தண்ணீர் பந்தல் வைத்து பக்தனை காத்த பரமன்

ராஜாதி ராஜ, ராஜ பராக்ரம, ராஜ குல திலக மாமன்னர் ராஜேந்திர பாண்டியன் அவைக்கு வருகிறார் பராக் பராக். என்று அந்த வாயில் காப்பாளன் அறிவித்ததும் பாண்டியனின் அரசவையில் பரபரப்பு கூடியது. அனைவரும் எழுந்து நின்று மன்னனுக்கு மரியாதை செய்தனர்.  பாண்டியன் அரசவையில் நுழைந்தான். உடலெங்கும் திருநீறு மிளிறியது. அவன் வாயில் சிவ நாமம் விளையாடியது. மன்னனாகவும் இருந்தான். மதுரை சொக்கனின் தொண்டனாகவும் விளங்கினான். அவனைப் பார்த்ததும் அவனிடம் இருந்த தேஜஸைக் கண்டே அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி வந்தனங்கள் செய்தனர். இதற்கு சோழ நாட்டில் இருந்து வந்த தூதுவனும் விதிவிலக்கல்ல.

Advertising
Advertising

அவனும் எழுந்து நின்று மன்னனை வணங்கினான். பாண்டியன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தன் அரியணையில் அமர்ந்தான்.“ வாருங்கள் சோழ நாட்டு தூதுவரே! காடு வெட்டி சோழ மன்னன் நலம் தானே.” என்று தூதனை பார்த்து மன்னன் கேட்டான்.  “ மாமதுரை சொக்க நாதன் இருக்க காடுவெட்டி சோழ மன்னருக்கு என்ன குறை நலமோடும் வளமோடும் உள்ளார்” என்றான் அந்த தூதுவன். இதை கேட்ட பாண்டியன்,  “ ஆஹா! நம் சொக்க நாதரின் புகழ் அண்டை நாடுகளிலும் பரவி உள்ளது பூரிப்பைத் தருகிறது அமைச்சரே” என்று பாண்டியன் தன் அமைச்சரிடம் கூறினான்.

“ இருக்காதா மன்னா. நம் சொக்கன் காடுவெட்டிசோழனுக்கு அருளிய விதம் அப்படி” என்று அமைச்சர் சரியாக சொன்னார்.  “ சொக்கன் பக்தருக்கு அருளும் விதமே தனி. ஆமாம், காடுவெட்டிசோழனை எப்படி நம் சொக்கன் தடுத்தாட்கொண்டார்?”  என்று தன் அமைச்சரிடம் வினவினான் ராஜேந்திரன். அவர் தனக்கு தெரிந்ததை சொல்ல ஆரம்பித்தார்......

சோழ நாடு சோறுடைத்து என்பதற்கு ஏற்ப வளங்கள் எங்கும் மிகுந்து இருந்தது. அங்கு காஞ்சி மாநகரை தலை நகரமாக கொண்டு காடு வெட்டி சோழன் நல்லாட்சி புரிந்தான்.  அரசனாக இருந்தாலும் ஈசனின் கதைகளை கேட்டே நேரம் கழித்தான்.

இப்படியிருக்க ஒருநாள் அவனது குருநாதர் அவனுக்கு மதுரை சொக்கநாதரின் தனிப்பெரும் லீலைகளை விளக்கினார்.  சொக்கனின் திருவிளையாடல்களைக் கேட்ட பின் அவனைக் கண்டே ஆகவேண்டும் என்ற அவா சோழனுக்கு ஏற்பட்டது. ஆனால் பல வருடங்களாக பாண்டியனுக்கும் சோழனுக்கும் இருந்த பகை அவன் மதுரை சென்று ஈசனை வணங்கத் தடையாக இருந்தது. இதனால் சோழன் மனம் நொந்தான்.

சொக்கனைக் காணாத வாழ்வும் ஒரு வாழ்வா என்று எண்ணி வாழ்வையே வெறுக்கத் தொடங்கி விட்டான். சோழன் இவ்வாறு வருந்துவது ஈசனுக்கும் வருத்தத்தைத் தந்தது. ஆகவே அவனது கனவில் தோன்றினான்.  “ நாளை யாரும் அறியாமல் உன் பட்டத்து குதிரை மீது ஏறி நீ மட்டும் மதுரைக்கு வந்தால் எம்மை கண்ணாறக் கண்டு தரிசித்து விட்டு செல்லலாம் ” என்று கூறி மறைந்துவிட்டான். சோழன் ஈசன் கருணையை எண்ணி எண்ணி வியந்தான்.

அந்தி சாய்ந்ததும் வெண் புரவி ஒன்று ஏறி காற்றாக மதுரைக்குப் பறந்தான். மதுரையின் எல்லையை அடைந்தான். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வைகையைக் கடந்தால்தான் வையம் காக்கும் பரமனை தரிசிக்க முடியும். அதனால் மன்னன் செய்வதறியாது வைகை ஆற்றின் கரையில் நடு நிசி நேரத்தில் நின்று கொண்டிருந்தான். நேரம்தான் கடந்ததே ஒழிய ஒரு உபாயமும் கிடைக்கவில்லை. இறுதியாக ஈசனடியையே சரணாக அடைவது என்று முடிவெடுத்தான்.  

“ அப்பனே சொக்கா! உன்னைக் காண நீயே அருள் புரிய வேண்டும். நீ ஆணையிட்டே இங்கு நான் வந்தேன். ஆனால் இங்கு இப்படி ஒரு சோதனையா?. உன்னைக் காணாமல் திரும்பிச் செல்ல மனமும் இல்லை. இங்கேயே தங்கி உம்மைப் பார்க்க வாய்ப்பும் இல்லை. பிரபோ தீன தயாளா என்னைக் காத்தருள்வாய்.” என்று சோழ வேந்தன் சொக்க நாதனிடம் கண்களை மூடி கைகளை குவித்து மனமாற வேண்டினான். அப்போது அவனது தோள்களில் யாரோ ஒருவர் கை வைத்தது போல உணர்ந்தான்.

கண்களை திறந்து யார் என்று பார்த்தான். அவனது தோள்களில் கை வைத்தது வேறு யாரும் இல்லை ஒரு சிவனடியார் தான். அவரைக் கண்டவுடன் சோழ மன்னன் அவரது பாதத்தில் விழுந்து வணங்கினான். “ மகனே யார் நீ? பார்த்தால் அரசனைப் போல் தெரிகிறாய். ஆனால் இப்படி தனித்து நிற்கிறாயே ” என்று அந்த சிவயோகி வினவினார்.

 “சுவாமி நான் சோழ மன்னன். மதுரை சொக்க நாதர் என் கனவில் வந்தார். கனவில் வந்த அவர் என்னை இன்று இரவு நடு நிசியில் அவரை வந்து தரிசிக்கச் சொன்னார். நானும் வெகு தூரம் கடந்து இங்கு வந்தேன். பார்த்தால் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எப்படி இதை கடந்து என் அப்பனைப் பார்ப்பேன் என்றே விளங்க வில்லை. அதனால் தான் திகைத்துப் போய் நிற்கிறேன்.”  

 இதை கேட்ட அந்த சிவ யோகி கடைக் கண்களால் வைகையைப் பார்த்ததுதான் தாமதம். வைகை பொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. மன்னனுக்குத் தான் காண்பது கனவா இல்லை நினைவா என்றே விளங்க வில்லை. மன்னன் இந்த அதிசயத்தைக் கண்டு வாயடைத்து நின்றதை அந்த யோகி பொருட்படுத்த வில்லை. மாறாக மன்னனது வலது கையை தன் கையால் பிடித்துக் கொண்டு  வைகை ஆற்றின் படுகையில் மன்னனை நடத்தி அழைத்துச் சென்றார். அந்த யோகியின் ஸ்பரிசம் மன்னனுக்கு புத்துணர்வைத் தந்தது. அவர் நடக்கும் பொது திரும்பி மன்னனைப் பார்த்த போதெல்லாம் மன்னன் மனம் சொல்லொண்ணா ஆனந்தம் அடைந்தது.

அந்த சித்தர் வெகு லாவகமாக கோட்டையின் வடக்கு வாயில் பூட்டை சாவியிட்டுத் திறந்தார். முதலில் மீனாட்சி அம்மன் சந்நதிக்கு அழைத்துச் சென்றார். அங்கும் சரியான சாவி போட்டு சந்நதியைத் திறந்தார். “ ஓம் ஸ்ரீ மாத்ரே  நமஹ” என்று ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி நன்கு தரிசனம் செய்வித்தார். பின்பு சொக்க நாதன் சந்நதிக்கு அழைத்துச்சென்று அங்கும் ஆயிரம் நாமங்கள் சொல்லி அர்ச்சித்து தூப தீபம் காட்டி நன்கு தரிசனம் செய்து வைத்தார். மன்னன் பரவசத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். அந்த சிவ யோகியின் கைகளைப் பிடித்துகொண்டு நீங்கள் செய்த உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று வருந்தினான்.

ஆனால் அவரோ “ மன்னவா நேரம் ஆகிறது உடன் காஞ்சிக்கு திரும்பி செல்லுங்கள் ” என்று வழியனுப்பி வைத்து கோயிலைப் பூட்டினார். மறக்காமல் பூட்டின் மீது ரிஷப இலச்சினை பொறித்து விட்டு் மறைந்தார். காலை விடிந்ததும், அப்போது மதுரையை ஆண்டு வந்த குல பூஷணனிடம் காவலர்கள் ஓடிவந்தனர். கோட்டையின் வடக்கு வாயில் பூட்டில் மீன் இலச்சினைக்கு பதிலாக ரிஷப இலச்சினை இருப்பதாக தெரிவித்தனர்.  மன்னன் பயந்து விட்டான்.

எதிரியால் நாட்டிற்க்கு தொல்லை வந்து விட்டதோ என்று அஞ்சினான். உண்ணாமல் உறங்காமல் எதிரிகளிடம் இருந்து மதுரையை காக்க சொக்க நாதனை வேண்டி நோன்பிருந்தான். குலபூஷணன் வருந்துவதை ஈசன் விரும்பவில்லை. ஆகவே அவனது கனவில் தோன்றினார். “ அப்பனே குல பூஷணா! சோழ மன்னன் என்னைக் காண ஆவல் கொண்டான். ஆனால் உனக்கும் அவனுக்கும் பகை இருந்ததால் என் தரிசனம் கிடைக்காதே என்று வருந்தினான்.

ஆகவே அவனது கனவில் தோன்றி யாரும் இல்லாமல் தனியாக மதுரை வருமாறு பணித்தேன்.  அதன் படி நேற்று சோழன் இங்கு வந்தான்.  அவனுக்கு நானே ஒரு சித்தரின் வடிவில் தோன்றி , எம்மை தரிசனம் செய்வித்தேன். அதை உலகிற்கு உணர்த்தவே ரிஷப சின்னத்தை கோட்டையின்  பூட்டில் பொறித்தேன். வருந்த வேண்டாம்” என்று கூறி மறைந்தான்......

“இப்படி சோம சுந்தர கடவுளால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பெருமையை உடையவர் காடுவெட்டி சோழ மன்னர்.” என்று சொல்லி நிறுத்தினார் அமைச்சர்.

“ ஆஹா இவருக்காக என் தந்தை குல பூஷணரின் காலத்தில் ஒரு திருவிளையாடல் நிகழ்ந்ததை என் பாக்யமாக கருதுகிறேன். எல்லாம் அந்த சோம சுந்தரனின் கருணை” என்று புளங்காங்கிதம் அடைந்தான் ராஜேந்திர பாண்டியன். “அய்யோ கதை கேட்கும் ஆர்வத்தில் உம்மை மறந்து விட்டேன் தூதுவரே. சொல்லுங்கள். என்ன செய்தி சோழ வேந்தரிடம் இருந்து.” “ மன்னா தன் மகளை தாங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்பதே காடுவெட்டிசோழரின் விருப்பம். இதில் தங்களின் கருத்தை அறியவே என்னை இங்கு அனுப்பி உள்ளார்.”

“ஆஹா சோம சுந்தரனின் அடியவரோடு சம்மந்தம் என்றால் கசக்குமா? பூரண சம்மதம் என்று சொல்லுங்கள்” என்று அந்த தூதனிடம் கூறி பல பரிசுப் பொருட்களை அவனுக்கும் சோழனுக்கும் கொடுத்தான் ராஜேந்திர பாண்டியன். இதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்த அவனது தம்பி ராஜசிம்ம பாண்டியன் பொறாமையால் வயிரெறிந்தான். அரசுரிமையும் அண்ணனுக்கு பாண்டியனின் பாவையும் அண்ணனுக்கா என்று கோபித்தான். சதித்திட்டம் ஒன்று தீட்டி சோழனை தன் கைக்குள் போட்டுக்கொண்டான். அது மட்டும் இல்லை அண்ணனுக்கு என்று பேசி வைத்திருந்த சோழனின் மகளை தான் மணந்து கொண்டான்.

சோழனும் ராஜசிம்மன் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி அவனது கை பொம்மை ஆகிவிட்டான். “ராஜேந்திர பாண்டியனைக் கொன்றால் மட்டுமே தங்களது மகள் பாண்டிய நாட்டின் பட்டத்தரசியாக முடியும்” என்று ஆசை வார்த்தை பலவற்றைக் கூறி ராஜசிம்மன், காடுவெட்டிசோழனின் நெஞ்சில் நஞ்சை விதைத்தான். அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிய  காடுவெட்டிசோழ மன்னன் பெரும் படையைத் திரட்டினான். அதற்கு தலைமையை ராஜசிம்மனிடம் தந்தான். அந்த பெரும் படை பாண்டிய நாட்டை தாக்கி ராஜேந்திர பாண்டியனை உருத்தெரியாமல் ஆக்க புறப்பட்டது.

இந்த செய்தியை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் ராஜேந்திர பாண்டியன். சோம சுந்தரனைத் தவிர வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. பிறந்து மொழி பயின்றது முதல் சோம சுந்தரனே கதி என்று வாழ்பவன். இன்று பெரும் ஆபத்து பாண்டி நாட்டை நோக்கி வருகிறது என்று அறிந்ததும் ஓடினான் சொக்கனிடம். “ ஆலவாயா போற்றி. சிரித்தே புரமெரித்தாய் போற்றி.

நெற்றிக்கண்ணனா போற்றி. தேவர் பெருமானே போற்றி” என்று பலவாறு போற்றி ஈசனடிபணிந்தான் . அவனுக்கு அரண்மனைக்குத் திரும்ப மனமே இல்லை. அங்கு சென்றால் தன்னுடன் பிறந்தவனே தன்னைக் கொல்ல வரும் அவலம் நினைவிற்கு வரும். ஆகவே ஈசன் பாதமே கதி என்று நம்பி, கோயிலிலேயே இருந்தான். நேரம் செல்ல செல்ல சோம சுந்தரன் சந்நதியிலேயே நித்திரையில் ஆழ்ந்துவிட்டான். இது தான் சமயம் என்று காத்திருந்த பரமனும் அவனது கனவில் தோன்றினான்.

“ மகனே ராஜேந்திரா! தர்மம் என்றுமே வெல்லும். தயங்காதே வாளை உயர்த்து. போரைத் தொடங்கு. நான் உன் பக்கம் தான். ஆகவே வெற்றியும் உன் பக்கமே. கவலையை விடு ஆசிகள்” என்று கூறி மறைந்தான்.  கனவு கலைந்ததும் ராஜேந்திரன் திடுக்கிட்டு எழுந்தான். சொக்கனின் அருளை எண்ணி வியந்தான். அவன் சொன்ன வாக்கை வேத வாக்காகக் கொண்டு படையை திரட்டி போருக்கு ஆயத்தமானான்.

விடிந்தது. வஞ்சகன் ராஜசிம்மன் உக்கிரமாகப் போர் புரிந்தான். அதைராஜேந்திரனின் படை வெகு நேர்த்தியாக எதிர்கொண்டது. அது சித்திரை மாதம் வேறு. வெயிலுக்குப் பஞ்சமே இல்லை. வெயில் மண்டையை பிளந்தது. போர்க்களத்தில் கதிரவனின் வெப்பம் தாங்காமல் ராஜசிம்மனின் போர் வீரர்கள் யானைகளின் நிழலிலும், தேரின் நிழலிலும், கள்ளிச்செடியின் நிழலிலும் தங்கி வெயிலின் வாட்டம் தாங்காமல் போர் புரிந்தார்கள்.  ஆனால் ராஜேந்திரனின் படையினரிடம் களைப்பே தெரியவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. வெயிலின் கொடுமை தாங்காமல் ராஜேந்திரனின் படையினர் வருந்திய போது திடீர் என்று ஒரு சிவயோகி வந்தார்.

அவர் உடலெங்கும் திருநீறு ஜொலித்தது. சிரசில் கொன்றைப்பூ மணத்தது. கழுத்தில் ருத்திராட்சம் மினுமினுத்தது. மொத்தத்தில் அவரை பார்த்தவுடன் ராஜேந்திரனின் படையினர் அனைவரும் தங்கள் சோர்வை மறந்தனர். போதாத குறைக்கு படை வீரர்கள் வேண்டும் அளவிற்கு தண்ணீரை தங்கக் கிண்ணத்தில் வாரி வாரித்தந்தார்.  திரும்பிய இடமெல்லாம் அவரைப்போலவே ஒரு சிவயோகி நின்று கொண்டு அனைவருக்கும் நீர் தந்தார். இப்படி அந்த சிவயோகி பாண்டியப் பெரும் படையின் தாகத்தைத் தணித்தார். சிவ யோகி தந்த  தண்ணீரைப் பருகியதும் ராஜேந்திரனின் படையினர் புதுத் தெம்பைப் பெற்றனர்.

படையில் சிலர் “ ஐயா கால் மிகவும் சுடுகிறது இங்கு எங்காவது நிழல் கிடைக்குமா” என்று  என்று சிவ யோகியை வேண்டினார். அந்த சிவயோகியும் வேறு ஒரு வீரனுக்கு நீர் வார்த்துக்கொண்டே ஒரு இடத்தைக் காட்டினார். அங்கு எண்ணி நான்கே தூண்களோடு கூடிய ஒரு அதிசயப் பந்தல் இருந்தது அதில் போய் சில வீரர்கள் ஓய்வெடுத்துக்கொண்டனர்.

மேலும் ஏன் கதையை வளர்ப்பானேன்.  புதுத் தெம்பு பெற்ற ராஜேந்திரனின் படையினர் ராஜசிம்மனையும் அவன் படையையும் வென்றனர். தனக்குப்போரில் உதவிய அந்த சிவயோகி யார் என்று பாண்டியன் அறிய விழைந்தான். அப்போது ஈசன் அசிரீரியாகப் பேசினான். “ அன்பனே ராஜேந்திரா! போர்க் களத்தில் உன் வீரர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் வைத்து, தண்ணீர் தந்து தாகம் போக்கியது நானே தான். தண்ணீர் பந்தலின் கால்களாக இருந்தது நான்கு வேதங்கள். இனி எதிரிகளின் பயமின்றி இந்திரனை போல் வையம் ஆண்டு பின்பு என் பதம் வந்து அடைவாய்.

உனக்காக நான் தண்ணீர்ப் பந்தல் வைத்து அருளிய இந்த சம்பவத்தை பின்னாளில் பரஞ்சோதி முனிவர் என்ற என் பக்தன், தான் எழுதும் திருவிளையாடல் புராணத்தில் பதிவிடுவான். அவன் இந்த சம்பவத்தைக் கூறும் புராணத்தின் பகுதிக்கு தண்ணீர் பந்தல் வைத்த படலம் என்று பெயர் வைப்பான். காலம் உள்ளவரை என் அடியவர்கள் அந்த படலத்தை படித்து பயன் பெறுவார்கள்.

வாழ்க நீ வளர்க நும் தொண்டு.” என்று அமுதம் போல் அசரீரியாக பேசிமுடித்தான். அதைக் கேட்டு ராஜேந்திர பாண்டியன் பரம்பொருளின் கருணையை எண்ணி வியந்தான். நாமும் இந்த  கத்திரி வெயிலில் தவிக்கும் நம்மைக் காக்க அந்த சோம சுந்தரனை வேண்டுவோம். அவன் இந்த வெயிலில் இருந்து மட்டும் இல்லை சம்சாரம் என்னும் கத்திரி வெயிலில் இருந்தும் நம்மைக் காப்பான்.

ஜி.மகேஷ்

Related Stories: