். பலதும் வழிகாட்டி பலகைபோல செயல்படுவதாகவும் இருக்கும்.

எல்லா சடங்குகளும் இப்படித்தானா?

இல்லை. அது உங்களின் ஆராயும் ஆழத்தைப் பொறுத்தது. பல சடங்குகள் காலத்தில் தானாக அதன் செறிவின்மை காரணமாக உதிர்ந்து விடும். அதனால், ஒரு  சடங்கை ஏற்றுக் கொள்வதற்கும், விட்டு விடுவதற்கும் தனி மனிதருக்கு உரிமை உண்டு. ஆனால், அதற்கு முன்பு சடங்குகளை முன் முடிவுகளோடு  எதிர்க்காதீர்கள். மெல்ல உற்று நோக்கி அது என்ன சொல்ல வருகின்றது என்று பாருங்கள். அதன் ஊற்றுக் கண் நோக்கி நகருங்கள். அப்போது சடங்குகளுக்குள்  ஆயிரம் வருடத்து சரித்திரம் கூட சுருள் சுருளாக சுருட்டி வைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள்.

கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)

Related Stories: