ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி
திருநெல்வேலி
மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது ஆழ்வார்குறிச்சி. இங்கு
ஆற்றங்கரையோரம் கோயில் கொண்டிருக்கிறார் சுடலைமாட சுவாமி. வீச்சருவா ஏந்தி
வலதுகரத்தோடும், முறுக்கு மீசை கொண்ட முகத்தோடும் நின்ற கோலத்தில்
அருளாட்சி செய்கிறார். இவ்வாலயத்தில் சிவனணைந்த பெருமாள், தவசி தம்புரான்,
பிரம்மராட்சி, வீரபத்ரகாளியம்மன், சப்த கன்னியர்கள், ஒளிமுத்து,
சின்னதம்பி ஆகிய பரிவார தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளனர்.
மூலவர்
சுடலைமாட சுவாமி என்றாலும் முதல் பூஜை சிவனணைந்த பெருமாளுக்கும் தவசி
தம்புரானுக்கும் தான். இவ்வாலயத்தில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால்
சபரிமலையில் வாவருக்கு இடம் கொடுத்த அய்யப்பனை போல, பட்டாணியருக்கு
இவ்வாலயத்தில் இடம் கொடுத்துள்ளார் சுடலை. கோயில் வளாகத்தில் பட்டாணி பாறை
என்று அழைக்கப்படும் அங்கு பட்டாணியருக்கு ரொட்டி, பேரீச்சம்பழம்,
வாழைப்பழங்கள், செண்ட் முதலான பொருட்கள் கொண்டு படையல் வைத்து பூஜை
செய்யப்படுகிறது. இங்கு சேவல் பலியும் கொடுக்கப்படுகிறது. ஆழ்வார்குறிச்சியில் சுடலை நிலையம் வாங்கியது எப்படி?அம்பாசமுத்திரம்
அருகேயுள்ள கிராமம் சுந்தரபாண்டியபுரம். விவசாய பெருமக்கள் மிகுதியாக
வாழும் இந்த பகுதியில் கந்தபுராணத்தில் முருகபெருமானின் படைதளபதிகளில்
ஒருவரான வீரபாகுவின் வம்சாவழியாக கூறப்படும் சமுதாயத்தினர் வாழ்ந்து
வருகின்றனர். இந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுவாமி கோயில் கொடை
விழாவிற்காக தீர்த்த நீர் சொரிமுத்தய்யன் கோயிலில் இருந்து எடுத்து வருவது
வழக்கம்.அதன்படி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரபாண்டியபுரத்தில்
உள்ள சுவாமி கோயிலுக்கு கொடைவிழா நடத்த நாள்குறித்து கால் நாட்டப்பட்டது.
கொடை விழாவின் போது சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு தீர்த்தம்
எடுத்துவர எட்டு நாள் விரதம் மேற்கொண்டு கோயில்
கோமரத்தாடியும்(சாமியாடுபவர்), விழாக்குழு நிர்வாகிகளும் புறப்பட்டனர்.
தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு நடை பயணமாக
சென்றனர். அங்கு அருளாட்சி புரியும் மகாலிங்கம், சொரிமுத்தய்யன்,
பூதத்தார், சுடலைமாடன், பிரம்மராட்சி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார
தெய்வங்களுக்கு பூஜைகள் செய்தனர். பின்னர் அங்கு ஆரவாரமின்றி, அமைதியாக
ஓடி வரும் தாமிரபரணியாற்றில் மலர் தூவி, வணங்கிய பின் தீர்த்தம்
எடுத்தனர். குடங்களில் எடுக்கப்பட்ட தீர்த்தத்துடன் சுந்தரபாண்டியபுரத்தை
நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். ஆழ்வார்குறிச்சி ஆற்றங்கரையோரம் வரும்
போது, கால் வலியும், பசியும் அவர்களுக்கு உருவானது. அதனால் அவர்கள்
அங்குள்ள மரசோலையில் ஓய்வு எடுக்க முடிவு செய்து, தலையில் சுமந்து வந்த
தீர்த்த குடத்தை இறக்கி வைத்தனர். ஓய்வு முடிந்த மாலை பொழுது வந்ததும்
புறப்பட தயாரானார்கள். தீர்த்த குடத்தை எடுக்க முற்படும்போது அது வராமல்
தரையோடு ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ பலம் கொண்டு முயற்சித்தும் தீர்த்த
குடத்தை எடுக்க முடியவில்லை. மந்திரங்கள் கூறியும், சுவாமியின்
நாமத்தை கூறியும் முயற்சித்து பார்த்தனர். இருப்பினும் முடியவில்லை. நேரம்
மாலை பொழுது முடியும் தருவாய் அந்த கருக்கல் நேரம் என்னசெய்வதென்று அவர்கள்
திகைத்து நின்ற போது, ஒரு அசரீரி கேட்டது, ‘‘நான் இங்கேயே இருக்க
விரும்புகிறேன். எனக்கு இங்கே ஒரு நிலையம் கொடுத்து வழிபட்டு வாருங்கள்.
உங்களை மேம்படுத்துவேன்.’’ என்று சுடலைமாடன் கூறினார். இதையடுத்து
அவர்கள் சுடலைக்கு அங்கு நிலையம் கொடுத்து பூஜை செய்து வந்தனர். ஓலை
கீற்றில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கோயிலில் முறுக்கு மீசை முகத்தோடும்,
வீச்சருவா கரத்தோடும் நின்ற கோலத்தில் சுடலையின் சிலை மட்டும் வைத்து
வழிபாடு நடத்தி வந்தனர். கோயிலை நிறுவியவர்கள் சுந்தரபாண்டியபுரத்தில்
இருந்ததால் அவர்கள் மாதத்தில் கடைசி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மட்டும்
வந்து பூஜை செய்து வழிப்பட்டு வந்தனர். நாளடைவில் அது மூன்று மாதத்திற்கு
ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என மாறி, கடைசியில் ஆண்டுக்கு ஒரு
முறை என மாறி, சுவாமிக்கு பூஜை, வழிபாடுகள் குறைந்து போனது. இதனால்
சினம் கொண்ட சுடலை தானிருப்பதை இங்குள்ளவர்கள் அறிய வேண்டும் என்று
எண்ணினார். கோயில் அருகே இருந்த அயன்புறம் கிராமத்திலுள்ள தோப்புகளுக்கு
சென்று இளநீரை பறித்து நீர் அருந்துவது, வாழை தோட்டத்தில் சென்று
வாழைத்தார்களை பறித்துக் கொள்வது முதலான செயல்களை செய்தார். குலை தள்ளிய
தென்னை மரத்தில் மறுநாள் பார்த்தால் அந்த இளநீர் குலைகள் கீழே விழுந்து
நீரின்றி போய் கிடக்குமாம். இதே போன்று பழுக்கும் நிலையில் இருக்கும்
வாழைத்தார்களில் அடுத்த நாள் காம்பு மட்டும் வாழை மரத்தில் இருக்கும்
பழத்தார் இருக்காது. இதையறிந்த தோட்டக்காரர்கள் என்ன செய்வதென்று
யோசித்துக்கொண்டிருந்தனர். இந்த வேளையில் அந்த பகுதியில் உள்ள அட்டகசம் என்கிற ஆனைகிடங்கு குட்டையிலுள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி
வந்தனர். அங்கு குளிப்பவர்களை ஒரு மீன் வந்து தனது வாலை கொண்டும், செதிலை
கொண்டும் அடித்து அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த
சேட்டைகளை செய்வது யாரென்று கண்டறிய வேண்டும் என்று எண்ணி, அருகிலுள்ள
கிராமமான பொட்டல்புதூரில் உள்ள மாந்திரீகம் தெரிந்த பட்டாணியார் என்பவரை
வரவழைத்துப்பார்த்தனர்.குதிரையில் வாளோடு வந்திறங்கிய பட்டாணியார்
அட்டகசத்தில் இறங்கி வாள் கொண்டு வீசுகிறார். அப்போது அவரது தோள்பக்கம்
ஒருவர் அடித்துவிட்டு செல்வது போல் அவருக்கு தோன்றுகிறது. உடனே அந்த நிழலை
தொடர்ந்து சென்ற பட்டாணியார் சுடலை சிலையிருக்கும் ஓலை
கீற்றுக்கொட்டகைக்குள் செல்கிறார். அங்கும் அதே நபர் அடிக்க, வேகமாக
பின்புறம் திரும்பிய பட்டாணியார், கையில் இருந்த வாள் கொண்டு அச்சத்தில்
வீசுகிறார். அது சுடலையின் சிலையில் வலது கையில் வெட்டுகிறது. வெட்டுப்பட்ட
சிலையிலிருந்து ரத்தம் வழிந்தோடுகிறது. அதைக்கண்டு அச்சம் கொண்டு
பிரம்மித்து நின்றார் பட்டாணியார். அந்த நேரம் ஆதாளி
போட்டுக்கொண்டு சுடலை வெகுண்டெழுகிறார். பயந்து போன பட்டாணியார், தனது
குதிரையில் ஏறி வேகமாக புறப்படுகிறார். ஆனால் சுடலை அவரை விடாமல் அடித்து
வதம் செய்கிறார். இறக்கும் நிலையில் பட்டாணியார், தன்னை மன்னிக்குமாறும்,
தான் தனித்துவம் பெற்று இம்மண்ணில் வாழ்ந்து விட்டேன். அதனால் என்னை
இம்மக்கள் தொழுது வணங்க வேண்டும். அவர்களுக்கு நான் அருட்புரிய வேண்டும்.
ஆகவே எனக்கு அந்த வரமளிக்க வேண்டும் என்றார். நீ விரும்பியபடியே நடக்கும்
என்று சுடலை உறுதியளித்தார். பின்னர் சினத்தை தீர்க்க சிவனணைந்த
பெருமாளும், தவசிதம்புரான் இருபெரும் முனிவர்களும் வந்து சுடலையின் கோபத்தை
தணித்தனர். இந்நிலையில் சுடலைமாடனுக்கு கோயில் கட்டிய
சுந்தரபாண்டியபுரத்து மக்கள் சிலர் ஆழ்வார்குறிச்சியில் குடியேறினர்.
அவர்கள் சுடலைக்கு வாராந்திர பூஜை கொடுத்து வணங்கி வந்தனர். அந்த சமுதாய
முன்னோடிகள் தங்கள் குல தெய்வங்களுக்கு சுடலையின் கோயிலில் நிலையம்
கொடுத்து பூஜித்து வந்தனர்.இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் கடைசி செவ்வாய்
கொடை விழா நடைபெறுகிறது. இந்தாண்டிற்கான கொடைவிழா மே.13,14,15 ஆகிய
தினங்கள் நடைபெறுகிறது. புதன் கிழமை பகலில் சின்னத்தம்பிக்கான சிறப்பு
பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது. படங்கள்: சா.சுடலை ரத்தினம்