சுகபோக வாழ்வருள்வார் சுகவனேஸ்வரர்

சேலம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையதாக திகழும் சிவத்

தலங்களுள் சுகவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று. நான்கு யுகங்களிலும் இத்தல இறைவன் பல்வேறு திருப்பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார். கிருத யுகத்தில் தேவர்களின் பாவத்தை போக்கியதால் பாபநாசர் என்று அழைக்கப்பட்டார். திரேதா யுகத்தில் காமதேனு எனும் தெய்வீகப் பசு வழிபட்டதால் பட்டீஸ்வரர் என போற்றப்பட்டார். துவாபர யுகத்தில், ஆதிசேஷன் வழிபட்டதால் இத்தலத்திற்கு நாகேஸ்வரர் என்கிற பெயர் உண்டாயிற்று. ஆதிசேஷன் வழிபட்டதால் இத்தலத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்றும், ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தம் அமண்டுக (தவளைகள் இல்லா) தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.

கலியுகத்தில் சுகப் பிரம்ம ரிஷி என்கிற கிளிநாசி உடைய முனிவரால் வணங்கப்பட்ட தலமாதலால் சுகவனேஸ்வரர் என்றும் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். மற்ற கிளிகள் இந்த ஈசனை பூஜிக்கும்போது வேடர்களால் தாக்கப்படாமல் இருக்க இவரே லிங்கத்தை காத்ததாகவும் ஐதீகம் உண்டு. விடாமல் செய்த சிவபூஜையின் காரணமாக சுகரோடு சேர்ந்த மற்ற கிளிகளும் சிவலோகம் அடைந்தன. இதனாலேயே சுகவனேஸ்வரர் கிளிநாதர் என்றும் ஆனார். இக்கோயிலில் கருணை பொங்கும் நாயகியாய் தனி சந்நதியில் ஸ்வர்ணாம்பிகை அருள்கிறாள். பச்சை நாயகி, மரகதவல்லி என்ற திருப்பெயர்களும் உண்டு. ஔவையார் கயிலாயம் சென்றது, காளத்தி வணிகன் உயிர் பெற்றது போன்ற சம்பவங்களால் அடியார்கள் இங்கே அருள் பெற்றிருக்கின்றனர்.  

இத்திருக்கோயில் கீழ்புறக் கோபுர வாயிலுக்குத் தென்பால் விநாயகர் சந்நதியுள்ளது. கோயிலுக்கென ஒரு பிராகாரமும் வெளியில் வீதியும் உள்ளன. முன்கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் தென்பிராகாரத்தில்  அறுபத்து மூவர், நால்வர், சப்த மாதா சந்நதிகளை தரிசிக்கலாம். மேற்குப் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், இரட்டை விநாயகர், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேல்புற வரிசையில் காசி விஸ்வநாதர், பஞ்சபூத லிங்கங்கள், சரஸ்வதி, கஜலட்சுமி, ஜேஷ்டா தேவி ஆகியோரும் அருட்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் வள்ளி - தெய்வானை சமேத முருகன் சந்நதியுள்ளது. மேலும், வடக்குப் பிராகாரத்தில் சண்டேஸ்வரர், சுவர்ண துர்க்கா, வடகிழக்கில் பைரவர், சூரியன், சந்நதிகள் உள்ளன. மகாமண்டபத்தை அடுத்து கருவறையில்  சுகவனேஸ்வரர் லிங்க வடிவில் அருட்பாலிக்கிறார்.

உலகத் துயர்களிலிருந்து விடுவித்து சகல சுகங்களையும் அளிக்க வல்லவர் இவர். இக்கோயிலிலுள்ள விகட சக்ர விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் என்கிற நோய் நீங்கும். இத்தலத்திலுள்ள நவகிரகங்களுள் ராகு, செவ்வாய், இருவரும் இடம் மாறியுள்ள அமைப்பு விசேஷமாகக் கருதப்படுகிறது. இவர்களை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும். தலவிருட்சம் பாதிரி மரம். சேலம் சந்திப்பிலிருந்து கிழக்கே 4 மைல் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Related Stories: