×

சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம்

அசுரன் இரண்யாட்சனால் பாதாள உலகத்துக்கு கொண்டுவரப்பட்ட பூமிதேவியை மகாவிஷ்ணு வராக மூர்த்தியாக உருவெடுத்து மீட்டார். அவர்
பூமிதேவியிடம், “காவேரியின் தென்கரையில் ஒரு அரச மரமும், அதன் கரையில் பிரம்ம தீர்த்தக்குளமும் உள்ள தலத்தில் சிவபெருமானை பூஜை செய்” என்று பணித்தார். பூமிதேவியும், தேவதச்சன் விஸ்வகர்மாவிடம் சொல்லி கோயிலை நிர்மாணித்தாள். அங்கே உமாமகேஸ்வரரையும், உமாதேவியையும் மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்தாள். இத்தலத்தின் கிழக்கில் தீர்த்தத்தை உருவாக்கினாள். மூன்று வேளையும் அந்தத் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபடுகிறவர்களுக்கு முக்தி நிச்சயம்; வைகாசி மாதம் பௌர்ணமியில் விசாக நட்சத்திரம் கூடியிருக்கும் போது ஸ்நானம் செய்வது கோடி கோடி பலன்களை கொடுக்கும் என்ற சாந்நித்தியத்தையும் அந்த நீர்நிலை பெற்றது. பூமிதேவியால் ஈஸ்வரன் பிரதிஷ்டை செய்யப் பட்டதால், இத்தலம் ‘பூமிச்வரம்’ ஆயிற்று.

தன்முன் தோன்றிய பரமேஸ்வரனிடம், “எனக்கு காட்சி தந்த தாங்கள் இந்தத் தலத்தில் என்றென்றும் உமாதேவியுடன் விளங்க வேண்டும். இங்கு வந்து உங்களை தரிசிப்பவர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளித்து, அவர்களுடைய இறுதி நாட்களில் அவர்களுடைய செவியில் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்தி ரத்தை ஓதி அவர்களுக்கு நற்கதியளிக்க வேண்டும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு அனைத்துக் காரியங்களும் கைகூட வரம் அருளுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள். இத்திருத்தலம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது.    சோழப் பேரரசன் ஒருவன் சிற்பி ஒருவனிடம் நடராஜர் சிலை ஒன்றை வடிவமைக்கும்படி கட்டளையிட்டான். சிற்பியும் அந்த முயற்சியில் ஈடுபட்டான். ஆனால், என்ன காரணத்தாலோ சிலையின் நுணுக்கமான வேலைப்பாடுகளில் சிறு சிறு குறைகள் தென்பட்டன. இதனால் மனவருத்தமடைந்தான் அச்சிற்பி. ஒரு கட்டத்தில் தனது இயலாமையை அவன் தெரிவிக்க, மன்னன் வெகுண்டு, “இன்னும் ஒரே நாளில் சிலை முழுமையடையாவிட்டால் உன் தலை துண்டிக்கப்படும்” என்று கெடு வைத்தான். பயந்துபோன சிற்பி, சிவபெருமானை மனதாற வேண்டி, கடைசியாக சிலையில் சில திருத்தங்கள் செய்து பார்த்தான். அப்படியும் சிலை சரியாக வரவில்லை. அப்போது முதியவர் ஒருவர் சிற்பச் சாலைக்குள் நுழைந்து தான் மிகவும் களைத்துப் போயிருப்பதாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டார். மனமொடிந்து போயிருந்த சிற்பி,

இங்கு கொதிக்கும் உலோகக் கூழ்தான் இருக்கிறது. அதை அருந்தி உன் தாகத்தை தணித்துக் கொள்’’ என்று சீறி விழுந்தான். முதியவர் ஏதும் பதில் உரைக்காமல் அந்தக்கூழை கடகடவென்று குடிக்கத் தொடங்க... என்ன விந்தை! கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதியவரே நடராஜரின் பஞ்சலோக திருமேனியாக உருமாறினார். சொல்லொணா அழகுடன்  காட்சி தந்த அந்தச் சிலையை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்த சிற்பி ஓடோடிச் சென்று மன்னரிடம் நடந்ததை விவரித்தான். ஆனால், மன்னர் அவனை நம்பவில்லை. எங்கிருந்தோ ஒரு சிலையை கொண்டு வந்து வைத்து தன்னை ஏமாற்றப் பார்க்கிறான் சிற்பி என்று நினைத்தார். உடனே சிற்பியின் சிற்பச் சாலைக்கு வந்து அங்கிருந்த நடராஜர் சிலையின் திருவடியருகே கூரிய ஆயுதத்தால் குத்திப் பரிசோதித்தார். குத்துப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருகியது. அதைக்கண்டு பதறிய மன்னன் அப்படியே நடராஜர் சிலைமுன் வீழ்ந்தான்.

இன்றும் கோனேரிராஜபுரம் என்ற கிராமத்தில் (அன்னாளைய பூமிச்வரம்; திருநல்லம் என்ற தேவாரப் பெயரும் கொண்டது) 7 அடி உயரத்தில் அந்த சுயம்பு நடராஜர் வலக்காலை முயலகன் மீது ஊன்றி, இடக்காலை தூக்கி வலப்புறம் வீசிய நிலையில் விரிசடைக் கூந்தலுடன் காட்சியளிக்கிறார்.
புரூரவஸ் என்ற மன்னன் சாபத்தால் தொழுநோய் பெற்றவன். அவன் இத்தலத்திற்கு வந்து சென்ற முனிவரை குருவாகக் கொண்டு வைத்தியலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு அதன் பலனாக நோய் நீங்கி, பழைய அழகான உடலை திரும்பப் பெற்றானாம்.ராஜராஜ சோழப் பேரரசரின் பாட்டியார் செம்பியன் மாதேவி. இவர் இதே உமாமகேஸ்வரர் கோயிலை சிறப்பான கற்றளியாக அமைத்துள்ளார். ஐம்பொன் சிலைகளில் உலகிலேயே மிகப்பெரிய சுயம்பு நடராஜர் மற்றும் சிவகாமி, திரிபுராந்தகர், கல்யாண சுந்தரர் ஆகியோர் சிலைகள் அனைவருமே வியக்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளன. கலைநுணுக்கம் வாய்ந்த பிட்சாடனர், லிங்க தேவர், அகத்தியர், ஜுரஹர தேவர், அஷ்டபுஜ துர்க்கை கற்சிலைகளும் மிக அழகு வாய்ந்தவை. ஆலயத்திற்கு திருப்பணி செய்த செம்பியன் மாதேவி சிவ பூஜை செய்வது போன்ற புடைப்புச் சிற்பம் ஒன்றை தட்சிணாமூர்த்தி சந்நதிக்கருகில் காணலாம்.

கோபுரம் இல்லாத நுழைவாயிலை கடந்ததும் நீண்ட மண்டபம் ஒன்று நம்மை வரவேற்கிறது. முதலில் கண்ணில் படுவது இடப்புறம் உள்ள சுப்பிரமணிய சுவாமி சந்நதி. இரண்டு பெரிய பிராகாரங்களை கொண்டது இக்கோயில். சுவாமி உமாமகேஸ்வரர் சந்நதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகை நேச சுந்தரி (அங்கவள நாயகி) இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு பாகத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச் சிறப்புடையது. இதன் கோடியில் வைத்தியநாதர் சந்நதி உள்ளது.கும்பகோணம் - காரைக்கால் பேருந்து பாதையில் எஸ்.புதூர் என்ற இடத்திலிருந்து வலப்புறமாக பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் கோனேரிராஜபுரம் கூட்டு ரோடு வரும். அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் இந்த ஊரை அடையலாம். கும்பகோணம் மற்றும் ஆடுதுறையிலிருந்து வடமட்டம் செல்லும் பேருந்துகளில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டு ரோட்டில் இறங்கிச் செல்லலாம்.

Tags :
× RELATED வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!