வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா : வடம் பிடித்து தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருமயம்: திருமயம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி காப்பு கட்டப்பட்டு அன்றே முதல் திருவிழா தொடங்கிய நிலையில், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நோக்கில் பால்குடம், மயில் காவடி, பறவை காவடி, அக்னி காவடி எடுத்து வந்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு இரவும் புராண நாடகங்கள், இசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதனிடையே 9ம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று  நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்தினர். தேரானது அம்மன் கோயில் வாசலில் இருந்து புறப்பட்டு அம்மன் பிறந்த இடமாக கருதப்படும் கோயில் அருகே உள்ள வயல் பகுதியை சுற்றி வந்து பின் கோயிலை அடைந்தது. விழாவின் கடைசி நாளான இன்று(3ம் தேதி) மதியம் வடமாடு மஞ்சுவிரட்டும், அன்று இரவு காப்பு கலைதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Related Stories: