தடைகளை தகர்த்தெறிவார் தாமரைகுளத்து மகாராஜா

- மேலக்கடையநல்லூர், நெல்லை

Advertising
Advertising

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட மேலக்கடையநல்லூர் தாமரைக்குளத்தின் தென் கிழக்கு மூலையில்  அமர்ந்து அருட் பாலிக்கிறார் தாமரைகுளத்து மகாராஜா. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வானவர் தெருவில் வசித்து வந்த சலவைத்தொழிலாளிகள் தாங்கள் வளர்த்து வந்த கழுதைகளை அண்டை மாநிலமான கேரளாவிற்கு, பாண்டிய நாட்டில் விளைச்சலாகும் விளை பொருட்களையும், தானிய வகைகளையும் கொண்டு செல்ல சிறந்த வாகனமாக பயன்படுத்தி வந்தனர். கழுதைகள் மேல் பொதி மூட்டையாய் கட்டி சுமார் பத்து, பத்து கழுதைகளாக கால்நடையாக ஓட்டிச்செல்வார்கள். பத்து பேராக சேர்ந்து போக காரணம் அப்போது திருடர்கள் பயம் இருந்தது. பாண்டிய நாட்டு தானியங்களை கொண்டு செல்லும் இவர்கள்.

மலையாள நாட்டிலிருந்து அங்குள்ள ஏலம், மிளகு, தேயிலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அனுப்பும் வியாபாரிகள் கொடுத்து விடுவதை இங்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதற்கு கழுதைகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் உரிய கூலியை இங்குள்ள வியாபாரிகள் கொடுப்பார்கள். இந்த பணத்திற்கு சுமட்டு கூலி என்று பெயர். நாட்கள் சில உருண்டோட, ஒருநாள் ராக்கன் என்பவர் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டகழுதைகள் தானிய மூட்டைகளுடன் கேரளாவை நோக்கி புறப்பட்டது. அங்கிருந்து வரும்போது மலையாள நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு  வரும் வழியில் கொட்டாரக்கரை அருகே வந்தபோது அங்கே இருந்த மரநிழல், அருகே ஓடிய கல்லடை ஆறு இந்த சூழல் ராக்கனை அங்கே ஒரு நிமிடம் இருந்து போக தூண்டியது. அவ்விடம் சில மணித்துளிகள் இருந்த ராக்கன் மற்றும் உடன் சென்றவர்கள் ஆற்றில் இறங்கி குளித்தனர். பின்னர் அவ்விடமே உணவு சமைத்தனர்.

ஆற்று மீனும், சம்பா அரிசி சாதமும் உடனே சாப்பிட தூண்டியது. இருப்பினும் இலை இல்லை என்பதால் அங்கே வாழை மரங்களும் இல்லாததால் சற்று தொலைவில் நிற்கும் தேக்கு மரங்களிலிருந்து இலைகளை பறித்துக் கொண்டு வர அவர்கள் புறப்பட்டனர்.சமையல் செய்த சாதத்தையும் குழம்பையும் அந்த இடத்தில் வைத்துவிட்டு தேக்கு இலைகளை பறித்துக் கொண்டு தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். ஏழு பேரும் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதற்கு இலைகளை விரித்து மண் பானைகளை திறந்து பார்த்தனர். அப்போது பானையில் இருந்த பொங்கி வைத்த சோறும், ஆக்கி வைத்த மீன் குழம்பும் காணவில்லை. சுற்றிப்பார்த்தனர். யாரும் இல்லை. அங்கே நின்றிருந்த கழுதைகளையும், தானிய மூட்டைகளையும் காணவில்லை.

உடனே ராக்கனிடம் உடன் வந்த ஒருவர் கூறினார் ‘‘தானியமும், மீன் குழம்பும் காணாமல் போனது நமக்கு பெரிதல்ல ஆனா, கழுதை காணாமல் போனது மட்டும் துரைக்கு தெரிஞ்சா நம்மள கட்டி வைச்சு உரிச்சு சிறையில தள்ளி போடுவானே’’ என்று கூறினார். ‘‘அந்த கழுதைகளை வைச்சு தான நாம ஒருவேளை வைத்த கழுவினோம் அந்த கழுதைகளை பறிகொடுத்து நிக்கிறோமே’’ என்று கூறி அனைவரும் கூடி அழத்தொடங்கினர். மாலை மணி ஆறு ஆனது. அந்தி கருக்கல் பொழுதானது அவ்விடம் இருந்த சலவை தொழிலாளிகள் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.ஏழு பேருக்கும் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் அங்கே சோர்ந்து படுத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தில் பௌர்ணமி போல் வெளிச்சம் தோன்றியது. அந்த விநாடியேவிண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஓங்கி உயர்ந்த ரூபம் தென்பட்டது. வெட்டருவா வேல் கம்புடன் தோன்றியது...

அஞ்சி நடுங்கி எழுந்த ஏழு பேரும் உடனே எழுந்து செய்வதறியாது திகைத்தனர். தங்களை அறியாமல் இரு கரங்களையும் கூப்பி கண்ணீர் மல்க வணங்கி நின்றனர். ‘‘ஐயா, சாமி, நீ யாருன்னு தெரியல, இந்த இடத்தில வந்து சோறாக்கி சாப்பிட நினைச்சது தப்புத்தான். எங்களை மன்னிச்சிரு அய்யா’’ என்று குழுவாக சேர்ந்தே கூறினார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ராக்கன் ‘‘தெய்வமே ஒருவேளை சோத்துக்கு நாங்க இந்த பாடுபடுகிறோம் எங்களை ஏன் இப்படி சோதிக்கிற’’ என்றார். உடனே அந்த தெய்வம் தனது ரூபத்தை மாற்றி மானிட உருக்கொண்டு நின்று பேசத்தொடங்கியது. “அம்மை பகவதி வாசலில் கொலுவிருப்பவன், மணி விளக்கில் பிறந்த மாயாண்டி சுடலை நான்” என்றது.மேலும் “நீங்கள் இருக்கும் இடத்தில் எனக்கு ஒரு நிலையம் இட்டு வணங்கி வந்தால், உங்களையும், உங்கள் தலைமுறையையும் காத்து நிப்பேன்” என்று மாயாண்டி சுடலை வாக்கு கொடுத்தார்.

சுடலையின் அருளால் மீண்டும் கழுதைகள், தானியங்கள் ஆக்கி வச்ச சோறு மீன் குழம்பு என அனைத்தும் அவ்விடமே வந்தது. அவ்விடம் நிலவிய இருள் விலகி பௌர்ணமி போல ஒளி வந்தது. அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். மறுநாள் விடியற்காலை பொழுதில் அவ்விடமிருந்து புறப்பட்டனர். புறப்படும் முன் கொட்டாரக்கரை ஆற்றில் குளித்துவிட்டு மாயாண்டி சுடலையை நினைத்துக்கொண்டு அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணெடுத்து புனலூர், கழுதருட்டி, ஆரியங்காவு வழியாக... செங்கோட்டையை அடைந்து அங்கிருந்து திருக்குற்றாலத்தில் தீர்த்தமாடி குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பிகையும் அடிபணிந்து கடையநல்லூரை நோக்கி விரைந்தனர். அங்கிருந்து நேராக வானவர் தெருவுக்கு வந்து நடந்த விஷயத்தை ஊரார் முன் உரைத்தனர். இதுவரைக்கும் நாம சிவனையும், கிருஷ்ணனையும் தான் வணங்கி வந்தோம் இனி நமக்காக நம்மோடு வந்த காவல் தெய்வம்.

சுடலைமாடனையும் வணங்குவோம் என்று ஊரார்கள் முடிவு செய்து, வானவர் தெருவில் சுட்ட மண்ணால் சுடலைமாடனுக்கு நிலையம் இட்டு படையல் வைத்து பூஜித்து வந்தனர். மாதங்கள் சில கடந்த நிலையில் மாயாண்டி சுடலை வேறு இடம் தேடிச் சென்றார் .... அதாவது மேலக்கடையநல்லூர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்பாள் திருக்கோயிலுக்கு தென்புறத்தில் வந்தமர்ந்தார். தான் வந்ததை ஒருவர் மீது இறங்கி குறி சொல்லி அவ்விடமே நிலையம் கொடுக்கச் சொன்னார். அதன்படி சுடலைமாடசாமிக்கு 21 பந்தி 61 கூட்டுறவுடன் நிலையம் கொடுத்தனர் வண்ணார் சமூகத்தினர். அன்றைய காலகட்டத்தில் சாஸ்தாவை மட்டும் தனித்து கட்டிடத்தில் வைத்து வழிபட்டனர். மற்ற தெய்வங்கள் அனைவருக்கும் மண்ணை குழைத்து பீடம் கட்டினர். மகாராஜா மாயாண்டி சுடலைமாட சுவாமிக்கு கோயிலில் முதல் கொடை விழா நடந்தது. அப்போது சாமியாடி ராக்கன் மயான வேட்டைக்கு சென்றார்.

நள்ளிரவு நேரம் மயானத்தில் வரும்போது கரியமாணிக்கப் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள அக்ரஹாரம் வழியாக வந்தார். ஆங்கார ரூபம் கொண்டவரல்லவா மகாராஜா, ஆகவே வரும் வழியெங்கும் ஆதாளி போட்டு வந்தார். இந்த சத்தமும், கொடை விழாவும் இடையூறாக இருப்பதாக எண்ணி அப்பகுதியைச் சேர்ந்த அக்ரஹாரத்தார்கள் மறுநாள் காலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கொடை விழா நடந்து கொண்டிருந்த கோயிலுக்கு வந்து சாமியாடி ராக்கனை கைது செய்தனர். பிரிட்டிஷ் அதிகாரி சாமியாடி ராக்கனை அம்பாசமுத்திரம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கொடை விழா பாதியில் நின்றது. ராக்கன் சார்ந்த வண்ணார் சமூகத்தினர் மாயாண்டி சுடலையை தஞ்சம் அடைந்தனர். அன்று இரவே பிரிட்டிஷ் அதிகாரி கனவில் தோன்றிய சுடலை மாடசாமி “ஆதாளி போட்டது ராக்கன் உடலிலிருந்து நான் தான். என்னை வேண்டுமென்றால் கைது செய்து கொள். என் கொடி அவனை விடுதலை செய்” என்று கூறினார்.

அஞ்சி  நடுங்கிய பிரிட்டிஷ் காரர் மறுநாள் காலையில் ராக்கனை விடுதலை செய்ததோடு, அவருடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்கு வந்த ராக்கன் மேல் சாமி அருள் வந்தது. அப்போது பேசிய மாயாண்டி, நான் யாருக்கும் இடையூறாக இருக்க விரும்பவில்லை. எனக்கு வேறு இடத்தில் நிலையம் போட்டுத் தரவேண்டும் என்று கூறியது. உடனே பிரிட்டிஷ் அதிகாரி கேட்டார் ‘‘உனக்கு எங்கு நிலையம் வேண்டும் என்பதை எனக்கு புரியும்படி சொல்’’ என்றார். உடனே பிரிட்டிஷ் அதிகாரியின் குதிரையானது தானாகவே அங்கிருந்து புறப்பட்டு  மயானம் அருகே உள்ள தாமரைக்குளத்தின் கரைக்கு சென்றது. அங்கே தெற்கு முகமாக நின்றபடி கொட்டாரக்கரை நோக்கி மூன்று முறை தனது முன்னங்கால்களை மேலே எழுப்பி கத்தியது. உடனே பிரிட்டிஷ் அதிகாரி வண்ணார் குல மக்களிடம் சுவாமி விரும்பியபடி நிலையம் கொடுங்கள் என்றார். அதற்கு உண்டாகும் பணத்தை தருகிறேன் எனக்கூறி நிதி உதவி செய்தார்.

அதன்படி கோயில் மூன்று அறைகளுடன் உருவானது. கோயிலில் சுடலைமாடசுவாமி மாடத்தி அம்மன், முண்டன், தளவாய்மாடன், சப்பானிமாடன், சின்னதம்பி முதலிய தெய்வங்களுக்கு நிலையம் கொடுத்தனர். தாமரைகுளம் அருகே சுடலைமாடசுவாமி இருப்பதால் தாமரைகுளம் சுடலைமாட சுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டது. மையானத்தில் லிங்க வடிவில் சுடலைமாடன் கோயில் கொண்டுள்ளார். அப்பகுதி மக்களுக்கு மகாராஜாவாக இவரே திகழ்ந்ததால் மகாராஜா என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்து மகாராஜா சுடலைமாடன், தொழில், திருமணம், வீடு மனை வாங்க, கட்ட உருவாகும் தடைகள் எதுவாக இருந்தாலும் இவரது சந்நதி வந்து பழம், பூ, தேங்காய் வாங்கி வந்து பூஜித்தால் தடைகள் விலகுகிறது. நீதிமன்ற வழக்குகளையும் விரைந்து முடிய இவரை வணங்கினால் உடனே தீர்வு கிட்டுகிறது.

படங்கள்: ச.சுடலை ரத்தினம்

சு.இளம் கலைமாறன்

Related Stories: