இரண்டுக்கும் காரணம் இருக்கிறது!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 120 (பகவத்கீதை உரை)

தன் ஆழ்மனதில் வடுவாகப் பதிந்திருக்கும் ஓர் எண்ணமே, அர்ஜுனனைக் குழப்பத்தில் ஆழ்த்தி யிருக்கிறது என்பதை கிருஷ்ணன் நன்கு அறிவார். அதற்காகத்தான் சுற்றி வளைத்துத் தன் போதனைகளை அவர் சொன்னாலும், அதன் இலக்கு, அர்ஜுனனைப் போர்க்களத்தில் நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. அர்ஜுனன் மனதில் வடு உண்டாக்கிய அந்தச் சம்பவம் என்ன? அஸ்தினாபுரத்தில் துரியோதனன் மாளிகையில் சூதாட்டம். சகுனியின் மாயப்பகடை பாண்டவர்களை வீழ்த்தியது. தம் உடைமைகள், சொத்துகள் எல்லாவற்றையும் பறிகொடுத்து மானம், மரியாதையையும் இழந்து கேவலப்பட்டு நின்ற பாண்டவர்களை, குரூர சந்தோஷத்துடன் மேலும்துவம்சம் செய்தான் துரியோதனன்.

ஆமாம், அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும்., ஓராண்டு அஞ்ஞாத வாசமும் மேற்கொள்ள வேண்டும்! மீண்டு வந்தார்களென்றால், அவர்கள் பணயம் வைத்துத் தோற்றவற்றை அவர்களுக்கே திருப்பித் தருவதாக துரியோதனனின் வாக்குறுதி! எல்லாம் முடிந்தன. பதின்மூன்று ஆண்டுகள் கடந்தன. ஆனால், வார்த்தை தவறிவிட்டான் துரியோதனன். தேவைப்பட்டால் போரிட்டு தன்னிடமிருந்து மீட்டுக் கொள்ளலாம் என்றும் எகத்தாளமாகச் சொன்னான். இங்கே, உபலாவியம் நகரில் பாண்டவர்கள் கிருஷ்ணனுடன் ஆலோசனையில் ஆழ்ந்தார்கள்.

குறிப்பாக தர்மன், தன் இளகிய மனதை அந்தக் கட்டத்திலும் வெளிப்படுத்தினான். போர் தேவையா? என்று கேட்டான். ‘‘ஒரு தரப்புக்கு வெற்றி என்றும் மறு தரப்புக்கு தோல்வி என்றும்தான் போரின் முடிவு அமையும். அந்த நடவடிக்கையில் ஏற்படும் உயிர்ச்சேதங்களைக் கொஞ்சம் எண்ணிப்பார், கிருஷ்ணா. வெற்றியோ, தோல்வியோ அதை அடைய எத்தனை இழப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது! நான் வேண்டுவதெல்லாம் கவுரவர்களும், பாண்டவர்களும் இணைந்து ஒருமித்து வாழும் இயல்பான, பரஸ்பரம் பாசம் இழையும் வாழ்க்கையைத்தான்’’ என்று அவன் புலம்பியபோது அனைவருமே திடுக்கிட்டார்கள்.

பீமனும், அர்ஜுனனும் கோபத்தால் கொந்தளித்தார்கள். அண்ணனை வசை பாடினார்கள். ‘‘போர் வேண்டாம், எங்கள் சொத்தை எங்களுக்கே பிச்சையாகப் போடு என்று கொஞ்சமும் நாணமின்றி யாசிக்கச் சொல்கிறீர்களா?’’ என்று அர்ஜுனன் வெகுண்டு கேட்டான்.தர்மன் தன் நிலையிலிருந்து கீழிறங்க ரொம்பவும் தயங்கினான். இறுதியாகச் சொன்னான். அவனுடைய மனநிலையை வில்லிபாரதம் இயற்றிய வில்லிப்புத்தூர் ஆழ்வார் இவ்வாறு சொல்கிறார்:

‘‘குரவரையும் கிளைஞரையும் குலத்துரிய துணைவரையும் கொன்று போர்வென்று
அரவ நெடுங்கடலாடை அவனியெலாம் தனி ஆளும் அரசு தன்னில்
கரவு உறையும் மனத்தாதை முனிக்குரைத்த மொழிப்படியே கானந்தோறும்
இரவுபகல் பலமூலம் சாகம் நுகர்ந்து உயிர்வாழ்தல் இனிது நன்றே’’

– இப்பாடலுக்கு, திரு வ.த ராமசுப்பிரமணியம் இவ்வாறு உரை எழுதுகிறார்:

‘‘துரோணர் முதலிய குருமார்களையும் (குரவர்), உறவின் முறையினரையும் (கிளைஞர்), தம்பிமார்களையும் (துணைவர் – கௌரவர்கள்) போர் செய்து வெற்றி கண்டு அலைகளை உடைய கடலை ஆடையாகக் கொண்ட இந்நிலத்தைத் தனித்து ஆட்சி புரிதலைவிட, வஞ்சனையுடைய பெரிய தந்தையாகிய திருதராஷ்டிரன் (தாதை), சஞ்சயன் மூலமாக சொல்லியவாறு காடுதோறும் இரவு பகல் திரிந்து கனிகளையும், கிழங்குகளையும் (பல மூலம்), சருகுகளையும் (சாகம்) உட்கொண்டு உயிர் வாழ்தல் நன்மையுடையது’’கபட நெஞ்சுடைய திருதராஷ்டிரன், சஞ்சய முனிவன் மூலமாக, போரைத் தவிர்க்குமாறும், தங்கள் இயல்புக்கேற்ப ஆரண்யத்தில் யாகம், தவம் இயற்றி, மென்மையான வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் பாண்டவர்களுக்குச் சொல்லி அனுப்பியதன் எதிர்வினைக் கருத்துதான் தர்மன் சொன்னது.

ஆனால், அதை யாரும் ஏற்காமல், கிருஷ்ணனை துரியோதனனிடம் தூதாக அனுப்பி, பிறகு இப்போதைய போர் வரை கொண்டு வந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், தர்மன் இவ்வாறு ‘தம் குருமார்கள், உறவினர், பங்காளிச் சகோதரர்களைப் போரில் கொலை செய்து இழந்த சொத்துகளை மீட்கத்தான் வேண்டுமா?’ என்று கேட்டுக் கொண்டது அர்ஜுனனின் ஆழ்மனதில் தைத்திருக்குமோ என்று இப்போது, குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அந்த பாதிப்பிலிருந்து இவன் மீளவில்லையோ? ஆகவேதான் அவனுடைய மனதிலிருந்து அந்தக் ‘கசடை’ நீக்க அவர் முயற்சிக்கிறார். ‘தோல் வெளுக்கச் சாம்பலுண்டு, மணி வெளுக்கச் சாணையுண்டு, அர்ஜுனன் மனம் வெளுக்க, போதனைகள் அன்றி வேறு வழியில்லை’ அவருக்கு.

“ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பச்யதி யோர்ஜுன
ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகீ பரமோ மத (6:32)’’

‘‘அர்ஜுனா, தன்னையே எல்லா வகைகளிலும் ஒப்பு நோக்கி, இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றுபோல் காண்பவனே பரமயோகி என்று கருதப்படுகிறான்’’ சமநோக்கில் எல்லாவற்றையும் அணுக வேண்டும், அவன்தான் யோகி என்கிறார் கிருஷ்ணன். நம் உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. ஆனால், நாம் அவற்றிடையே வித்தியாசம் பாராட்டுவதில்லை. ஒவ்வொன்றும் ஒரு செயலை நிறைவேற்ற பகவானால் நமக்களிக்கப்பட்டிருக்கும் கருவிகள் அவை. கால்கள் வேகமாக நடக்கும்போது, கைகளும் ஏன் முன்னும் பின்னும் வீசிக் கொள்கின்றன? உடலின் நடுநிலை பிறழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானே? இடது கால் சுண்டு விரலில் காயம் பட்டால், கண்களிலிருந்து ஏன் நீர் வருகிறது? ஏன் முகமே வாடிவிடுகிறது?

இதற்கு நம்முடைய சமநோக்குதான் காரணம். நாம் எல்லா உறுப்புகளையும் ஒன்றுபோல நேசிக்கிறோம்; அவற்றின் பயனால் வாழ்கிறோம். இது சராசரி மனிதருக்குத் தோன்றும் ‘ஞானம்’ ஆனால், தவயோகியோ உடலையும் தாண்டி, தானே உலகம், உலகமே, தான் என்ற ஆழ்ந்த கருத்து கொண்டவன். தானும், இந்த உலகும், பரந்தாமனுக்குரிய அவயவங்கள் என்றே அவன் எண்ணுகிறான். தன் மீது ஏதேனும் தாக்குதல் நேர்ந்தால், தன் கைகள் எப்படி முன்னே வந்து தடுக்க முயற்சிக்கிறதோ, அதேபோல உலகத்துக்கும் ஏதேனும் துயரம் என்றால், முழு மனதோடு அதைத் தடுக்க, தவிர்க்க அவன் முயற்சிக்கிறான்.

இத்தகைய சமநோக்கு உணர்வாலேயே அவன் பரமயோகியாகத் திகழ்கிறான். சமநோக்கில் உலகைக் காண்பது என்றால் என்ன? பிறர் தவறு செய்தால் அவனைக் கண்டிக்கிறோம்; ஆனால் நாமே அந்தத் தவறைச் செய்தால், ‘என்ன செய்ய, வேறே வழியில்லை’ என்று சொல்லி சமாதானம் அடைகிறோம். அந்த தவறுக்கான கண்டிப்பையோ, தண்டனையையோ நாம் ஏற்கத் தயாராக இல்லை. தவறுகளை மதிப்பிடுவது எளிது; ஆனால், நம்முடைய தவறுகளை நாமே ஒப்புக் கொள்வது கடினம்.

எல்லோருக்கும் தெரிந்த ஆனால் பொதுவாகப் பின்பற்ற விரும்பாத ஒரு விஷயம்: ‘குறைகளைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டால் இங்கே நிறைய பேர் அழகாய்த்தான் தெரிவார்கள்’ பிறருடைய துன்பத்தைத் தன் துன்பமாகவும், பிறர் இன்பத்தைத் தன் இன்பமாகவும் பாவிக்க வேண்டியதுதான் மனித நேயம். அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவன்தான் பரமயோகி. இந்தப் பக்குவம், ‘நான்’ மறைந்தால்தான் உண்டாகும். தனக்கு, தன்னுடையது என்ற சுயநலம்தான் அகம்பாவத்தை வளர்க்கிறது. அது, பிறர் நலத்தில் ஏற்படும் பாதிப்பைக் கண்டு மகிழ்கிறது. பிற யாரையும் புகழ்ச்சியாகப் பேச மறுக்கிறது. மூன்றாம் நபர் தனக்குத் தெரிந்த ஒருவரை அவ்வாறு பாராட்டிச் சொன்னால், உடனே மறுக்கவும், அவரைப் பற்றிய பொய்யான எதிர்மறைத் தகவல்களையும் சொல்லவும் வைக்கிறது.

உயர்வு – தாழ்வு, வளமை – வறுமை போன்ற இருநிலை மனிதர்களையும் ஒன்றேபோல பாவிப்பதுதான் யோகியின் யோக்கியதாம்சம். வெகு நேர மௌனத்துக்குப் (!) பிறகு, இப்போது அர்ஜுனன் பேச ஆரம்பித்தான்:

“யோயம் யோகஸ்த்வயா ப்ரோக்த ஸம்யேன மதுஸூதன
ஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்’’ (6:33)
“சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண ப்ரமதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்’’ (6:34)

‘‘மதுசூதனா, உன் அறிவுரை எனக்குப் புரிகிறது. ஆனால் என் மனது இப்போதும் சஞ்சலம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதனால் என்னால் யோகமும், தியானமும் பழக முடியுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. அலைபாயும் மனதை தியானத்தால் அடக்க முடியும் என்கிறாய் நீ. ஆனால் நிலைத்து நிற்காத காற்றுபோல, தியானம் பயிலும்போதே மனம் அலைக்கழிகிறதே! மனதை அடக்கி தியானம் பயில்வதா, தியானம் பயின்று மனதை அடக்குவதா என்று அடிப்படையிலேயே இரு நிலைப்பாடுகள் இருக்கின்றனவே, நான் என்ன செய்ய? என்னால் இயலுமா? இந்தப் போர் வேண்டும் என்பதற்கும் என்னிடம் காரணம் இருக்கிறது; அதேபோல வேண்டாம் என்பதற்கும் இருக்கிறது. எதை நான் எடுத்துக் கொள்வது, எதைத் தவிர்ப்பது? புரியவில்லையே கிருஷ்ணா’’

மனசு காற்றைப் போலத்தான் என்கிறான் அர்ஜுனன். ஆமாம் காற்றை வசப்படுத்த முடியாது. கைவீசி, காற்றைப் பிடித்து, உள்ளங்கைக்குள் சிறைப்படுத்திக் கொள்ள முடியுமா என்ன? அது நிற்குமா? கொஞ்சம் அடைபட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு கையை விரித்தால் அதுவும் வெளியேறி விடுகிறதே! காற்று எங்கும் நிறைந்திருக்கிறது, பரம்பொருளைப் போல. காண முடியாது, ஆனால் உணர முடியும்! சுகந்த நறுமணமோ, சகிக்க முடியாத துர்நாற்றமோ, காற்றின் இயல்பு அல்ல; அது கடந்து வரும் பாதையில் அதனுடன் சேர்ந்து கொள்ளும் புறப் பொருட்கள்தான் அந்த வாசனை. இடம் மாறினால் இரண்டுமே மறைந்துவிடும். காற்று மட்டும் இருக்கும்! மனமும் அப்படித்தான்.

தன்னுடன் வந்து இணைவதைச் சேர்த்துக் கொள்கிறது. அவரவர் பக்குவப்படி அது அந்தச் சேர்க்கையை நீடித்து வைத்துக் கொள்கிறது அல்லது விலக்கி விடுகிறது. மனசு மட்டும் இருக்கிறது. காற்று தன்னிச்சையாகச் சுற்றிச் சுழன்று வருகிறது. ஆனால் மனதோ ஐம்புலங்களின் ஈர்ப்பால் அந்தந்த உணர்வைக் கொள்கிறது.

இந்தக் கட்டத்தில் அர்ஜுனனின் சந்தேகம் நியாயமானதே. மனதை வசப்படுத்துவது சாத்தியமில்லாத சமாசாரம் என்பது நன்கு புரிகிறது. ஒரு கணம்கூட அது நிலையாக இருப்பதில்லை என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் அனுபவம். மனதின் பலவீனம் தெரிகிறது, அதன் சஞ்சலமும் புரிகிறது. தெரிந்தாலும் மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லையே! அதுவரையிலான கிருஷ்ணனின் போதனையில் தியானம் பயிலுவது அவ்வளவு கடினமான வேலை இல்லை என்றே அவன் நினைத்திருப்பான் போலிருக்கிறது. ஆனால், தியானத்தின் பிரதான நோக்கம் மனதை அடக்குவதுதான் என்பது புரிபட்டபோது அது எப்படி முடியும் என்ற கேள்வி பிறக்கிறது அவனிடமிருந்து. இறைவனை அறிய முற்படும் ஆரம்ப முயற்சியே தியானம் என்று சொல்லலாம். நாம் பரம்பொருளைத் தேடுகிறோம். பலவாறாக முயற்சிக்கிறோம். ஆனாலும் நம்மால் தரிசிக்க இயலவில்லை.

அதனாலேயே இறைவன் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா? ‘நான் முயற்சித்தேன், ஆனால் அவருடைய தரிசனம் எனக்குக் கிட்டவில்லை’ என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாமே தவிர, ‘என்னால் காண இயலாத ஒன்று இல்லவே இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்ல முடியுமா? இந்தக் குழப்பத்தில்தான் காற்றை மனசுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறான் அர்ஜுனன். அவனுடைய காலத்தில் காற்றைப் பிடித்து வைத்துக் கொள்வது இயலாததாக இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது கால்பந்தில்கூட காற்றை நிரப்பி வைத்துக் கொள்ள முடிகிறது! காற்றை உருமாற்ற முடிகிறது. அதை நீராக்க முடிகிறது, இன்னும் குளிர்வித்தால் பனிக்கட்டியாகவே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் மூன்று நிலைகள் என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. திடம், திரவம், வாயு. இம்மூன்றில், ஒரு பொருளை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றிவிட இப்போது முடியும். ஆனால், மனசு அப்படியல்ல. அலை பாயலாமே தவிர, அது இன்றைய தேதியில், மாற்று உரு கொள்ளக்கூடிய காற்றைப் போல அல்ல!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Related Stories: