நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரம்!

கடவுள் மனிதனை தமது சாயலாகப் படைத்து உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் ஆளும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுத்தார். இவ்வாறு  கடவுள் மனிதன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார். ஆனால், மனிதன் கடவுளின் கட்டளைகளை மீறி அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி அனைத்து நிம்மதியையும் இழந்தான். இயற்கை  அவனுக்கு எதிராக எழுந்து நின்றது. மனிதனின் வாழ்க்கை மிகவும் கடினமானது. பல்வேறு இயற்கைப் பேரழிவுகளையும், சோகங்களையும் சந்தித்தான். இது கடவுள் மனிதன் இடையில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

‘‘இறுதி நாட்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்துகொள்.
Advertising
Advertising

தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர்,  செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர் அன்புணர்வு அற்றோர், ஒத்துப்போகாதோர்,  புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாக செயல்படுவோர்,  தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதைவிட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர். இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று  காணப்படுவார்கள். ஆனால் இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது, இத்தகையவர்களோடு சேராதே!

இத்தகையோரில் சிலர் வீடுகளில் நுழைந்து பேதைப் பெண்களைத் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர். இப்பெண்கள் பல்வேறு தீய நாட்டங்களால்  கவரப்பட்டு பாவங்களில் மூழ்கியுள்ளனர். இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ளமாட்டார்கள்.  இயன்னே, இயம்பிரே என்போர் மோசேயை எதிர்த்து நின்றதுபோல இம்மனிதர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீரழிந்த மனம்  கொண்டவர்கள். விசுவாசத்தில் தேர்ச்சியற்றவர்கள். ஆனால் இனி, இவர்கள் அதில் முன்னேற மாட்டார்கள். ஏனெனில் அவ்விருவருக்கும் நேரிட்டது  போன்று இவர்களின் அறியாமை வெளியாகி விடும்.’’ - (II தீமோத்தேயு 3: 1-9)

தினமும் ஜெபிக்கும் அன்பர் ஒருவர் அறியாமையில் எழுந்து இயற்கை சூழ்ந்த பகுதிக்குச்சென்று ஜெபிப்பது வழக்கம். ஒருமுறை அவரது நண்பர்  அவரிடம், ‘‘கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறாரே? நீ ஏன் அவரைத்தேடிக் காட்டிற்குச் செல்கிறாய்?’’ என்று கேட்டார். அதற்கு அந்த  அன்பர், ‘‘கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மைதான்! ஆனால் நான் எல்லா இடங்களிலும் இல்லையே?’’ என்ன செய்வது?  என்றாராம். நம்வாழ்வில் வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் அடிப்படைக்காரணம் நாம் சந்திக்கின்ற பிரச்னைகள் அல்ல, மாறாக நமக்குள் இருக்கும் எல்லாம்  வல்ல கடவுள் உடனிருப்பை உணராததே காரணம்.

கடவுளால் நாம் பாதுகாக்கப்படுகிறோம். எனவே தேவையற்ற பாதுகாப்பின்மை உணர்வும், பயமும், கலக்கமும், கண்ணீரும் வாழ்வில் தேவையில்லை.  தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. உலகில் எவ்வளவுதான் தீய சக்திகளும், எதிர்மறைத்தன்மைகளும் இருந்தாலும் இவற்றில் எதுவுமே  கடவுளிடமிருந்து பிறந்தவர்களைத் தீண்டி அவர்களின் பாதிப்பை ஏற்படுத்த இயலாது. உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனோடும் இயேசுகிறிஸ்துவோடும் இணைந்து வாழ்வதற்கான வரம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘‘பக்தி எவரிடம் பொங்கித்தழும்புகிறதோ அவருக்கு இறை தரிசனம் விரைவில் கிட்டும்.’’

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: