சின்ன மம்மியை வரவேற்க யாரும் போகக்கூடாதுனு குக்கர் தலைவர் போட்டிருக்கும் உத்தரவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பூ போட்டு வரவேற்க சொன்னாராமே மாங்கனி விஐபி..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் இடைக்கால பொ.செ., பதவியை தட்டிப்பறித்த நேரத்துல, மாங்கனி மாநகருல எந்த ஒரு தொண்டனும், மாஜி விவிஐபிக்கு பட்டாசு வெடிக்கலையாம். தொண்டர்களின் ஆதரவு தனக்கு இல்லை என்பதை தெரிஞ்சுகிட்ட மாஜி, தான் ஊருக்கு வரும்போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்கணுமுன்னு, நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவு போட்டிருக்காரு. தலைநகருல எத்தனையோ பிரச்னை தலைக்கு மேல் இருக்கும் நிலையில், மாஜியோ மாங்கனி மாநகருக்கு வந்திருக்காரு. இப்படி வந்தவருக்கு மேம்பாலத்துக்கு மேல இருந்து, புஷ்பத்தை தூவி கோஷம் போடணுமுன்னு சொன்னாராம். இதன்படியே ஏற்பாடு செஞ்சு, தொண்டர்களும் புஷ்பத்தை வீசுனாங்களாம். ஆனா காருக்குள்ளேயே  இருந்த மாஜி, கண்ணாடிய கூட திறக்கலையாம். எல்லாம் கொரோனா பயம் தானாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாவட்ட பொறுப்பாளர்களின் மன ஓட்டத்தை மானிட்டர் செய்ய சேலத்துக்காரர் உத்தரவிட்டிருக்காராமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழக அரசியல்ல ஒற்றை தலைமை விவகாரத்துல இலைகட்சி கொஞ்சம் ஓவரத்தான் ஆட்டம் கண்டிருக்குது. இதுல, தேனிக்காரரும், சேலத்துக்காரரும் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில, அரசியல் தகிடுதத்தம் காரணமாக இலைகட்சியோட இடைக்கால பொதுச்செயலாளராக சேலத்துக்காரர் தேர்வு செய்யப்பட்டிருக்காரு. இதற்கிடையில சேலத்துக்காரர், தேனிக்காரரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகள்ல இருந்து நீக்குவதாக அறிவிச்சாரு. அதேபோல, தேனிக்காரரு, சேலத்துக்காரரோட ஆதரவாளரை நான் நீக்குறேன்னு, பெயர்பட்டியலை வெளியிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகள்ல இருந்து நீக்குவதாக அறிவிச்சாரு.  இலைகட்சியோட உள்வட்டத்துல தற்போது சேலத்துக்காரருக்கு சாதகமான சூழல் அமையும்னு அந்த கட்சிக்காரங்களே அரசல் புரசலா பேசிக்கிறாங்களாம். இந்நிலையில், தேனிக்காரரோட சாதூர்ய நடவடிக்கையால சேலத்துக்காரர் வட்டாரத்துல சலசலப்பு ஏற்பட்டிருக்குதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சேலத்துக்காரர், ஸ்டேட் புல்லா, தேனிக்காரருக்கு ஆதரவாக மாவட்ட பொறுப்பாளருங்க, பொதுக்குழு உறுப்பினருங்க யாரேனும் அணி தவுறாங்களான்னு, அவங்களோட மனஓட்டத்தை, மானிட்டர் செய்ய தன்பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மன்னர் மாவட்டத்திற்கு வந்து இருந்த சின்னமம்மியை புறக்கணித்து விட்டார்களாமே குக்கர் கட்சியினர்..’’‘‘ஆமா…  இந்த மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்ன மம்மியும், அவரது சகோதரர் மன்னார்குடிகாரரும் வந்து  இருந்தார்களாம். இருவரையும் வரவேற்பதற்காக குக்கர் கட்சியின் வடக்கு,  தெற்கு, மத்திய மாவட்ட செயலாளர்கள் தயாராகினார்களாம். இந்த தகவல் குக்கர் கட்சியின் தலைமைக்கு ரகசியமாக சென்றதாம். அவர்களை வரவேற்க யாரும் செல்லக்கூடாது என முதல்நாள் இரவே அங்கிருந்து அதிரடி உத்தரவு வந்ததாம்.  இதைத் தொடர்ந்து, சின்ன மம்மியை குக்கர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வரவேற்கவில்லையாம். இந்த தகவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவருக்கும் தெரிய வந்ததாம். இதனால் சின்ன மம்மி, அவரது சகோதரர் மன்னார்குடிகாரரும் கடும் கோபத்தில் சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குமரி அதிமுகவில் என்ன பரபரப்பு…’’‘‘அதிமுக  குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்ற நிலையில் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்து எப்போது வேண்டுமானாலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவியுள்ள நிலையில் அவர்கள் எடப்பாடி ஆதரவு முக்கிய தலைகளை பிடித்து பொறுப்புகளை வாங்க சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் குமரி மாவட்ட அதிமுகவினர் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுவை நிலவரம் என்ன..’’ ‘‘புதுச்சேரியில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் தந்தையின் கண் எதிரே மகன் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நெஞ்சம் பதற வைக்கும் வீடியோவை கண்டு, எல்லோரும் கொதித்துப்போனார்கள். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பே காரணம் என அரசின் மீது குற்றம் சாட்டினர். சம்பவம்  நடந்த உடனே சபாநாயகர் இவ்விவகாரத்தில் தலையிட்டு காவல்துறை உயரதிகாரிகளை   அழைத்து கூட்டம் போட்டார். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் அதிரடி காட்டினார். போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளை அழைத்து திடீர் கூட்டம் போட்டார். மாவட்ட நிர்வாகம் எப்போதும் சூப்பர் என்ற வகையில்  சம்பவம் நடக்கும் முன்பே புதுச்சேரி முழுவதும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்டு அகற்ற வேண்டும் என ஆர்டர் போட்டு, அதனை முன் தேதியிட்டு வெளியிட்ட கூத்துகள் நடந்தது. ஆனால் இவ்வளவு களேபரங்கள் நடந்தும்,  புல்லட்சாமியிடம் எப்போதும் போல ரியாக்‌ஷன் இல்லை. மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் அதிக பொறுப்பு இருக்கிறதே என பலர் சுட்டிக்காட்டியும். அதான் அமைச்சர்கள் கூட்டம் போட்டார்களே போதாதா, அதோடு  கவர்னர் உத்தரவு போட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறதே, இதற்கு மேல் நான் என்ன கூட்டம் போடுவது. எல்லாம் அதுபாட்டு நடக்கும் என்று புல்லட்சாமி கூறியிருக்கிறாராம். புல்லட்சாமி நாற்காலியை மட்டும் கொடுத்துவிட்டு, மற்றதெல்லாம் தாமரை பார்த்துக்கொள்கிறது. நீங்கள் 5 ஆண்டுகாலம் அமைதியாக இருந்தால் ஓட்டலாம் என்பதுதான் புல்லட்சாமிக்கான அசைன்மென்டாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா              …

The post சின்ன மம்மியை வரவேற்க யாரும் போகக்கூடாதுனு குக்கர் தலைவர் போட்டிருக்கும் உத்தரவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: