சீத்தஞ்சேரி கிராமத்தில் சிமென்ட் குடோனாக மாறிய சமூதாக கூடம்: ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

ஊத்துக்கோட்டை: சீத்தஞ்சேரி கிராமத்தில் பயன்பாடில்லாமல் பூட்டியே கிடக்கும் சமுதாய கூடம், சிமென்ட் குடோனாக மாறியது, ஏழை, எளிய  மக்கள் பயன்பாட்டிற்கு விட கோரிக்கை   வைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் அம்மம்பாக்கம் ஊராட்சியில், ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் நெடுஞ்சாலையில்   சீத்தஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி கச்சூர், அம்மம்பாக்கம், கூனிப்பாளையம், பென்னலூர்பேட்டை, பெரிஞ்சேரி, கலவை, தேவந்தவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட 20கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.  இந்த கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராடு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஊத்துக்கோட்டை,  திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது. அவ்வாறு, நடத்த அதிக அளவில் வாடகை  பணம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, சீத்தஞ்சேரி பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1998 – 1999ம் ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.  இதனால், அப்பகுதி மக்கள் பயன்பெற்றனர். பின்னர், 10 வருடத்திற்கு பிறகு சீத்தஞ்சேரி சமுதாய கூடம்  பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், பழுதடைந்த சமுதாய கூடத்தை கடந்த 2013 – 2014 ஆண்டு ரூ. 1 லட்சத்து 74 ஆயிரம் செலவில் பழுது பார்த்தல் பணி நடைபெற்று புதுப்பிக்கப்பட்டது.அதிமுக ஆட்சியின்போது, இந்த, சமுதாய கூடத்தில் அரசின் அம்மா சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இதனால், சிறு சிறு நிகழ்ச்சிகள் நடத்த ஏழை, எளிய மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது, அந்த சமுதாய கூடத்தில் மொத்தமாக சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி சிமென்ட்  குடோனாக மாறியுள்ளது. மேலும், சிமெண்ட் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு  இந்த சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post சீத்தஞ்சேரி கிராமத்தில் சிமென்ட் குடோனாக மாறிய சமூதாக கூடம்: ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: