ராஜ துர்க்கை

ஆம்பரவனேஸ்வரர் கோயில் கூகூர் - கும்பகோணம்

ஈசனும், மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர். யாவினுள்ளும் நிறைந்திருக்கும் மகா சக்தியான பராசக்தியை நாடும் மாதவம் அது. தேவர்களும் அவர்களோடு இணைந்தனர். சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி ஹரியினுள்ளும், அரனுள்ளுமிருந்து ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் பிராட்டி.

பிரம்மனின் செம்மை அங்கு பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று. பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாகி மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார். கனலாகிச் சிவந்தாள் துர்க்கா. வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். அருணையின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் உதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தது.  

தங்களுக்குள்ளிருந்தே பிரமாண்டமாகப் பரந்தெழுந்த மகாசக்தியின் ஒளியையும், உருவமும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க, பாதம் பணிந்துத் துதித்தனர். ‘ஜெய்... ஜெய்...’ என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மஹாளய அமாவாசைக்கு முதல் தினம். பிரளயத்தில் பார்வதி காளியாகி வந்தாள். இப்போது மகாலக்ஷ்மியே துர்க்கையாக எழுந்தாள். சகல ஆயுதங்களையும் அவள் முன் மலையாகப் பரப்பினர். ராஜராஜேஸ்வரியாக நின்றவளுக்கு ராஜசிம்மத்தையே கொடுத்தான் இமயத்து ராஜன் ஹிமவான். சிம்மம் பிடரியைச் சிலிர்த்து கம்பீரமாக நடந்து தேவியின் அருகில் நின்றது.

- கிருஷ்ணா

Related Stories: