பிரச்னைகள் தீர்க்கும் பிரத்யங்கிரா தேவி

சத்குரு ஆத்ம சைதன்யா தான் அன்றாடம் வழிபடும் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கு கோயில் அமைக்க வேண்டும் அதுவும் செந்தில்நாதன் அரசாளும் திருச்செந்தூரில் தான் அமைக்கவேண்டும். என்று எண்ணினார். அந்த எண்ணத்துடன் காசிக்கு பயணம் மேற்கொண்டார். காசி சென்று, அங்கிருந்து காமாக்யா சென்று  திருச்செந்தூரில் தேவி ஆலயம் நிர்மாணிக்க பிரச்னம் பார்க்கப்பட்டது. பிரசன்னத்தில் சில நிமித்தங்கள் தேவியின் திருவாக்கில் கூறப்பட்டது. அதில் ஆலயம் அமைவிடம் தென் திசை நோக்கியும் இடத்தின் மேல் கீழ் திசைகளில் தேவி சந்நதிகளும் வலது பக்கம் பரந்த வெற்றிட நிலமும் இடது பக்கம் சுடுகாடும் அமையும் என்றும், அவ்விடம் செல்லும் பொழுது பசு (கோமாதா) தென்மேற்கு திசையில் நிற்க அதன்மீது மயில் தொகை விரித்திடும் அவ்விடமே தேவி திருக்கோயிலுக்கு உகந்த இடமென பிரச்னம் கூறியது, அதை கருத்தில் கொண்ட சத்குரு ஆத்ம சைதன்யா, திருச்செந்தூர் அருகே உள்ள செட்டியாபத்து ஊரில் உள்ள ஐந்து வீட்டு சாமி திருக்கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்து திரும்பும் போது நடு நாலு மூலை கிணறு ஊரில் வெற்றிலைக் கொடியைக் கண்டு அவ்விடம் நோக்கினார்.

Advertising
Advertising

தென்மேற்கு மூலையில் கோமாதா மீது மயில் நின்று ஆடுவதை கண்டார். தேவியின் மகிமையை மனதால் பூஜித்து மற்றைய பிரச்ன நிமித்தமும் சரியாக இருக்க கண்ட  சத்குரு தேவி அமருமிடம் இதுதான் என அறிந்து ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கு அவ்விடத்திலேயே திருக்கோயில் அமைத்து 9 அடி உயரத்தில் அன்னையினுடைய விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். 2009 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இத்திருக்கோயிலில் தென்மேற்கு மூலையில் சொர்ண கணபதி அருட்பாலிக்கிறார். அவரை அடுத்து அரச மரமும், வேப்ப மரத்தையும் சுற்றி அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்னும் அஷ்ட நாகராஜாக்கள் அமர்ந்து அருட்பாலிக்கிறார்கள். இவற்றுடன் ஸ்தல விருட்சமான  நாகலிங்க மரத்தின் முன் ராகு கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  ஸ்ரீ மகா பிரத்யங்கிராதேவி சந்நதியில் சபா மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சங்கடம் நீக்கும்  மந்திர வாராகி தேவி. தேவியின் இடது புறத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

திருக்கோயிலின் சேத்திர பாலகனாய் அகோர வீரபத்திரரும், ஆகர்ஷண மூர்த்தியாய் சொர்ணாகர்ஷண பைரவரும், பைரவியும் அருட்பாலிக்கின்றனர்.

ஆண்டு தோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் ஒன்பது நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.மாசி மாதம் மகாசிவராத்திரி நமது ஆசிரமத்தில் அமர இருக்கும் நக்ஷத்திர வனத்தில் 27 நட்சத்திர லிங்கம் 12 ராசி லிங்கம் ஒன்பது நவக்கிரக லிங்கம் மற்றும் ஆதி குரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் விடிய விடிய நடைபெறும்.ஸ்ரீ நரசிம்மரின் கோபத்தை தணிக்க சரபேஸ்வரர் இடம் உருவான உத்தமமான தெய்வம். அதர்வண வேதத்தின் தாய் அபிசார தோஷங்களை விலக்கும். உயரிய பிரயோக தெய்வம். தேவியின் யோனி பீடமான காமாக்யாவிலிருந்து எடுத்துவரப்பட்ட யந்திரங்களால்  பிரதிஷ்டை செய்யப்பட்டது.

6 மாதம் தோறும் திருவாதிரை  நட்சத்திரத்தில் யோக குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி களபசந்தனாபிஷேகம் கல்வி உத்தியோகம் வேண்டுபவருக்காக நடத்தப்படுகிறது.8 மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில் புது தொழில் செய்பவருக்காகவும் செல்வ வளத்திற்காகவும் சொர்ண ஆகர்ஷண ஹோமம் நடைபெறும்.மாதந்தோறும் அமாவாசை திதியில் அருள்மிகு ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு சத்ரு சம்ஹார ஹோமமும் தேவிக்கு பிரம்மாண்ட முறையில் அபிஷேகங்களும் வேத பாராயணமும் நடைபெறும். இது சத்ருபயத்தை தீர்ப்பதற்காக நடைபெறுகிறது. இன்று மாலை கீழ் காவில் அமர்ந்து அருளட்சி செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்ர தேவிக்கு குருதியும் ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு அன்னக்கொடையும் சூன்யம் நீக்கும் முத்து இறக்கம் பூஜையும் நடைபெறும்.திருச்செந்தூரில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் நடு நாலு மூலை கிணறு ஊரில் சைதன்ய புரி என்ற நாமகரணத்துடன் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இத்திருத்தலம் அமைந்துள்ளது

ந. பரணிகுமார்

Related Stories: