போலி ஆவணம் தயாரித்து அரசுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ரூ.50 கோடிக்கு விற்பனை செய்த 2 சார்பதிவாளர்கள் உள்பட 3 பேர் கைது: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசுக்கு தானமாக வழங்கிய நிலத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.50 கோடிக்கு விற்பனை செய்த 2 சார்பதிவாளர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபல குழுமம், சென்னை அண்ணா நகர் மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் அலுவலகம் அமைத்து 15க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் மிக முக்கியமாக வீட்டுமனை விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இந்த குழுமத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் நெமிலி, வடகால் மற்றும் ஆயக்குளத்தூர் பகுதிகளில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களை கிரயம் பெற்று, அந்த குழுமத்தின் பெயரில் வீட்டுமனை பிரிவு உருவாக்கி டிடிசிபி அப்ரூவல் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த அப்ரூவல் பெறுவதற்கு வீட்டுமனை உருவாக்கப்பட்ட பகுதிகளில் பொது உபயோகத்திற்கு, கிராம ஊராட்சிக்கு குறிப்பிட்ட இடத்தை தானமாக கிரயம் செய்து அளிக்க வேண்டும். அந்தவகையில் ஆயக்குளத்தூர் பகுதியில் ஊராட்சிக்கு அளிக்கப்பட்ட சுமார் 28 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பெயரில் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் நெமிலி கிராமத்தில் உருவாக்கப்பட்ட வீட்டுமனை பிரிவுகளில் அரசுக்கு தானமாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை குழுமத்தை சேர்ந்த அமலதாஸ், ராஜேஷ் மற்றும் சார்பதிவாளர் கூட்டு சேர்ந்து ரத்து செய்து விற்பனை செய்துள்ளனர். இதுபோல் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால், பால்நல்லூர், வல்லம் ஆகிய பகுதிகளில் தொழில் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களையும் அரசிடம் பெற்று பணம் பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு சார்பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் தான நிலங்களை ரத்து செய்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.மேலும் அரசுக்கு தானம் அளித்த நிலங்களை சட்டவிரோதமாக ரத்து செய்த பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜதுரை, காஞ்சிபுரம் எண் 2ல் இணை சார்பதிவாளராக பணிபுரிந்த சுரேஷ், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளராக பணியில் இருந்த ரவி ஆகியோர் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் போலி கையொப்பத்துடன் அளித்து தடையில்லா சான்று கோரியதற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலதாஸ் ராஜேஷ், சார்பதிவாளர்கள் சுரேஷ் மற்றும் ரவி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. மோசடி செய்து விற்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. கைதானவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 29ம் தேதி வரை 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post போலி ஆவணம் தயாரித்து அரசுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ரூ.50 கோடிக்கு விற்பனை செய்த 2 சார்பதிவாளர்கள் உள்பட 3 பேர் கைது: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: